Wednesday, December 07, 2016

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின் ஊடகம்.

எப்போதும் பச்சை நிறத்தில் இரட்டை இலையைத் தாங்கியபடி இருக்கும் அத் தொலைக்காட்சி சோக இசையுடன், கருப்பு நிற தீமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

கட்சி, ஆட்சி எல்லாம் அவருக்கு வந்து சேர்ந்தவை. அவரில்லாமலும் அவை இயங்கி இருக்கின்றன... இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஜெயா தொலைக்காட்சி அவருக்கான படைப்பு. அவரைச் சுற்றியே இயங்கிய ஒன்று.


அதன் ஒளிபரப்பைப் பார்க்கிற போது... தன்னை வளர்த்தவரின் குரல் கேட்க ஏங்குகிற சேவகனைப் போல...
தாயை இழந்த ஒரு குழந்தையின் ஆற்றாமை நிறைந்த அரற்றலைப் போல நெஞ்சை அழுத்துகிறது.

ஜெயா டிவி ஓர் உயிராய் இருந்திருந்தால், அதற்கு என் தோளைத் தந்திருப்பேன் போல! அதனால் என்ன... அதன் ஊழியர்களுக்கு என் இரங்கல்.

ஜெயலலிதா மறைவையொட்டி...


நீங்கள் காத்த சமூகநீதியின் விளைச்சலில் என்றும் வாழ்வீர்கள்! #சமூகநீதி_காத்த_வீராங்கனை!

:( சோகமாக உணர்கிறார்.
5 டிசம்பர், 05:37 PM


மிகப்பெரிய சிக்கலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் அம்மையாரின் இழப்பு - துணிச்சலான எதிர்க்குரலின் இழப்பாக இருக்கும்!

:( கவலையாக‌ உணர்கிறார்.
5 டிசம்பர், 05:41 PM


அம்மையார் ஜெயலலிதாவின் இறப்பில் காவி கொண்டிருக்கும் ஆர்வம் தான் பாண்டேயின் அவசர அறிவிப்பு!
5 டிசம்பர், 06:06 PM


அம்மையார் ஜெயலலிதாவின் சூழலைப் பயன்படுத்திக் கொண்டும், அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களைப் பயன்படுத்திக் கொண்டும், மிரட்டி, தங்கள் அடியாளை ஆட்சியில் அமர்த்த மத்திய ஆர்.எஸ்.எஸ் பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே கூடாரத்தில் ஒரு சில ஒட்டகங்கள் நுழைந்திருக்கின்றன. அவற்றை சரியாகக் கையாளுவது அவசியம்... இல்லையேல் கட்சியே கையாடப்படும்!
5 டிசம்பர், 08:27 PM


இந்தியா முழுக்க ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசுகின்றன ஊடகங்கள். இதில் செல்லாக்காசு நடவடிக்கைக்கான எதிர்ப்பிலிருந்து சற்று ஓய்வு கொண்டிருக்கிறது மத்திய அரசு! யாகுப் மேமனுக்கு அப்துல் கலாம்... செல்லாக்காசுக்கு ஜெயலலிதாவா என்னும் சந்தேகமும் எழாமல் இல்லை.
5 டிசம்பர், 08:29 PMஇந்த கடுமையான சந்தர்ப்பத்திலும் நடுநிலையைக் கடைபிடித்தது ரெண்டே ரெண்டு டிவிக்கள் தான்.
ஏஞ்சல் டிவி
ஆசிர்வாதம் டிவி
இவனுங்க எந்த கிரகத்துல இருக்கானுங்கன்னே தெரியல...
ஸ்தோத்திரம் ஆண்டவரே...
#as_received
5 டிசம்பர், 11:13 PMசமூகநீதி காத்த வீராங்கனைக்கு வீரவணக்கம்!
6 டிசம்பர், 01:28 AMஆயிரம் ஆணைகள்... பல நூறு 110-கள்! இருக்கலாம்...
ஆனால்...
காலமெல்லாம் உங்களை நெஞ்சில் நிறுத்தப்போவது 69% இட ஒதுக்கீடு உறுதியும், சங்கராச்சாரி கைதும் தான்!
6 டிசம்பர், 04:33 AM


