முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊன்றிப் படித்து உண்மையை அறிக!

ஊன்றிப் படித்து உண்மையை அறிக!
சென்னை மாநாடுகளும் - நமது சிந்தனையும்!
- கலி. பூங்குன்றன்,
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.

மதவாதம் இந்தியத் துணைக் கண்டத்தை மட்டுமல்ல - உலகப் பந்தையே உருட்டி மிரட்டிக் கொண்டு இருக்கிறது!வெடிகுண்டுகள் ஒரு பக்கம்; மனிதனே வெடிகுண்டாகி ரத்தத்தைக் குடித்துக் கொண்டு இருக்கிறான் மறுபக்கம்! ஓருயிர் போகட்டும் - அதற்கு விலையாக ஒரு நூறு உயிர்களைக் குடிப்போம் என்கிற குரூரப் புத்தியை மதங்கள் மலிவாக வழங்கிக் கொண்டு இருக்கின்றன.கடவுளிடம் அனுமதி பெற்று ஈராக்கின் மீது போர் தொடுத்தோம் என்று படித்த மனிதன் - அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் விஷம் கக்குகிறார்.ஒரு மதத்துக்கும், இன்னொரு மதத்துக்கும் மட்டுமல்ல - ஒரு மதத்தின் குட்டிகளுக்குள்ளேயே கூட அடிதடி - ரணம் - ரத்த ஆறு!மதம் வழி காட்டியது போதும், போதும்! புது வழியைத் தேடும் - புதுப் பார்வையை நாடும் ஒரு காலகட்டம் இது.இதற்குத் தேவைப்படும் மாமனிதர்தான் தந்தை பெரியார் - மாமருந்துதான் தந்தை பெரியார் என்ற சமூக விஞ்ஞானி கண்டுபிடித்துக் கொடுத்த சுயமரியாதை - சமத்துவ - பகுத்தறிவுச் சித்தாந்தம்!உலகில் இதற்கான ஒரே ஒரு தனித்தன்மை வாய்ந்த இயக்கம் திராவிடர் கழகம் மட்டுமே! பகுத்தறிவுக் கருத்தினை மக்கள் இயக்கமாக நடத்தும் ஒப்புவமை இல்லாத ஒரே இயக்கம் இதுதான்!
74 ஆண்டுகள் இந்தக் கொள்கைக்காக ஒரு நாளேடு வீறு நடைபோடுகிறது என்றால், அது சாதாரணமானதல்ல.விடுதலை விடுவித்த கட்டுகள் ஒன்றல்ல இரண்டல்ல! அது எத்தனையோ தளைகளை தகர்த்திருக்கிறது - எத்தனையோ விலங்குகளை உடைத்திருக்கிறது.எல்லாத் திசைகளிலும் விடுதலை தன் முழக்கத்தை ஓங்கி ஒலித்திருக்கிறது - நெடுநாள் தூக்கங்களையெல்லாம் ஓட ஓட விரட்டியிருக்கிறது.கல்வி நீரோடையில் ஆரிய முதலைகளையெல்லாம் வெளியேற்றியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் நீச்சல் குளமாகவும் அது மாற்றப்பட்டதற்கு விடுதலை நிச்சயமாக மார் தட்டலாம்.பெண்ணுரிமையின் பீரங்கியாக முழங்கியிருக்கிறது. ஜாதி ஆணி வேரைச் சுட்டெரிக்கும் எரிமலையாக வெடித்திருக்கிறது.மூட நம்பிக்கைகளின் மூச்சை நிறுத்தும் போர் வாளாகச் சுழன்றிருக்கிறது.
தரை தட்டிப்போன கப்பலாக இருந்த தமிழர் வாழ்வில் தன்மான விசை கொடுத்த தளகர்த்தராக சமர் புரிந்திருக்கிறது.சுருக்கமாகச் சொல்லப்போனால், தமிழன் தலை நிமிரவும், தோள்கள் புடைக்கவும், கூன் விழுந்த முதுகு நிமிரவும், புதுநடை போட - புதுத் தெம்பூட்டும் பூகம்பமாய், புயல் கலனாய் தன் பணியை ஆற்றியிருக்கிறது.விடுதலை இல்லையென்றால் - கெடுதலைதான் என்ற நிலையிருந்தும், அதற்கொரு சோதனை ஏற்பட்டதுண்டு.அதன் கர்த்தாவாகிய தந்தை பெரியார் விடுதலையை நிறுத்தி விடலாம் என்கிற முடிவுக்கு வரும் ஒரு நிலை ஏற்பட்டது.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் வாராது வந்த மாமணியாய் தந்தை பெரியாருக்குக் கிடைத்தவர்தான் எம்.ஏ., பி.எல். படித்த அன்றைய இளைஞர் மானமிகு வீரமணி அவர்கள்.விடுதலை தொடர்கிறது என்றால், அதற்குக் காரணம் இவர் தான் - ஆம் இவரேதான்! தந்தை பெரியார் அவர்களே வெளிப்படை யாக இதனை எழுதவும் செய்தார் (விடுதலை, 6.6.1964).அந்த நேரத்திலும்கூட, தந்தை பெரியார் அவர்கள் துரோகிகளை அடையாளம் காட்டவும் செய்தார்.
