"தமிழைக் காட்டுமிராண்டி மொழி" என்றார் பெரியார் என்று 'சோ' போன்ற சவுண்டிகளும், அதைக் கேட்டுக் கொண்டு நம்மவர்களிலேயே சில அரைவேக்காடுகளும் பெரியார் மீது சேற்றை வாரி இறைக்கத் தலைப்படுவார்கள்.
ஆமாம். பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி காலத்து மொழி என்றுதான் கூறினார். உண்மைதானே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியிருந்தால் அது காட்டுமிராண்டி காலத்து மொழியாகத் தானே இருக்க முடியும். ஆனால், அதுதான் பெரியார் அப்படிச் சொல்லக் காரணமா? இவ்வாண்டு விடுதலை தந்தை பெரியார் 129-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரில் விளக்கியிருக்கிறாரே முனைவர் தமிழண்ணல். அவரைவிட யாரே சொல்ல முடியும்? (விரைவில் அந்தக் கட்டுரையைப் பதிவிடுகிறேன் அல்லது சுட்டி தருகிறேன்.)
தமிழ்மக்கள் மீதும், தமிழ் மீதும் அக்கறை கொண்ட தந்தை பெரியார் ஒருவரால்தான் அப்படிச் சொல்ல முடியும். அவருக்கு மட்டுமே அதற்கான தகுதியும் உரிமையும் உண்டு. ஏனெனில் துவண்டு கிடந்த தமிழுணர்வையும், தூங்கிக் கிடந்த திருக்குறளையும் மாநாடுகள் போட்டு தூக்கி நிறுத்தியவர் தந்தை பெரியார். மறுக்க முடியுமா?
காலத்துக்கு ஏற்றவாறு மாற்றம் அடையும் எதுவொன்றும்தான் நிலைத்து நிற்கமுடியும். மக்களின் பயன்பாட்டுக்கு உரிய மொழியாக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் உள்ள மொழியாக தமிழ் இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் வளர்ச்சிக்கும், மொழியின் வளர்ச்சிக்குமே வாய்ப்பிருக்கும்.
அப்படியில்லாமல், தமிழே தமிழனின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்ற நிலை வருமேயாயின் அப்போது அந்தத் தமிழையும் தூக்கி எறியும்படிக் கூறும் துணிச்சலும் தந்தை பெரியாருக்கு மட்டுமே உண்டு. வெறுமனே 2000 வருமாக இருக்கும் தமிழை படித்தவனுக்கு சம்பளம் ரூ.2000/-; 25 வருசத்துக்கு முன்னால் வந்த (கணினி) பொட்டியை படித்தவனுக்கு 2 லட்சம் சம்பளம் என்று புலம்புவது சரியாகுமா?
ஆனால் அப்படி தமிழை புறக்கணிக்கும் நிலை வரக்கூடாது என்பது தானே அவரது அவா. அதன் காரணமாகத் தான் காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களைக் கண்டு வந்த தமிழுக்கு தெய்வீக ஒப்பனை போடப்பட்டு பின் தங்கிப் போய்விடாமல் பாதுகாக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைதான் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்.
தனது அனைத்து இதழ்களிலும் அதை பின்பற்றியதோடு, இன்னும் எவ்வளவு தூரம் இதில் சிந்தனையை செலுத்தலாம் என்னும் அளவுக்கு ஆழமாக யோசித்தவர் பெரியார். ஒலிக் குறியீடுகளைத் தவிர வரிவடிவம் அவ்வப்போது மாறியே வந்திருக்கிறது என்ற உண்மையை முன்னிறுத்தி அவர் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளை அவரது நூற்றாண்டு விழாவையொட்டி அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசு ஆணையிட்டு நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
பின்னர் அதை மலேசியா, சிஙப்பூர் உள்ளிட்ட தமிழ்மக்கள் அதிகம் வாழும் நாடுகளும் எற்றுக் கொண்டது என்பதும், அவை பெரியார் எழுத்துக்கள் என்றே அழைக்கப்பட்டு சிறப்புற்றன என்பது வரலாறு.
அதன் தொடர்ச்சியாக நிகழ வேண்டிய பணிகளை முடுக்கிவிட எண்ணிய தமிழர்தலைவர் அய்யா வீரமணி அவர்கள், முன்னாள் துணைவேந்தரும், தமிழாய்ந்த அறிஞரான முனைவர் வா.சே. குழந்தைசாமி போன்ற தமிழறிஞர்களை ஊக்குவித்துக் குழு அமைத்தார். அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் விடுதலையில் பழைய எழுத்து முறையும், புதிய சீர்திருத்த எழுத்துகளும் இப்போது தனியாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
அப்படி மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாத எழுத்துச் சீர்திருத்தம் பற்றி விரிவான கட்டுரை ஒன்ரை நான் எழுதுவதைவிட, அய்யா முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் எழுதிய கட்டுரையின் திரை வடிவத்தைப் பதிவிடுவது இன்னும் பயனுடையதாகும். கணியத் தமிழின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த ஆவணப் படத்தினை என் தளம் வழியாக வெளிக்கொண்டுவருவதில் பெரும் மகிழ்வும் பெருமிதமும், மனநிறைவும் அடைகிறேன்..
என் பதிவில் படம் தெரியாதவர்கள் இங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம்.
கருத்துகள்