மாநாட்டுச் சிந்தனைகள்
- மின்சாரம்
எல்லோருக்குமே தெரியும் தந்தை பெரியார் நூல்களை வெளியிடுவதிலோ, பகுத்தறிவு வெளியீடுகளைக் கொண்டு வருவதிலோ திராவிடர் கழகத்தோடு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தோடு போட்டி போட முடியாது என்று அந்தக் குழுவுக்கு மட்டுமா - எல்லோருக்குமே தெரியும்.
மிக நன்றாகவே தெரியும்! தந்தை பெரியார் கருத்துகளை பகுத்தறிவுச் சிந்தனைகளை யார் எடுத்துச் சொன்னாலும் மானமிகு வீரமணி என்ன சொல்லுகிறார் என்பதுதான் எடுபடும் என்பது அந்தக் குழுவுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே தெரியும்.
உலகுக்கே தெரியும்! தந்தை பெரியார் கருத்துகளுக்குக் சட்டம் வடிவம் கொடுக்க தேவையான அழுத்தத்தைத் தந்து, சாதிக்கக் கூடிய ஆற்றல் ஆசிரியர் வீரமணிக்குத்தான் உண்டு என்பது அந்தக் குழுவுக்கு மட்டுமல்ல. அகில உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மிக மிக நன்றாகவே தெரியும்.
யாருக்குத்தான் தெரியாது? தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை எல்லைக் கோடுகளைத் தாண்டி, உலகின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் திறனும், திட்பமும் - அதற்கான அமைப்புகளை உருவாக்கித் தொடர்ந்து செயல்படச் செய்விக்கும் செயல் திறன் சிறு வயது முதலே இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, ஈரோட்டுத் தந்தையால் அடை யாளம் காட்டப்பட்ட அந்த மாமனிதர் வீரமணிக்குத்தான் உண்டு என்று அந்தக் குழுவுக்கு மட்டுமல்ல உலகமே ஒப்புக் கொண்ட ஒன்றுதான்.
ஒரு தலைவரின் கொள்கைகள் தொடர்ச்சியாகக் கொண்டு செலுத்தப்பட கல்வி நிறுவனங்கள் என்பவை தலை சிறந்த ஏற்பாடு என்பது அந்தக் குழுவுக்குத் தெரியாது - கல்வியாளர் களுக்கும் தொலைநோக்குச் சிந்தனையாளர்களுக்கும் நுட்பமாகவே தெரியும்.
மத நிறுவனங்கள்கூட இந்த நுட்பத்தைப் புரிந்து கொண்டு இருக்கும்போது, பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்ப வர்களுக்கு விளங்காமல் போனால் அதற்குக் காரணமும் ஆத்திரமும் அறியாமையும்தான்!
வீரமணி என்ன சொல்கிறார்? விடுதலை என்ன எழுதுகிறது? பெரியார் திடலின் செயல்பாடு என்ன என்ற இந்த மூன்று ஆய்தப் புள்ளிகள்தான் பெரியாரியலின் விவேகம் - வேகம் நிறைந்த அதிகாரப் பூர்வமான மையம் என்பது மக்களுக்குத் தெரியும். அதற்கு மேல் யார் எழும்பிக் குதித்தாலும், குடலை அறுத்துக் கொண்டு காட்டி குரக்கலி வித்தை காட்டினாலும், குரங்காட்டம் போட்டுக் கரணம் அடித்துக் காட்டினாலும் அவற்றைத் தமாஷாகக் கருதித் தட்டி விட்டுப் போவார்களே தவிர, அவற்றினை ஒரு பொருட்டாக யாரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
காரணம் தொலைநோக்காளரான தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய அமைப்பும், ஏற்பாடும், வார்த்துக் கொடுத்து விட்டுச் சென்ற தலைமையும் அத்தகையவை!
வேறு யாருக்கும் தந்தை பெரியார் அவர்களிடமிருந்து இந்த அளவு அங்கீகாரம் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களுக்குக் கிடைத்த அளவுக்குக் கிடைத்திடவில்லை.
தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை பிளவுகள் கழகத்தில் தோன்றியது போல தோற்றம் அளித்தாலும், அது அடியிழந்து போனதற்கு இதுவே காரணம் - அடிப்படையும்கூட!
அந்த அங்கீகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அவர் கொடுத்த உழைப்பும், திட்டங்களும், ஏற்பாடுகளும் நுட்பங்களும் அணுகுமுறைகளும் சாதனைகளும் அவரை அசைக்க முடியாத அடையாறு ஆலமரமாக்கி விட்டது!
ஆத்திரப்பட்டு என்னப்பா செய்வது? அசிங்கப்படுத்த முயற்சிக்கலாம். அதற்கான ஆள்கள் தமிழர்களிடத்தில் மலிவாகக் கிடைக்கத்தான் செய்வார்கள் - அதையும்தான் தந்தை பெரியார் சொல்லி வைத்துச் சென்றுள்ளாரே!
ஒரு சினிமா நடிகரை புரட்சித் தலைவர் என்று அவர் பின்னால் சுற்றித் திரிந்தவர்களுக்கு எல்லாம் இப்பொழுதுதான் உண்மையான புரட்சித் தலைவர் பெரியார் என்று தெரிய ஆரம்பித்திருக்கிறது.
