(துபாயில் புதிய நகரம் அமைக்கும் பணியில் மாண்ட
எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு....)
உலக உருண்டையின்
ஒவ்வொரு மூலையும்
தமிழனின்
உழைப்பால் செழித்தது!
அட்சரேகை
தீர்க்கரேகை
மத்தியரேகை
எதுவும் அவன் கால்களைக்
கட்டிப் போடவில்லை..!
யாதும்
அவன் ஊராய் இருந்தது.
ஆனால்
உலகம் அவனை
உறவாய் கொண்டதா..?
இரத்தம் முழுதும்
உறிஞ்சப்பட்டு
ஓடுகள் மட்டும்
வெளியே
துப்பப்படுகிறது.
பர்மாவிலிருந்து
விரட்டப்பட்ட தமிழன்
காடு மலை எங்கும்
கால்நடையாகவே நடந்து
வீடு வந்து சேர்ந்தான்.
இலங்கையின்
முதல்குடியாய் இருந்த
தமிழன்
நாடற்றவனாக்கப்பட்டு
அகிலமெங்கும்
அகதியாய் திரிகிறான்...
இருண்ட கண்டத்தை
வெளிச்சமாக்கிய
தென் ஆப்பிரிக்க தமிழன்
கறுப்பர்களுக்கே ஆப்பிரிக்கா
என எழுகிற கோஷத்தால்
தெருவில் நிற்கிறான்...
ரப்பர் தோட்டங்களில்
தோல் உரிய உழைத்த
மலேசியத் தமிழன்
விசாவெல்லாம்
பிடுங்கப்பட்டு
திரும்புவதற்கும்
வழியில்லாமல்
தவிக்கிறான்...
அரபு நாட்டுத் தமிழனோ -
எண்ணெய் வயல்களெங்கும்
எலும்பு உருக
கருகித் தீய்கிறான்.
சவுதியின் நீண்ட நெடிய
பாலைவனக்களில்
இரண்டு கால் ஒட்டகமாய்
'ஷேக்குகளை'
முதுகில் சுமது
மூச்சடங்கிப் போவதும்
தமிழனே...
கல்தோன்றி
மண்தோன்றாக்
காலத்துக்கும்
முந்தோன்றிய
மூத்தக்குடி,
இந்திய மாநிலத்திற்குள்ளும்
கால்பந்தாய்
உதைபடுகிறான்...
கேரளாவிலிருந்து
துரத்தப்பட்டான்
கர்நாடகாவிலிருந்து
விரட்டப்பட்டான்.
மராட்டியத்திலிருந்து
திருப்பப்பட்டான்.!
சொந்த மண்ணாவது
சொல்லிக் கொள்ளும்படி
இருக்கிறதா...?"
தெருவுக்குத் தெரு
மலையாளி.
கடை கடையாய்
மார்வாடி.
பகுதிக்குப் பகுதி
பார்ஸிகள்.
தொழில்களெல்லாம்
குஜராத்தி.
தமிழகமே
வந்தேறிகளின்
வேட்டைக் காடாய் இருக்க
வந்தவனையெல்லாம்
வாழ வைத்துவிட்டு
வையமெங்கும் ஓடி
சோற்றுக் கலைகிறான்
தமிழன்..!
ஆட்சியதிகாரத்தில்
அயலவர்.
அலுவலகங்களில்
ஆங்கிலம்.
ஆலயங்களில்
சமஸ்கிருதம்.
அவைகளில் இசையாய்
பொழிவதும் தெலுங்கு.
எட்டுத் திக்கும்
எதிரொலிக்கிறது
இந்தி.
என்ன செய்யப்
போகிறோம் தமிழர்களே?
உனது முன்னோர்
கங்கை வென்றான்
கடாரம் கொண்டான்
என
படிப்பது இருக்கட்டும்.
நிகழ்காலமே
வருங்காலமுமனால்
தமிழன் என்றொருவன்
வாழ்ந்ததற்கு
எச்சங்கள் கூட
மிச்சமிருக்காது.
இன்னொரு சிந்துவெளி
என எடுத்துக்காட்டவும்
ஆளிருக்காது.
எழுக,
என் தாய்நாடே!
இப்போதாவது
எழுந்து நில்
என் தலைமுறையே!"
-பவா சமத்துவன்
நன்றி: 'விடுதலை' ஞாயிறுமலர்
பிப்ரவரி-1996
கருத்துகள்
உணர்வோட்டமான பா வரிகளைப் பதிவு செய்தமைக்கும்,எழுதிய
பாவலருக்கும் பாராட்டு.
மு.இளங்கோவன்
புதுச்சேரி