ஏமாற்றங்களையும், தனிமையையும் ஏராளமாய் நீங்கள் சந்தித்ததன் விளைவை பல நேரங்களில் மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். என்றாலும், அவையிரண்டும் சொல்லற்கரிய கொடுமையானவையே! அவற்றிலிருந்தும் விடுதலை பெற்றிருக்கிறீர்கள்.
#ஜெயலலிதா
6 டிசம்பர், 04:34 AM


இத்தனை நாட்களுக்குப் பிறகு அந்த முகம் இப்போது அனைவரும் பார்க்கும் படி!
6 டிசம்பர், 06:18 AM


அம்மையார் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான செய்திகள் ரகசியம் காக்கப்பட்டது குறித்து வியக்கிறோம். ஆனால், அதையெல்லாம் விட மிகச் சரியாக சில விசயங்களில் கவனமாக இருந்து, வேறெதிலும் கவனம் குவியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிறைய இழுத்துவிடாமல், சரியாக இரண்டு நாளில் அடுத்தடுத்து காட்சிகள்.
மறைந்தவரின் மீதான கவனம் சிதறி, அடுத்து யார் என்ற கேள்விகளெல்லாம் எழுந்து விடாத படியான நடவடிக்கை அதில் மிக முக்கியமானது. இடைக்கால முதலமைச்சர் என்று நியமிக்கப்பட்டிருந்தால், அடுத்து யார் வருவார் என்றே அனைத்து ஊடகங்களும் அலறியிருக்கும். அதற்கு இடம் கொடாதபடி அடுத்தடுத்து காய் நகர்த்தப்பட்டு, இரவோடிரவாக பதவியேற்பை முடித்து, முதல்வரை மாற்றிவிட்டு, முழுக் கவனமும் மறைந்தவரின் புகழ் மீதே குவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்ந்த அணுகுமுறை - பலர் கற்க வேண்டிய பாடம்.
6 டிசம்பர், 06:38 AM


அந்த தலைமைச்செயலகம் நீங்கள் அமர்ந்து ஆட்சி செய்திருக்க வேண்டிய இடம். அந்தச் சாலை நீங்கள் முதலமைச்சராக அடிக்கடி சென்று வந்திருக்க வேண்டிய சாலை.
6 டிசம்பர், 05:23 PM

Tuesday, November 29, 2016

சுருட்டப்படுகிறது சேலம் உருட்டாலை!

