தந்தை பெரியாரின் வரலாறு- ஒரு நூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியலின் வரலாறு என்றால் அது சரியான மதிப்பீடே! மக்களோடு கலந்து, மக்களுக்காகவே வாழ்ந்த அந்த மகத்தான தலைவரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை எப்படி ஒரு படத்துக்குள் அடக்க முடியாதோ, அதே போல ஒரே ஒரு நூலுக்குள்ளும் அடக்க முடியாது! தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்பது பல்வேறு கால கட்டங்களைக் கொண்டது!
சிறுவனாக, இளைஞராக, வணிகராக, காங்கிரஸ் பிரமுகராக, வைக்கம் வீரராக, சுயமரியாதைச் சூரியனாக, இந்தியாவுக்கு பொதுவுடைமையை அறிமுகம் செய்தவராக, இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராக என்று தந்தை பெரியாரின்(1939 வரை) பல்வேறு பரிணாமங்களை 'தமிழர் தலைவர்' நூலில் 'சாமி.சிதம்பரனார்' வடித்துக் காட்டினார். தந்தை பெரியாராலேயே சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்ட பெருமை வாய்ந்தது அந்நூல்! (அதன் பிந்தைய நிகழ்ச்சிகள் வரலாற்றுக் குறிப்புகளாக 'தமிழர் தலைவர்' நூலின் பிற்சேர்க்கையாகவும், Biographical Sketch என்று குறுநூலாக தமிழ் மற்றும் இங்கிலீஷ்-ல் வெளியிடப்பட்டிருக்கிறது.)
ஆனால் அதனினும் எழுச்சிக் காலமான 1940 தொடங்கி அய்யாவின் இறுதிக் காலம் வரையிலான 34 ஆண்டுக்கால வரலாறு முழுமையாகப் பதிவு செய்யப்படாமலேயே இருந்துவந்தது. அய்யாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின்போது கவிஞர் கருணானந்தம் அவர்கள் "தந்தை பெரியார்- வாழ்க்கை வரலாறு" என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
அதன் பின் அய்யாவோடு பழகியவர்கள்... பார்த்தவர்கள்... என நிறைய பேர் தங்களுக்கும் அய்யாவுக்குமான தொடர்புகளைப் பற்றி எழுதியும், பேசியும் இருக்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட அய்யாவின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டும், எவையும் முழுமையானதாக இல்லை.
அதையெல்லாம்விட, வரலாற்று நூலுக்குத் தேவையான அதிகாரப்பூர்வமான தகவல்களும், அவைக்கு வராத சில நெருக்கமான தகவல்களும், அதுவரை வெளிவராத புதிய செய்திகளுமாக அமையக்கூடிய நூல் ஒன்று இத்தனைக் காலம் வராதது பெரும் இழப்பே! இதோ, அந்த இழப்பையும் ஈடுகட்ட வருகிறது... 'தமிழர் தலைவர்' நூலின் தொடர்ச்சியாக அய்யா பெரியாரின் 1940 முதல் 1949 -ஆம் ஆண்டுகளுக்கிடையிலான பத்து ஆண்டுகளின் வாழ்க்கை வரலாற்றை விளக்கமாக எடுத்துரைக்கும் "உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு" (2-ஆம் பாகம்).
இன்றைய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதி, 2007 ஜூன் 21- அன்று திருவல்லிக்கேணியில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் கலைஞரின் கரங்களால் வெளியிடப்பட இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வாழ்க்கை வரலாற்றின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவர இருக்கின்றன. பெரியாரின் வாழ்க்கையை இன்றைய இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் 'பெரியார்' படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து இப்பணி ஒரு வரலாற்றுப் பணியாகும். ஆர்வலர்களும், தமிழினப் பெருமக்களும் படித்துப் பரப்பவேண்டியது நம் கடமையாகும்!
கருத்துகள்