Monday, January 28, 2008

சித்திரையில் "தான்' புத்தாண்டா?

சித்திரையில் புத்தாண்டு பிறக்கிறது (தினமணி, 24 ஜனவரி 2008) என்பது வரலாற்று ரீதியாகவும் தமிழ் மரபின்படியும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால், சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வான நூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது, இயற்கையான காலக் கணக்கீடு என்று கட்டுரை ஆசிரியர் கூறியிருப்பதை அறிவியல் கண்ணோட்டத்தில் ஏற்பதற்கு இல்லை.
ஏனெனில், சித்திரை முதல் தேதியன்று (ஏப்ரல் 13 14) முற்காலத்தில் நிகழ்ந்த விசு (பகலும் இரவும் ஒரே கால அளவைக் கொண்ட நாள்) தற்காலத்தில் பங்குனி 8 9 தேதிகளிலேயே (மார்ச் 21 22) நிகழ்ந்து விடுகிறது.இது போன்றே, ஐப்பசி விசு, தட்சிண அயனம், உத்தர அயனம் ஆகிய வானவியல் இயற்கை நிகழ்வுகளும் இன்றையப் பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளுக்கு முன்னரே நிகழ்ந்து விடுகின்றன. "சித்திரை' விசு பங்குனியிலும், "அய்ப்பசி' விசு புரட்டாசியிலும் தற்காலத்தில் நிகழ்கின்றன. இவை அறிவியல் அடிப்படையிலான இன்றைய வானவியல் காட்டும் நிதர்சன உண்மைகளாகும். இக்குழப்பத்துக்கு நம் முன்னோர்கள் பொறுப்பாளிகள் அல்லர். அவ்வப்பொழுது வானநூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் யதார்த்த நிலைகளைக் கணக்கிட்டு பஞ்சாங்கங் களை காலத்துக்கு ஏற்ப அறிவியல் கண்ணோட்டத்தில் திருத்திக் கொள்ளாத நமது தலைமுறையினரே பொறுப்பு ஏற்க வேண்டும்.
சென்ற ஆண்டு நடந்த ஒரு வானவியல் கருத்தரங்கில் நான் குறிப்பிட்டவாறு பஞ்சாங்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் திருத்தி அமைக்க நாம் தவறினால் பிற் காலத்தில் அயனப் பிறப்பு நாட்கள் தலைகீழாக மாறி, உத் தராயணப் புண்ணிய காலத்தை தட்சிணியானப் பிறப்பு நாளான்று கொண்டாட நேரிடும்.இன்றைய பஞ்சாங்கங்களை வான நூல், பருவங்க ளின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு?
வரலாற்று ரீதியில் பார்த்தாலும், இந் தியாவில் இன்று நடைமுறையில் உள்ள பல புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே? இந்தப் புதிய புத்தாண்டு நிலைத்திருக்குமா என்பதை காலத்தின் நிர்ணயத்துக்கு விட்டு விடலாம்.

அய்ராவதம் மகாதேவன்,
சென்னை88.
நன்றி: `தினமணி 26.1.2008

இது தொடர்பான முந்தைய பதிவுகள்:

@ சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?
@ எது தமிழ்ப் புத்தாண்டு? -- அறிவியல் மற்றும் வரலாற்று முடிவு
@ இந்தத் புத்தாண்டினால் பயனுண்டா? - ஜோதிடப் பதிவு அல்ல

1 மறுமொழிகள்:

said...

aanaal intha varudangal pirantha kathai ondru ullathey? atnu tamil samuthaayathirkey sammantham illatha kathai. oru aanukkum marrouru aanukkum pirantha 60 kuzanthaikalin peyargal thaan intha aandugalukku vaikkappatathaam.. miga mosamana kathai athu...athanaal tamilukku innum sariyaana puthaandu kidaikkavillai enbathil entha iyamumillai....

Related Posts with Thumbnails