நட்டத்தில் இயங்குகிறதென்று சேலம் உருட்டாலை தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறது மோடி அரசால்!
இந்தியப் பணத்தையே ஏகபோகமாக தனியார்க் கும்பலுக்குத் தாரைவார்த்துவிட்டவரிடம் இதை எல்லாம் எதிர்பார்க்காமலா இருக்க முடியும்?
படம்- நன்றி: தி இந்து
பா.ஜ.க. அரசு தான் அரசுப் பங்குகளை விலக்குவதெற்கென்றே தனி அமைச்சகம் போட்டு வேலை பார்த்த அரசாயிற்றே!
எங்க ஊருல மேங்கோப்பு பிரிப்பது என்பதே தனித் தொழில்! பழைய வீடுகளை இடித்து, அதில் தேறக்கூடியதை விற்பது. அப்படித் தான் அரசின் நிறுவனங்களையெல்லாம் கூறுகட்டி விற்கத் தொடங்கினார்கள். மேங்கோப்பு பிரிக்கப்படும் வீடுகள் என்பவை, இனி பயன்படுத்த முடியாத நிலையிலிருப்பவை. வீட்டு உரிமையாளருக்கு அதன் இறுதி நிலையும் பயன்படும்.
ஆனால், இவர்கள் பேய் புகுந்த வீடு என்று பிராடு கிளப்பி, மொத்தமாக சல்லிசாக ஆட்டையைப் போடும் அயோக்கியக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி, நாட்டை நெட்டுக் குத்தலாக்கப்போகும் இந்த பொருளாதாரப் புலிகளும், தனியாருக்கு எல்லாவற்றையும் விற்பதற்கு போட்டிபோடும் இந்த அரசுகளும், அடிப்படையான நம் கேள்விக்கு பதில் சொல்வதே இல்லை.
நட்டத்தில் இயங்குகிற நிறுவனத்தை, அரசுக்கு உதவும் நோக்கிலா தனியார் வாங்கப் போகிறார்கள். இல்லை, நிச்சயம் அதில் லாபம் பார்க்க முடியும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். நட்டத்தில் இயங்குவதாக அரசே கணக்குக் காட்டுவதும், நிர்வாகக் கோளாறுகளை வளர்த்துவிடுவதும், நிறுவனத்தின் திறனைக் குறைப்பதும், அதைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான காரணங்களைக் கொடுக்கும் என்பது தான் அதன் பின்னுள்ள ரகசியம்.
தனியாரால் லாபத்தில் நடத்த முடியும் என்றால், அரசின் கையாலாகத் தனம் தானே அதனை அரசு சாதிக்க முடியாமல் தடுக்கிறது.
ரயில்வே துறை நட்டத்தில் இயங்குகிறது என்றே தான் காலம்காலமாக சொல்லிவந்தார்கள். ஆனால், அவாள்களால் திறமையற்றவர் என்று கேலி செய்யப்பட்டுவந்த லாலு பிரசாத் இரயில்வே அமைச்சரானதும், கோடி கோடியாக லாபம் காட்டினார். அப்போது கோமாதாவின் பின்புறத்தில் கொண்டுபோய் முகத்தை வைத்துக் கொண்டார்கள் அரசு நிறுவனங்களைக் குறி வைத்தோர்.
அடுக்கடுக்காக அரசு நிறுவனங்கள் தனியாருக்கு வாரிக் கொடுக்கப்படுகின்றன. தொழிலாளர் நலன், சமூகநீதி, நாட்டின் பொருளாதாரம், உள்ளூர் வளம் அத்தனையும் பறிக்கப்படுகிறது என்று பொருள் அதற்கு!
முதல் போதவில்லை என்பதற்காக பங்குகளை விற்பதென்றால், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கே பங்குகளை, போனசாகவோ, உரிய விலைக்கோ கொடுக்கலாம். தொழிலாளிகள் பங்காளிகளாகி, தங்களின் நிறுவனம் என்னும் கூடுதல் அக்கறையோடு உழைப்பார்களே என்று முன்பே திராவிடர் கழகத் தலைவர் கி,வீரமணி அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். நடக்குமா?
அரசுகளின் நோக்கம் நிறுவனங்களைக் காப்பதா? தங்களைப் பதவியில் உட்கார வைத்திருக்கும் முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதாயிற்றே!
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு இப்படிக் காரணம் சொன்னவர்கள். முன்பு லாபத்த்தில் இயங்கிக் கொண்டிருந்த அரசு நிறுவனங்களை விற்ற போது என்ன சொன்னார்கள் தெரியுமா?
'லாபத்தில் செயல்படும் நிறுவனத்தை வாங்காமல் நட்டத்தில் செயல்படும் நிறுவனத்தையா முதலாளிகள் வாங்குவார்கள்?' வக்கனை வலித்தார்கள்.
'கூறு ரெண்டு ரூபாய்' என்று பங்குபோட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள் நாட்டை! சே...சே.. மோடி இந்த நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கிறார் என்கிறான் மடக் குடிமகன், உருவப்பட்ட தன் டவுசரை மறந்தபடி!

Related Posts with Thumbnails