இயக்கத் தோழர்களை எனது இயக்கத்தில் இருந்து மனிதர்கள் ஆகி எனக்கும், இயக்கத்திற்கும் கத்தி தீட்டும், தீட்டி வெளியேறிய தோழர்களைத் தவிர்த்து மற்ற இன்று இயக்கத்தில் இருக்கும் அதுவும் இயக்கத்தால் தங்கள் நலனுக்கு எந்தவித பலனும் அடையாமல், அவர்களது பணத்திலேயே வாழ்ந்து கொண்டு, அவரவர்கள் நேரத்தைச் செலவு செய்துகொண்டு பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்து இயக்க வளர்ச்சிக்கு இரவும் பகலும் பாடுபடும் உண்மைத் தொண்டர்களான இயக்கத் தோழர்களை வேண்டிக் கொள்கிறேன்.
விடுதலை பத்திரிகை - நண்பர் வீரமணி அவர்கள் ஏகபோக நிர்வாகத்தின் கீழ் நல்ல நிலையில் நஷ்டமில்லாத நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால், இப்போது இருப்பதைவிட இன்னும் குறைந்தது 2500 சந்தாதாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டாகவேண்டும் (விடுதலை, 6.6.1964) என்று தந்தை பெரியார் அவர்கள் கையெழுத்திட்டு விடுதலை தலையங்கமாகவே எழுதினார்களே - அதனை இந்த நேரத்தில் நினைவு கூர வேண்டியது மிகவும் அவசியமாகும்.
எந்த நம்பிக்கையில் தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களிடம் விடுதலையை ஏக போக நிர்வாகத்தில் ஒப்படைத்தார்களோ, அந்த நம்பிக்கை பொய்த்துப் போய் விடாமல், கம்பீரமாக வெற்றிகரமாக வீறுநடை போடச் செய்துவிட்டாரே - மனதில் மாசில்லாத மக்கள் அனைவரும் மனமொப்பி அதற்காக நன்றி பாராட்டுவார்கள்.தந்தை பெரியார் அவர்கள் தம் அறிக்கையில் சுட்டிக் காட்டியதுபோல, இந்த இயக்கத்தால் மனிதர்கள்ஆனவர்கள் இயக்கத்துக்கும், இயக்கத் தலைமைக்கும் எதிராகக் கத்தி தீட்டத்தான் செய்வார்கள்.ஆனால், நமக்கு தந்தை பெரியார் அவர்களின் அளவுகோல்தான் முக்கியம்.
தம்மிடம் ஏகபோகமாக தந்தை பெரியாரால் ஒப்படைக்கப்பட்ட அந்த விடுதலையை எந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்? நவீன அச்சுக்கூடம் உருவாக்கப்பட்டு, பல வண்ணத்தில் ஆறு பக்கங்களுடன் (முன்பு நான்கு பக்கங்களே!) திருச்சியில் இரண்டாம் பதிப்பு என்ற சாதனை மகுடத்துடன் உலகத் தமிழர்கள் மத்தியிலே ஜொலிக்கச் செய்துவிட்டாரே!உலகம் முழுவதும் உள்ள தமிழ் தெரிந்த அனைவரும் அடுத்த சில மணிநேரங்களிலேயே (நாம் படிப்பதற்கு முன்பே) இணைய தளத்தின் மூலம் படிக்கச் செய்யும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட்டாரே! இந்த வகையில், தமிழ்நாட்டில் முதன் முதலாக வெளிவந்த ஏடு விடுதலைதான் என்பது வைர வரிகளால் பொறிக்கத் தகுந்ததாகும்.
