விவசாய விளைபொருட்களுக்குப் பெரும்பாலும் பேரம் பேசாமலும், ஏன் என்று கேட்காமலும் வாங்கி வந்துவிடுவேன். ’விலைப்பட்டியல் போட்டு விற்பவனிடம் பேரம் பேசாமல், அன்றாடம் பிழைப்பவரிடம் என்ன பேரம்?’ என்பது தான் அதற்குக் காரணம். இருந்தாலும் சில நேரம் இளநீர் விலை ரூ. 30, 35 எனும் போது கொஞ்சம் ஜெர்க் ஆகித் தான் போகிறேன்.
நேற்றும் இன்றும் வாழைப்பழம் வாங்கப் போனபோதும் இதே நிலை தான். பெரிய மேடு, சூளை பகுதிகளில் 10:30-க்குமேல் எங்கும் வாழைப்பழம் இல்லை. மசூதிக்கு எதிரில் உள்ள கடையில் 4 ரூபாய் என்றார் ஒரு பழம்! சின்னப் புள்ள விரல் தண்டி இல்ல அந்த வாழைப்பழம்.. - அது 4 ரூபாயாம்... சரி, நேரமாயிட்டதுனால அப்படியிருக்கும்னு நினைச்சேன். இன்னிக்கு வேற ஒரு கடையிலயும் அதே 4 ரூபாய் தான். ஒன்ஸ் ஏறுனா அதில இருந்து இறக்காம, ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க போலிருக்கு!
ரூபாய்க்கு எத்தனை என்று கேட்கும் நிலை போய், இப்போ 10 ரூபாய்க்கு ஒன்றா இரண்டா எனக் கேட்க வேண்டியிருக்கும் போல!

வீட்டில் விளைந்தவை தவிர, எங்க அய்யா பழம் வாங்கினால் தாரில் பாதி அளவுக்கு வாங்கிவிடுவார். ’என்ன மாப்ள!’ என்று பழவண்டியில் அய்யா கை வைத்தால் கால் வாசி சரக்கு தீர்ந்து தான் செல்வார் வண்டிக்காரர். சென்னைக்கு வந்த பிறகு, ரஸ்தாலி அதிகம் கிடைக்காமல், கற்பூர வாழையை சுவைக்கத் தொடங்கிய பிறகு, அதன் இனிப்புக்கு நான் சுவைஞனாகிவிட்டேன்.

சென்னையில் எது மஞ்சளாக இருந்தாலும் அது ’மஞ்சப்பழம்’ தான். ரஸ்தாலி, பூவன், கற்பூரவல்லி என்றெல்லாம் கேட்டால் ஏற இறங்கப் பார்த்துவிட்டுத்தான் பழத்தைப் பிய்த்துக் கொடுப்பார்கள்.
ஆனால், வரவர சென்னையில் மற்ற பழங்களே கிடைக்காமல் போய் எங்கு பார்த்தாலும் பச்சை நாடாவுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்தது போன்ற ஹைபிரிட் வகை என்று சொல்லப்படும் ’மோரிஸ்’ தான். எனக்கு அதில் பெரிய விருப்பம் இல்லை. மிகப்பெரும்பாலும் அதை உண்பதைத் தவிர்த்துவிடுவேன்.

பசிக்கு ரெண்டு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும் என்ற எளிய நிலையெல்லாம் இன்று இல்லை. 2 ரூபாய்க்கு பெரிய பழமே கிடைக்கும் என்றிருந்த நிலை ஒன்றிரண்டு ஆண்டுகளில் சிறிய பழம் தான் 4 ரூபாய் என்னும் நிலையைத் தொட்டிருக்கிறது. நல்ல வளர்ச்சி தான்!?
எனக்கு இந்த அரிசி விலை, காய்கறி விலையெல்லாம் தெரியாது. விலையேற்றத்துக்கான எனது அளவுகோல் பரோட்டா தான். 10 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பரோட்டா 2 ரூபாய்; இன்று அதே கடையில் 10 ரூபாய்! டீ 1.50-லிருந்து 6, 7 வரை ஆகிவிட்டதாம்.
வாழை மட்டுமல்ல... இங்கே வாழ்க்கையே விலையேறித் தான் போயிருக்கிறது!
கருத்துகள்