சிப்பிகள் பொறுக்க வந்தோம்
சிதைகள் தந்தாய் - எங்கள்
கடல் தமிழர் வாழ்க்கை இன்று
புதை குழி மண்ணாய்!
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் கிடைப்பது கடினம்;
கடல்நீர் நாட்டுள் பயணம் வந்தது
வடிந்தது எங்கள் உதிரம்!
நாட்டுக்குள் பூகம்பம் வந்தது
மக்கள் கடற்கரை சென்றனர்.
கடலுக்குள் பூகம்பம் வந்தது
கடற்கரையே காணாமல் போனது!
உயிரைப் பணயம் வைத்தோர்
உயிருடன் வந்தனர் - தங்கள்
உறவுகள் காவு போனதைக்
கண்டதும் வெந்தனர்!
கடல் என்னும் கந்துவட்டிக்காரன்
பணயப் பொருளை மாற்றி கைக்கொண்டான்!
தடைச் சட்டம் போட ஆளில்லை - கடல்
தடைக்கெல்லாம் தயங்குகிற ஆளில்லை!
இது
மனித குலத்தின் மீது
எல்லை தாண்டிய பயங்கரவாதம்!
இயற்கை
என்ன செய்யும் பாவம்?
ஆழ்துளை போட்டான்
அணுகுண்டு வீசினான்
கடற்கரைக் காடுகள் அழித்து
களியாட்ட விடுதிகள் கட்டினான்
நீரை உறிஞ்சினான்
நிலத்தடியில் வறட்சி..
கோலா பாட்டில் குளிர்ச்சி!
சுற்றுச்சூழலின்
சூத்திரம் மாற்றினான்..
தற்கொலைத் தூதனைத்
தானே தேடினான்!
தன்னை கவனிக்காத
மனிதனைத்
தானும் கவனிக்கவில்லை
இயற்கை!
பயங்கரவாதி இயற்கையா?
இல்லை மனிதன்!
கொலை
செய்தவனை விட
தூண்டியவனுக்கே
தண்டனை அதிகம்!
பெற்றுவிட்டோம்!
பழித்தது போதும்
இயற்கையை!
அது சுவற்றிலடித்த
பந்து!
நன்மையோ
தீமையோ
செய்ததே விளையும்
தீமை தொடர்ந்தால்
மனித இனம் அழியும்
இது
இயற்கையின் விதி!
அறிவியல் சமன்பாடுகளில்
அழியாத விதி!
(27.12.2004 அன்று சுனாமியின் தடங்களை அண்ணா நினைவிடம் தொடங்கி, நொச்சிக்குப்பம், டுமீங்குப்பம், பட்டினப்பாக்கம், சாந்தோம், ஸ்ரீநிவாசபுரம் முடிய வலிகளைச் சுமந்தபடி பார்த்துவிட்டு வந்தேன். பின்னர் ஒரு நாள் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டும் கலை நிகழ்ச்சியில், பரதநாட்டியத்தின் பின்னணியில் வாசிப்பதற்காக எனதருமைத் தோழி தேவி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்டது.)
கருத்துகள்