விடுதலையைப் படிப்பதற்கே ஒரு தனிப் பயிற்சி வேண்டும் என்ற நிலை மாறி, பல நாளேடுகளை நாம் அச்சிட்டுக் கொடுக்கிறோம் என்கிற அளவுக்குக் கொண்டு சென்றுள்ளது வளர்ச்சியா? - தேய்மானமா?உண்மை மாதமிருமுறை, பெரியார் பிஞ்சு (குழந்தைகள் இதழ்), தி மாடர்ன் ரேசனலிஸ்ட் என்பவை எல்லாம் எந்தத் தரத்தில் - காலத் துக்கேற்ற பொலிவோடு, வலிவோடு பூத்து மணம் கமழ்விக்கிறது என்பதை புலன்கள் கெட்டுப் போகாத அனைவரும் அறிவர் - பாராட்டுவர்!தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் அடங்கிய நூல்கள் பகுத்தறிவு நூல்கள் அச்சிடும் பணி என்பது போர்க்கால வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே!
அதனை ஒரு தனி நிறுவனமாக்கி, ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அதிகாரியை நிர்வாகப் பொறுப்பாளராக்கி, நூல்கள் அச்சிடும் பணி எந்த நிலையிலும் தடங்கலில்லாமல் நடைபெறுவதற்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்டு, ஓய்வு ஒழிச்சலில்லாமல் அப்பணி நடந்துகொண்டு இருக்கிறதே!
338 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன.
தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் பொருள் வாரியாகத் தொகுக்கப்பட்டு பெரியார் களஞ்சியம் என்ற தலைப்பின்கீழ் சராசரி 300 பக்கங்கள் என்ற அளவில் மக்கள் பதிப்பாக மலிவாக நன்கொடை அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகின்றன.கடவுள்-2 தொகுதிகள், மதம்-7 தொகுதிகள், பெண்ணுரிமை - 5 தொகுதிகள், ஜாதி - தீண்டாமை 17 தொகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன.
தலைப்பு வாரியாக வெளிவந்து கொண்டேயிருக்கும்.


ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக தொகுதிகளை வெளியிடுவதால் யாருக்குப் பயன்? பணம் கொடுத்து வாங்கும் சக்தி உள்ளவர்களின் அலமாரிகளில் அழகு செய்யும் - சாதாரண மக்களுக்குச் சென்றடையாது!மகாபாரத ஆராய்ச்சி - கீதையின் மறுபக்கம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சந்திரசேகர பாவலரின் இராமாயண ஆராய்ச்சி (தொகுப்பு) இவையெல்லாம் வெளியிடப்பட்டுள்ளதே - பெரியார் கொள்கையைப் பரப்பும் பணியில் இவை மிக முக்கியத்துவம் பெறவில்லையா? உலகம் பூராவும் பார்ப்பனர்கள் கீதையைத்தானே அறக்கட்டளை வைத்துப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்? தமிழர் தலைவர் எழுதிய கீதையின் மறுபக்கம் நூலைத் தடை செய்யவேண்டும் என்று ராமகோபாலன்கள் முதலமைச்சரிடம் முறையிட்டனரே - அதற்குப் பிறகாவது நமது ஆசிரியரின் அரும்பணியைப் புரிந்துகொண்டிருக்க வேண்டாமா?ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையென்றால் அதற்காகவே பெரியார் நூலகம், ஆய்வகம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட் டுள்ளதே! பழம்பெரும் இதழ்களும், ஏடுகளும் நவீன முறையில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனவே! ஆய்வாளர்கள் பயன்படுத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். 46267 நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன. மாணவப் பருவந்தொட்டு அரிதிற் சேர்த்த தமது சொந்த 10,227 நூல்களை பெரியார் நூலகம் - ஆய்வகத்திற்குத் தந்துள்ளார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.அய்யாவின் உரைகள் மட்டுமல்ல - குடிஅரசு இதழ்களும்கூட குறுந்தகடுகளாக வெளியிடப்பட்டுள்ளன (Digitalisation). அப்படி வெளியிடப்பட்டவைகளை நூல்களாகத் தொகுத்து சிலர் வியாபாரம் செய்யப் பார்ப்பது அறிவு நாணயமான செயலா?தமிழகம் முழுவதும் பகுத்தறிவு இயக்க நூல்களைப் பரப்புவதற்கு இரு நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அப்பணி முழு வீச்சில் நடந்துகொண்டு இருக்கிறது. (இவற்றை முதல்வர் அல்லவா 2.12.2007-இல் தொடங்கி வைத்தார்) முக்கிய நகரங்களின் பேருந்து நிலையங்களில் திராவிடன் புத்தக நிறுவனத்தின் சார்பில் விற்பனையகங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தின் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்யும் ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. செங்கற்பட்டில் இவ்வாண்டு பிப்ரவரி 18 இல் நடைபெற்ற சுயமரியாதை இயக்க 80 ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் அருமையாகக் குறிப்பிட்டாரே!திராவிடர் கழகம் - நூல்களை வெளியிட்டு வருவதுபற்றி அவ் விழாவில் முதலமைச்சர் கலைஞர் அழுத்தந்திருத்தமாகவே கூறினாரே!
