'நான் தெரிஞ்சிக்கிட்டது இதைத்தான்'- புலவர் கலிய பெருமாள்
- மணா [நன்றி: புதிய பார்வை- ஜூன் 1-15,2007]
- மணா [நன்றி: புதிய பார்வை- ஜூன் 1-15,2007]
உடல்நலக் குறைவுடனிருந்த புலவர் கலிய பெருமாள் மறைந்திருக்கிறார்.
மயிலத்திலும் திருவையாற்றிலும் புலவர் படிப்பு படித்ததால் 'புலவர்' இவருடன் ஒட்டிவிட்டது. பெண்ணாடத்தில் வார இதழ் ஒன்றிற்காக அவரைப் பேட்டி காணப் போனபோது மதுரை கண் மருத்துவமனைக்குச் சென்று சோதித்துவிட்டு அப்போது தான் திரும்பியிருந்தார். தன்னைப் பற்றிசொல்வதில் உற்சாகமற்ற மனநிலை இருந்தது.
தயக்கம் பேச்சினூடே தலைகாட்டியது.
ஆந்திராவில் நடந்த நக்ஸல்பாரிப் போராட்டம்தான் இவருக்கு வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. தலைமறைவு வாழ்க்கை துவங்கி தமிழகத்தில் கொரில்லாக் குழுக்கள் உருவானபோது புலவருடன் இணைந்து செயல்பட்டவர் பிற்காலத்தில் பொன்பரப்பி தாக்குதலில் கொல்லப்பட்டவரான தமிழரசன்.
'அழித்தொழிப்பு' இயக்கமாக உடுமலைப்பேட்டையில் துவங்கி தஞ்சை, தர்மபுரி மாவட்டங்கள் வரை தொடர்ந்தது. 1970 பிப்ரவரி மாதத்தில் பெரும் திட்டம் தயாரனது. பெண்ணாடத்தில் புலவரின் தோப்பு. அண்ணாமலைப் பல்கலலக் கழகத்திலிருந்து சில மாணவர்கள் வந்திருந்தார்கள். தோப்பில் உட்கார்ந்து வெடிமருந்து தயார் செய்துகோண்டிருந்தபோது எதோ சிக்கல். புகைச்சலலகி வெடிமருந்து வெடித்துவிட்டது. செய்து கொண்டிருந்தவர்கள் சிதறிப் போனார்கள். இரண்டு உயிர்கள் அதே இடத்தில் பலியாயின. அங்கிருந்த புலவர் தூரப்போய் விழுந்திருக்கிறார். அதிலிருந்து போலீஸ் வேட்டை துவங்கிவிட்டது. பிறகு கைதானபோது இவருக்கு விதிக்கப்பட்டது தூக்கு தண்டனன.
அப்பீல் பண்ணுவதற்கு இவருக்கு மனமில்லாமல் குடும்பத்தார் வற்புறுத்தலின் பேரில் அப்பீல் பண்ணப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்ததை, வேறு யாருடைய வாழ்க்கையிலோ நடந்த மாதிரியான சலிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார் புலவர். 87-ல் தமிழரசன் இறந்த சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தி அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டதாகச் சொன்னார் மென்மையான குரலில்.
"போராடுறவங்க யாராக இருந்தாலும் அவங்களுக்கு நடைமுறை யதார்த்தம் தெரியணும். பொருளாதார அடித்தளம் இருக்கணும். முக்கியமாக ஜனங்களோட ஒத்துழைப்பு இருக்கணும். அவங்களோட ஒத்துழைப்பில்லாம எந்தப் போராட்டமும் வெற்றி பெறமுடியாது. இத்தனை வருஷ அனுபவத்தில் நான் தெரிஞ்சுகிட்டது இதைத்தான்" என்று வெள்ளைத்தாடி அடர்ந்த முகத்துடன் புலவர் சொல்லிக்கொண்டு போனது ஏதோ நேற்றுச் சொன்னதைப் போலிருக்கிறது.
கருத்துகள்
உள் குத்து?! :)