முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாகனத்தில் மாட்டு - சாணி மேட்டு!

பழைய புல்லட்டுகள், வண்டிகளின் மிடுக்கோடு அழகு சேர்க்கும் அணிகலன் இன்னொன்றும் உண்டு.

டுபு டுபு வென சைலன்சரிலிருந்து வரும் புகையைத் தடுத்து ஒலியைப் பெருக்கியபடி ஆடிவரும்..

மேடுபள்ளங்களைக் கடக்கும்போது சாலையை உரசிய படி கூட்டிச் செல்லும்..

அடுத்த தெருவில் நுழையும்போதே விரைந்து சென்று கதவைத் திறக்க வைக்கும் வண்ணம் ஒலிக்கும் எங்கள் இருசக்கர வாகனத்தின் ஹார்ன்.
முன்புறம் படபடவென துடிக்கும் திராவிடர் கழகக் கொடியுடன் வரும் எம் தந்தையின் "டிசிஏ - ங உ எ எ (TCA 3277)" எண்ணிடப்பட்ட டி.விஎஸ். சாம்ப்.. பள்ளிக்காலத் தோழர்கள் மத்தியில் ரொம்பவே பிரசித்தம்.

என்னையும் தங்கையயும் அழைத்துச் செல்ல எங்கள் தந்தை பள்ளியில் நுழைந்தால் அடுத்த 5 நிமிடத்தில் மணியடிக்கப்போகிறது என்று அர்த்தம்.
எங்கள் வண்டிச் சத்தம் என் தோழர்களுக்கும் பழக்கப்பட்டுப் போன ஒன்று.

சரியாக பள்ளி முடிந்து வண்டியின் பின்புறத்தில் எங்கள் புத்தக மூட்டையை வைத்துவிட்டு ஏறி அமர்ந்தால் எஸ்.எம்.எஸ். பள்ளியிலிருந்து கிளம்பும் வாகனம் மகர்நோன்புப் பொட்டல் வழியாகவோ, அல்லது ரயில்வே சாலை வழியாகவோ வீட்டுக்கு விரையும்.

பின்னால் தொடரும் மாணவர்களுக்கு தூரத்திற்கு சென்றாலும் எங்கள் வண்ட் தெரிய ஒரு அடையாளம் உண்டு.
வாகனத்தின் பின்னால் 'mudguard'க்குக் கீழ் தொங்கும் ரப்பர் ஓலையில் மஞ்சள் பின்புலத்தில் பளீரென வரையப்பட்டிருக்கும் திராவிடர்கழகக் கொடி!

அந்த ரப்பர் ஓலைக்குப் பெயர்தான் 'சாணிமேட்'.

பின்னாளில் மிதிவண்டி ஓட்டிக் கொண்டு பள்ளி சென்ற பன்னிரண்டாம் வகுப்பிலும், கல்லூரியிலும் என் வண்டிக்கு நான் விரும்பி உருவாக்கிக் கொண்ட அடையாளம் அதே திராவிடர் கழகக் கொடி வரையப்பட்ட ரப்பர் ஓலைதான்!
ஒவ்வொரு முறை முதல் நாள் கல்லூரியோ, பள்ளியோ செல்லும்முன் நான் செய்யும் முதல் பணி காரைக்குடி ஆர்ட் ஹவுஸ் வேணுகோபால் மாமாவிடம் சென்று புதிதாக வரைந்துகொள்வதுதான். நித்யகல்யாணி, SVR, ஜலால் இப்படி ஏதாவதொரு மிதிவண்டி நிலையத்தின் பெயரைத்தாங்கியபடி இருக்கும் சாணி மேட்டைத் திருப்பி அதன் பின்புறம்தான் வரைவோம்.

"கடவுளை மற, மனிதனை நினை" என்று எழுதப்பட்ட 'Bar Cover'-ம், 'புரட்சிக்காரன்' பட விளம்பரமும், 'தமிழீழத் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க!' என்று எழுதப்பட்ட 'Chain Cover'-ம் என் வண்டியின் அடையாளங்களாக இருப்பினும் பின்னால் பளிச்சென இருக்கும் கொடி வரைந்த மேட் தான் முக்கிய அடையாளம்!

இப்படி எனக்கு மிகவும் பிடித்த அந்த சாணி மேட்டிற்கு பிரச்சாரத்தைத் தவிர இன்னொரு முக்கியப் பணியும் உண்டு.

முன் சக்கரத்தில் இருக்கும் ரப்பர் ஓலை (மேட்), வண்டி ஓட்டுபவர் மீது சாணியோ, சகதியோ தெறிக்காமல் பாதுகாக்கிறது என்றால், பின்னால் இருக்கும் ஓலை - தொடர்ந்து வருபவரின் மீது சக்கரச் சுழற்சியினால் சகதி தெறிக்காமல் பாதுகாக்கிறது. இது குறைந்தபட்ச பொதுநலம்.

ஆனால், இன்றைக்கிருக்கும் வாகனங்களில் அத்தகைய சாணி மேட்டிற்கான வசதி இருக்கிறதா, அல்லது நாம் பொருத்தியிருக்கிறோமா என்று பாருங்கள். புது வடிவம், மாடல் என்ற பெயரில் பெயருக்கு ரெண்டு இன்ச் மடக்கிவிடப்பட்ட பிளாஸ்டிக் அட்டை தானிருக்கிறது.
பின்னால் வருபவர் எப்படி இருந்தால் என்ன? என்ன ஆனால் என்ன? என்ற அக்கறையின்மை தான் நமக்கு மிஞ்சியிருக்கிறது.

அதுவும் மழைக் காலத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரை வாரியடிக்கும்போதும் கொஞ்சமும் நாம் கவனிப்பதில்லை. மட்கார்ட் போட்டிருக்கிறோமே என்றெல்லாம் சொல்லித் தப்பிக்க முடியாது. மட்கார்டு போடுவது சுயநலம்; வண்டியின் இஞ்சினுக்குள்ளோ, நம்மேலோ தண்ணீர் படக்கூடது என்ற சுயநலம். சாணிமேட் போடுவது குறைந்தபட்ச பொதுநலம்.

ஹெல்மெட் போட வேண்டும் என்று சட்டம் போட்டதுபோல், சாணிமேட்டுக்கெல்லாம் சட்டம் போட முடியாது. நாம் தான் மாற்றிக் கொள்ள வேண்டும். வாங்கி மாட்டிக் கொள்ள வேண்டும்.
அதில் நித்யகல்யாணி பெயர் பொறித்தபடி இருக்கட்டுமா அல்லது பிடித்த படம் வரைந்துகொள்கிறீர்களா என்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…