"உலகத்திலே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப்பற்றியும் சொல்லவேண்டுமேயானாலும், எந்த ஒரு அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களை சேகரித்து வைத்து, அதை எதிர் காலத்திற்குத் தரக்கூடிய இந்த ஆற்றல், நம்முடைய வீரமணியாருக்கு இருப்பதைப்போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்லாம் இதற்காகப் பாடம் படிக்கவேண்டும்"
இது வெறும் புகழ்ச்சிச் சொற்கள் அல்ல. உண்மையான கணிப்பாகும். இந்த வகையில் முதல் இடத்தில் இருப்பது நமது நிறுவனமே!நமது நிறுவனம் வெளியிடும் நூல்கள் அனைத்தும் பதிப்புரிமை பெற்றவை என்று அச்சிடப்பட்டுள்ள நிலையில், அந்த நூல்களை நமது நிறுவனத்தின் அனுமதியில்லாமல் வெளியிடுவது சட்ட விரோதமாகும் - பொது ஒழுக்கச் சிதைவுமாகும்.பதிப்புரிமை என்ற சட்டம் எதற்காகத்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா?
இதனைச் சொன்னால், பெரியார் கொள்கைகள் தனி உடைமை யானவையல்ல என்று புரட்சியாளர்கள்போல சிலர் வேடங்கட்டி குதிக்கிறார்கள். பெரியார் இயக்கத்தின்மீது சேறுவாரி இறைக்க இதோ ஆள்கள் கிடைத்திருக்கிறார்கள் என்ற சாக்கில் பார்ப்பனச் சக்திகள் சபாஷ் என்று சூ காட்டுகின்றன. கொம்பு சீவி விளம்பரம் தருகின்றன.

பெரியார் நூல்களை அரசுடைமை ஆக்கவேண்டும் என்று ஒரு பக்கத்தில் கோரிக்கை; அப்பொழுதுதான் அந்த நூல்களை மற்றவர்கள் வெளியிடலாம் என்று கூறுவது ஒரு பக்கம் - இதன்மூலம் அவர்களை அறியாமலேயே ஒரு உண்மையை சட்ட நிலையை - ஏற்றுக்கொள்கிறார்கள். பெரியார் நூல்கள் அரசுடைமை ஆக்கப்படாத நிலையில், அவற்றை வெளியிடுவது குற்றம் என்பதை ஏற்றுக்கொண்டு விட்டார்களே! இருந்தும் ஏன் அடாவடித்தனம்?ஒரு மோதல் போக்கை உருவாக்கினால் சுலபமாக விளம்பரம் கிடைக்கக் கூடும் என்ற எண்ணத்தில் சிறு பிள்ளைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது பரிதாபத்துக்குரியதே! அக்கப்போர்களை அவதானிப்பதற்கு இங்கு ஏடுகளுக்கும், ஊடகங்களுக்கும் பஞ்சமா? அதில் ஒரு அற்ப சந்தோஷம் - அவ்வளவுதான்!வாழ்வியல் சிந்தனைகள் என்று வீரமணி அவர்கள் எழுது கிறாராம். அவை நூலாகவும் வெளிவந்து விட்டனவாம்! பார்த்தீர்களா, பார்த்தீர்களா? பெரியார் நூல்களை வெளியிடாமல், வீரமணி தன் நூல்களை வெளியிடுகிறார் என்று ஒருவகைப் பிரச்சாரம்!தந்தை பெரியார் நூல்களையும் வீரமணி அவர்களையும் மோத விடுகிறார்களாம் - இது கடைந்தெடுத்த ஒரு பார்ப்பன அணுகு முறையல்லாமல் வேறு என்ன?கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கூறுவதுடன் நாம் நிறுத்திக் கொள்ளப் போகிறோமா? அந்தக் கடவுள் மறுப்புத் தத்துவம் என்பது விரிந்த வாழ்வியல் சிந்தனைக்கான கூறு அல்லவா?உணவு முறையிலிருந்து, உடை, இருக்க வீடு, பொதுத்தொண்டு, குடும்ப வாழ்க்கை முறை, ஆண் பெண் உறவு, மக்கள் பேறு, குழந்தைகள் வளர்ப்பு, மனிதநேயம் என்பதுபற்றியெல்லாம் தந்தை பெரியார் சிந்திக் கவில்லையா? பேசவில்லையா? எழுதவில்லையா? தந்தை பெரியார் கொள்கைகள் ஒரு வாழ்க்கை நெறியல்லவா?.
