மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடக்கிறது - "ஜாதிப்பாகுபாட்டை ஒழிப்போம்" என்னும் தலைப்பில்! எண்ணற்ற இருபால் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். உணர்வு பொங்கப் பேசுகிறார்கள். தலைப்பில் கவனம் - ஜாதிப்பாகுபாடு தான் ஒழிய வேண்டும்; ஜாதி அல்ல.
கை, கால்களை ஆட்டி, ஆட்டி, ஒரு திறமையான வணிகப் பேச்சாளரின் பாவனைகளுக்குப் பழக்கப்பட்டிருக்கிறது அவர்களின் உடல்மொழி! ஆனால் கருத்து?

(படம் நன்றி: மதிமாறன்)
"பாரதி பாடினானே, 'ஜாதிகள் இல்லையடி பாப்பா! குலத் தாழ்ச்சி
உயர்ச்சி சொல்லல் பாவம்" என்று இப்படித் தொடங்குகிறார்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது அவ்வளவுதான். பெண்ணுரிமையோ, ஜாதி ஒழிப்போ அவர்கள் பாரதியில் தொடங்கி பாரதியோடு முடித்துக் கொள்வார்கள். தாண்டி வரமாட்டார்கள். அதை விடுவோம். (பாரதியும் முழுமையான ஜாதி ஒழிப்புப் பேசியிருந்தால்.... நமக்கு அதில் ஒன்றும் சங்கடமில்லை.
அரைகுறைகளுக்குத் தெரிந்ததெல்லாம் அரைகுறைதானே!)
நான்கைந்து பாடல் வரிகளை எடுத்துவிடுவார்கள். கடைசியில் தீர்வு வைப்பார்கள்! "பள்ளிகளில் சேர்க்கும் போதே ஜாதியைக் கேட்கிறார்களே, இந்நிலை ஒழியும்வரை ஜாதி எப்படி ஒழியும்? ஜாதி ஒழிய வேண்டுமானால் ஜாதிச் சான்றிதழ் கேட்பதை அரசு நிறுத்த வேண்டும். பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கிறார்களே... நெஞ்சு பொறுக்குதில்லையே!" என்று தங்களால் இயன்றவரை வார்த்தையை வளர்த்துவிட்டு, மீண்டும் பாரதியிடம் போய் தஞ்சம் புகுந்து கொள்வார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமென்ன? ஜாதி ஒழிப்பென்பது இப்படித்தான் போதிக்கப்பட்டிருக்கிறது அவர்களுக்கு!
சமபந்தி போஜனத்தினாலோ, தீண்டாமை ஒழிப்பு என்று மட்டும் பேசுவதாலோ ஜாதியை ஒழித்துவிட முடியாது. மூலத்தோடு போர்புரியும் தந்தை பெரியாரின் போர்முறைதான் இந்நாட்டில் ஜாதியை ஒழிக்க சிறந்த வழி என்பதை எடுத்துரைக்க வேண்டாமா? சல்லி வேரை வெட்டுவதல்ல; ஆணிவேரோடு பிடுங்கி எறிய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்ட வேண்டாமா? சிகிச்சைக்காக நோயைக் கேட்பதும், நோயைப் பரப்பி மகிழ்வது ஒன்றாக முடியுமா? ஜாதியை ஒழிப்பதற்கான அடித்தளப் பணிதான், சமூகநீதிக் களம் என்பதையும், அதற்கான வழிமுறைகளில் ஒன்றுதான் இடஒதுக்கீடு என்பதையும் புரியாதவர்களன்றோ வாயாடுகிறார்கள்.
இவர்கள் மட்டுமா என்ன? நாளைய ஆட்சி நமதென்று கனவு காண்போரும், இளைஞர்களைத் திரட்ட அதிரடி செய்வோரும் கூட சரியாக புரிந்துகொள்ள முயற்சிக்காமல் பேசும்போது சிறார்களை என்னவென்று சொல்வது? "இடங்களை அதிகப்படுத்தினால், இட ஒதுக்கீடு தேவையில்லை" என்போர், இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதை வலியுறுத்தவே இவ்வாறு சொல்கிறார்கள் என்பதும், இடங்களை அதிகப்படுத்தும் எண்ணம், பேசிவிட்டு இடத்தைக் காலிசெய்த பின் இருக்காது என்பதும் நாம் அறியாததா? ஆனால், ஜாதி ஒழிப்புக்கு என்ன வழியென்று பேசுகிறார்களா? இளைஞர்களைத் திரட்டக் கிளம்புகிறார்களாம்.
எத்தனை பேருக்கு கவலை இருக்கிறது - சுற்றியிருக்கும் போதைகளிலிருந்து இளைஞர்களை, மாணவர்களை மீட்க? இன்று கூட்டம் சேர்க்க முயல்வோருக்கும், நாளைய ஓட்டுக்கு வழி தேடுபவர்களுக்கும் எப்படியிருக்கும் கவலை?
ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை குறித்த உணர்வின்றி, இந்திய இலங்கை கிரிக்கெட் பார்க்கத் தொலைக்காட்சியை நோண்டுபவன்; 'கப்சிப்' என்று கமுக்கமாக, இந்தியைத் திணிக்கத் துடிக்கும் 'கபில்சிபல்'களைக் கண்டுகொள்ள முடியாதவன்; திரையரங்கில் தலைவனைத் தேடுபவன்; ஆயிரங்களில் பணம் கிடைத்தால், ஆலவட்டம் சுற்றுபவன்; பயன்பெற்ற மரத்தையே பதம்பார்க்கும் கோடரிக் காம்பென உதிக்கும் விபீஷண வாரிசுகள்... இப்படித் தானே இருக்கிறது இளைஞர் நிலை.