அவன் இவன் என்று தமிழர் தலைவரை ஒருமையிலே பேசி அந்தக் கூடாரத்தின் தகுதியை தலைக்குமேல் உயர்த்திக் காட்டுகிறது ஒரு ஜீவன்! பெண்களுக்கே தாலி கூடாது என்கிற ஒரு இயக்கத்தில் தன் பணக்கார அகங்காரத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட, அரை கிலோ தங்கத்தைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு திரியும் அசல் பத்தரை மாற்றுத் தங்கம் கொள்கையில் அவர்.
யார் எதைப் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டதே!
காலமெல்லாம் தந்தை பெரியாரை வசைபாடியே திரிந்த, பெரியாரைக் கொச்சைப்படுத்துவதிலேயே காலத்தைக் கழித்த மார்க்சிஸ்ட் போர்வையில் திரிந்த (அ) சிங்கங்கள், வீரமணியை வசைபாடுவதற்கென்றே பெரியார் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு போர் குரல் கொடுக்கக் கிளம்பியுள் ளது. வாழ்க அவர்தம் தனி ஒழுக்கமும் தியாகச் சீலமும்!
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற இழி குணத்தில் இத்தகு ஆசாமிகளைத் தேடிப் பிடித்து இழுத்து வந்திருக்கின்றது ஒரு குழு. திராவிடர் கழகத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்துள் ளது என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கின்றன.
அட, மடசாம்பிராணிகளே! நீங்கள் சொல்லுகிற வாதப் படியே வைத்துக் கொண்டாலும், வீரமணி பெரியார் விட்டுச் சென்ற சொத்துகளை ஆயிரம் மடங்கு வளர்த்திருக் கிறார் என்பதை இதன் மூலம் ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?
நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் கழுத்தில் சூட்டப்படும் புகழ் மாலையாக அல்லவா மாறுகிறது! வீரமணி - அவருக்குள்ள தனித் தன்மையான ஆற்றலே அதுதான்!
கூர்தீட்டிய மரத்தையே பதம் பார்க்கக் கிளம்புவது தமிழர்களின் சுபாவம்!
பெரியார் கருத்துகளையும், இயக்க ஆவணங்களையும் பிற்காலத்திலும் பேசப்பட வைக்கும் ஏற்பாட்டில் ஆருயிர் இளவல் வீரமணிக்கு நிகராக இன்னொருவரை உலகத்திலே ஈடாகக் கூற எவரும் இல்லை என்று சொன்ன முதல் அமைச் சரிடம், இப்படி ஒரு கோரிக்கை வைக்கிறீர்களே, உங்களைவிட விவரமற்ற பைத்தியக்காரர்கள் வேறு யார்?
தோழர்களே, தந்தை பெரியார் அவர்களை ஒரு காலத்தில் கொச்சைப்படுத்திய ஒரு கூட்டம், அய்யா கண்டெடுத்த அறிவுக் கருவூலமாம் நமது ஆசிரியரை தமிழர் தலைவரை கொச்சைப்படுத்தி, காயப்படுத்த கிளம்பியிருக்கிறது.
சிலிர்த்தெழும் கறுஞ்சிறுத்தைகளே! கருஞ் சட்டைப்போர் மறவர்களே! உங்கள் நெருப்புப் பார்வைகண்டு பொசுங்கட்டும் அந்தப் பஞ்சுப் பொதிகள்!
புறப்படுங்கள் சென்னை மாநாட்டுக்கு, புறப்பாட்டுப் பாடுவோம்! புலிப் போத்துகளே எழுக!
செப்டம்பர் 6,7, நீங்கள் இருக்கும் இடம் சென்னை; அப்பொழுதுதான் எதிரிகளும், அவர்களை ஆசை தீரக் குளிப்பாட்டும், பதர்களும் இருக்கும் இடம் தெரியாமல் போய் ஒளியும்!
சந்திப்போம்! சந்திப்போம்!!
நன்றி: விடுதலை-http://files.periyar.org.in/viduthalai/20080827/news39.html
"குடிஅரசு" இதழ்களை வெளியிட
பெரியார் திராவிடர் கழகத்துக்குத் தடை!இப்போதுள்ள நிலையே (Status Quo) நீடிக்கும்சென்னை - உயர்நீதிமன்றம் ஆணை
"குடிஅரசு" இதழ்த் தொகுதிகளை வெளியிடுவது குறித்து திராவிடர் கழகத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டவர்கள் நடத்தும் பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பினை எதிர்த்து, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் கி. வீரமணி அவர்களால் சென்னை - உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.வழக்கினை நீதிபதி எம். ஜெயபால் அவர்கள் விசாரித்தார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ. தியாகராசன், த. வீரசேகரன், பி. பிரசாத், ஆர். அருண்குமார், எம். சுனில்குமார் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கினை விசாரித்த நீதிபதி, இந்தப் பிரச்சினையில் இப்பொழுதுள்ள நிலையே நீடிக்கவேண்டும் (Status Quo) என்றும், வழக்கு வரும் 1.9.2008 அன்றைக்கு (திங்கள்கிழமை) ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவித்தார். எதிர்தரப்பினருக்காக வக்கீல் எஸ். துரைசாமி ஆஜரானார்.இதன்படி “பெரியார் திராவிடர் கழகம்” “குடிஅரசு” தொகுப்புகளை வெளியிட முடியாது என்று தடை விதிக்கப் பட்டுள்ளது.
கருத்துகள்