துரோகி முத்திரை குத்துவதற்கு இப்போது ஆதாரங்களையெல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை.
கலைஞரைப் பாராட்டி, வாழ்த்தி யார் பேசினாலும், அவர்களுக்கெல்லாம் ’துரோகி’ முத்திரை குத்தி குதூகலிப்பதுதான் தமிழ் தேசியத்தை வளர்க்கும் பணி என்றும், ஈழத்திற்கு செய்யும் பணி என்றும் கருதிக் கொண்டு இணையக் களங்களில் எண்ணற்றோர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கலைஞரை கரிகால் வளவனோடு ஒப்பிட்டு ’திராவிட ஞாயிறு’* பாவாணர் அவர்கள் பேசியிருப்பதைப் படித்ததும், அவருக்கும் துரோகி முத்திரை குத்திவிடுவார்களோ என்று பயமாய் இருக்கிறது.
திரவிட மொழி நூல் ஞாயிறு பாவாணர் பார்வையில் கலைஞர்
”கரிகால் வளவனே திரும்ப நம் கருணாநிதியாராகப் பிறந்தானோ என்றுகூட நாம் நம்பும்படியாக இருக்கின்றது. அந்தக் கரிகால் வளவனும் காவிரி நாட்டிலேதான் பிறந்தான். இவரும் அந்த நாட்டிலேதான். அந்தப் பூம்புகாரை அவன் வளப்படுத்தினான். இவரும் இப்போது அதைப் புதுப்பித்து வருகின்றார்.... அவன் இளமையிலே பகைவராலே இடர்ப்பட்டுத் துன்பப்பட்டு அதிலிருந்து தப்பினான். அப்படியே இவரும் போன பொதுத் தேர்தலிலே (1971) எப்படியோ பகைவரிடத்தில் அகப்பட்டுத் தப்பினார்... அந்தக் காலத்திலேயே அவரைப் பற்றி ஏதாவது ஒரு புகைப்படமோ, பூச்சுப் படமோ இருந்திருந்தால், இவர் முகச்சாடை கூட ஒத்துப் போகுமோ என்றுகூட நாம் நினைக்கும்படியாக இருக்கிறது.”
- பாவாணர் உரைகள் - பக்கம். 82
நன்றி: கருஞ்சட்டைத் தமிழர் (அக்டோபர் 1-15, 2010)
ஏப்ரல் முட்டாள் முத்திரையைக் கையில் வைத்திருப்பவன் யார் முதுகில் குத்தினாலும், அவரெல்லாம் முட்டாளாகி விடுவார் என்பதுபோல் ஆகிவிட்டது ’துரோகி’ பட்டமும். முத்திரையை வைத்திருப்பவன், தன் முதுகில் புதிதாய் ஒருவர் குத்திவிட்டாலும், தானும் துரோகியாகிவிடுவோம் என்பது புரியாமல் திரிவது போல் இருக்கிறது.
* திராவிட ஞாயிறு பாவாணர் :
இதென்ன இத்தனை நாளும் மொழிஞாயிறு என்று தானே கேள்விப்பட்டு வந்தோம்; புதிதாய் என்ன ’திராவிட ஞாயிறு’ என்று சிலர் எண்ணக் கூடும். உண்மையில் நடந்தது என்ன? என்பதை பேராசிரியர் சுப.வீ அவர்கள் ’கருஞ்சட்டைத் தமிழர்’ அக்டோபர் 1-15, 2010 எழுதியிருக்கிறார்கள். அதனையும் அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன்.
மறைக்கப்படும் திராவிடம்
தனித்தமிழியக்க முன்னோடிகளில் ஒருவரும், தன்னிகரற்ற தமிழ் அறிஞருமான ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களை மொழி ஞாயிறு என அழைக்கின்றோம்.
அறிஞர் பாவாணருக்கு ‘ மொழிஞாயிறு பட்டம் ’, எந்த ஆண்டு, எந்த அமைப்பால் வழங்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முயன்றபோது, புதிய செய்தி ஒன்று கிடைத்தது.