ஒருபுறம் சினிமா போதை, கிரிக்கெட் போதை, சாராய போதை, பாலியல் போதை, அதிகார போதை, குறுக்குவழியில் குபேரனாக விரும்
பும் குபீர் போதை! இன்னொருபுறம் எதையொன்றையும் தனக்கு அதில் என்ன நன்மையிருக்கிறது என்ற பார்வையில் மட்டுமே பார்க்கும் தன்னலப் போக்கு! இப்படி அரிதாரத்துக்கும் அதிகாரத்துக்கும் அடிமையானது போக, எஞ்சியுள்ள சமூகம் குறித்த அக்கறையுடையோரும், அரசியல் அறிவற்றவர்களின் அரைவேக்காட்டு உணர்ச்சி முழக்கங்களுக்கு பலியாகும் போக்கு! விளைவு... சமூகமாவது? அக்கறையாவது? என்ற சலிப்பு!
ஆனால் ஆரியமோ, இட ஒதுக்கீடு தான் ஜாதியைக் காக்கிறது என்று கூசாமல் சொல்கிறது! அதையும் நம் சூத்திர வாய்களின் வழியாக பரப்புகிறது! சமூகநீதி கேட்டால் ஜாதிய வாதி என முத்திரை குத்துகிறது!
எதற்கு இதெல்லாம் என்று ஏகடியம் பேசுவோரை, குழப்பத்தைப் புகுத்தும் குயுக்தியாளரை, விசாலப் பார்வை இல்லாதோரை 'வெற்றியாளர்' என்று வரவேற்பு கூறுகிறது. உங்கள் முன்னுதாரணம் இவர்தான் என்று முன்னிறுத்துகிறது. நம் இளைஞர்களை சமூகப் பார்வையில்லாத சழக்கர்களாக மாற்ற முனைகிறது.
"ஜாதியைப் பற்றி இப்போதெல்லாம் யார் சார் பேசுகிறார்கள்- அதுவும் சென்னையில்?" என்று சொல்வோர் வீடுகளிலெல்லாம் கொடிகட்டிப் பறக்கிறது ஜாதி உணர்வு! திருமணக் கூடங்களில், மதப் பண்டிகைகளில், அலுவலக உணவிடங்களில் கூட எஞ்சிய ஜாதிய உணர்வு தேங்கிக் கிடக்கிறது. இதே சென்னையில், கல்லூரி வளாகத்தினுள்ளேயே நடந்த ஜாதி மோதலை நாம் பார்க்கவில்லையா?
இப்படிப்பட்ட சூழலில்தான், அடுத்த தலைமுறையைக் காக்கும் எண்ணத்தில்தான் முற்றிலும் மாணவர்கள், இளைஞர்களின் கடும் உழைப்பில் இன்று (13-9-2009) சென்னை புதுவண்ணையில் நடைபெறுகிறது ஜாதி ஒழிப்பு மாநாடு!
அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்காமல், அடுத்த தலைமுறையின் வாழ்வு செழிக்க, விடிவுக்கு வடிவு கொடுக்க, பெரியார் காண விரும்பிய புத்துலகம் படைக்க, இமைப்பொழுதும் சோராது சிந்திக்கும்
தமிழர் தலைவர் அழைக்கிறார்! வாருங்கள் வாருங்கள்!
புதுவண்ணையில் கூடுவோம்!
புது வரலாறு படைப்போம்!!

கருத்துகள்
காவிக் கூட்டத்தின் கொட்டத்திற்கு பதிலடியாக வெகு சிறப்பான பகுத்தறிவுத் தீ மிதி!
விரைவில் விரிவான பதிவு!