1957 ஆம் ஆண்டு சேலம் தமிழ்ப் பேரவையினர் பாராட்டு விழா நடத்திப் பாவாணருக்கும், பொன்னம்பலனாருக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இருவருக்குமான விருதுகள் மற்றும் பொற்கிழிகளைத் தந்தை பெரியார் வழங்கியுள்ளார். அவ்விழாவில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரும் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கியுள்ளார். பொன்னம்பலனாருக்கு அன்று வழங்கப்பட்ட பட்டம்தான் ‘தமிழ் மறவர்’ என்பது. இச்செய்திகள் அனைத்தும், பாவாணரின் இளைய மகனார் மணி என்ற தே.மணிமன்றவாணன் எழுதியுள்ள, ‘பாவாணர் நினைவலைகள்’ (பக்.197) என்னும் நூலில் உள்ளன.
இவற்றுள் ஒரு செய்தி முதன்மையானது. அறிஞர் பாவாணருக்கு அன்று வழங்கப்பட்ட பட்டம் ‘திரவிட மொழிநூல் ஞாயிறு’ என்பதுதானே அன்றி ‘மொழி ஞாயிறு’ என்பதன்று. சுருக்கம் கருதி ‘திரவிட’ என்னும் சொல் நீக்கப்பட்டுள்ளதாக எண்ணிவிடக் கூடாது. ‘மூதறிஞர் ராஜாஜி நகர்’ என்பது, எம்.ஆர்.நகர் என்று சுருங்குவதில்லை. ஆனால் தியாகராயர் நகர் என்பது ‘தி.நகர்’ என்றும், கலைஞர் கருணாநிதி நகர் என்பது ‘கே.கே.நகர்’ என்றும் சுருங்கிவிடுகின்றது.
‘திராவிட’ மறைப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இனி நாம் பாவாணரைக் குறிப்பிடும்போதெல்லாம் ‘திரவிட மொழிநூல் ஞாயிறு’ என்றே எழுதுவோம். சுருக்கம் தேவைப்படின் ‘திராவிட ஞாயிறு ’ என்போம்.
(அன்று வழங்கப்பட்ட விருதின் படத்தையும், எடுக்கப்பட்ட ஒளிப்படத்தையும் கொடுத்துதவிய திரு. மணி அவர்களுக்கு நன்றி!)
நன்றி: கீற்று
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ‘மறைக்கப்படும் திராவிடம்’ என்ற இந்தக் கட்டுரையை வெளியிட்ட கீற்று, கலைஞரைப் பற்றி பாவாணரின் பேச்சு அடங்கிய பெட்டிச் செய்தியை வெளியிடவில்லை. சரி, என் பயம் பலிக்குமா? இல்லையா? என்பதை இன்னும் சில நாட்களில் இணைய தளங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
கருத்துகள்
ஒவ்வொரு இரண்டகங்களின் பின்னரும் தன்னலக் கூத்துக்களின் பின்னருங் கூட, ஏனையோரை நோக்குங்கால் இவரே பரவாயில்லை என்று தான் பலரும் இருந்தோம். செய்த பாவங்களுக்கு நம்பியிருந்த இனக்கூட்டத்துக்கு கொடுத்த துரோகங்களுக்கும் தம் இறுதிக் காலத்திலேனும் கொஞ்சமாவது நல்லது பண்ணிச் செல்லும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் பாருங்கள் இவர் திருந்துவதாக இல்லை. அனைத்துக்கும் முத்தாய்ப்பாக ஈழம், தன்னல அரசியல், ஊழல் என பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம்.ஒரு மொத்த இனமே பூண்டோடு அழிக்கப் பட்டுள்ளது, பாவாணர் இன்றிருந்தால் என்ன எழுதியிருப்பார் சொல்லுங்கள்?
//
இதில் முக்கால்வாசி பேருக்கும் மேலே இதே கருணாநிதியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடியவர்கள் தாம் என்பது பிரின்சுக்கு தெரியுமல்லவா?
உங்களின் முதல் பத்தியை படித்தவுடன் நான் கூட பாவாணர் நேற்றுதான் கருணாநிதியை பாராட்டி பேசினாரோ என்று நினைத்துவிட்டேன் :-)
thagavalukku nandri annaa