அந்த அடிப்படையில், இக்கால வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, புதிய பொருளாதாரச் சூழல் இவற்றையொட்டி பல்துறைகளைச் சார்ந்த கருத்துகளையும், தகவல்களையும் திரட்டித் தருவதற்கு ஆற்றலும், ஓயாமல் படிக்கும் முனைப்பும் உழைப்பும், சிந்தனையும் தேவைப்படும்.தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் - இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களையும்கூட பெரியார் இயக்கத்தின்பால் புதிய பார்வையைச் செலுத்தும் ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதானே உண்மை.வெறும் சாமியில்லை - பூதமில்லை என்று சொல்லக்கூடியவர்கள் தானே இவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தோம் - ஒவ்வொருவர் வீட்டிலும் நிகழும் நடப்புகள், பிரச்சினைகள்பற்றி எல்லாம் இந்தக் கட்டுரைகள் பேசகின்றனவே - தீர்வு தருகின்றனவே! என்று படித்துவிட்டுப் பாராட்டுக் கடிதங்களை எழுதிக் கொண்டு இருக் கின்றனர். கடவுள் மறுப்பாளர்கள் - தலைசிறந்த மனிதாபிமானிகள், வாழ்வியலின் திறவுகோல் கருத்துகளைக் கூறக் கூடியவர்கள் என்ற நிலையை உருவாக்குவது தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்கான பரிமாணமே தவிர, தேய்மானமல்ல!வாழ்வியல்பற்றி எழுதுவதும், பேசுவதும் குற்றம் என்று சொல்லும் பாமரர்களையும், பிற்போக்குவாதிகளையும் நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. ஏதாவது குறைசொல்ல வேண்டும் என்ற ஆத்திரத்தை அறிய முடிகிறது.தங்கள் மூக்கை வெட்டிக் கொள்ளுகின்றனரே இந்த அறிவு ஜீவிகள்!
இடதுசாரி சிறுபிள்ளைத்தனம் என்ற ஒரு சொலவடை உண்டு. அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.நம்மை திசை திருப்ப சிலர் முயலக்கூடும். அதனை இலட்சியப் படுத்தத் தேவையில்லை.சமுதாய நோக்கத்துக்காக - தடையாக இருந்த அரசியல் சட்டத்தையே கொளுத்தினார்களாம். அதுபோல, வீரமணி விதித்திருக்கும் தடையையும் சந்திப்பார்களாம்.
சமுதாய நோக்கத்துக்காக தந்தை பெரியார் செய்து வைத்துள்ள ஏற்பாடு அவர்கள் கண்ணோட்டத்தில் தடையாம். எது தடை? எது பாதை? என்பதிலேயே எவ்வளவு பெரிய தடுமாற்றம்!கட்டுப்பாடுகளை உடைப்பதுதான் பெரியார் கொள்கையாம். அதனால், வீரமணியார் சொல்லும் கட்டுப்பாட்டை உடைப்பார்களாம்!
சபாஷ், வார்த்தையை வைத்து விளையாட்டா!கட்டுப்பாடு என்ற சொல் இடத்தைப் பொறுத்து வேறுபடக் கூடியது.மதத்தின் கட்டுப்பாட்டை உடைப்பது என்று பெரியார் சொன்னதும் இயக்கத்தின் கட்டுப்பாட்டைக் காப்பது என்று அவர் சொன்னதும் ஒரே பொருள் தானா?பெரியாருக்குப்பின் அவர் கண்ட இயக்கம் இருக்காது என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த கூட்டத்தின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்ட ஒரு தலைவர்மீது பார்ப்பனர்கள் ஆத்திரப்படுவது இயல்புதான். அதனால்தான், மாநாடு கூட்டி அவரைப் பாடை கட்டி தூக்கினார்கள்.பெரியார் திரைப்படம் முதல் பெரியார் வலைக்காட்சி (Periyar Webvision) வரை பல்முறையிலும் அறிவியலைப் பயன்படுத்தி தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளைப் பரப்புவதையே மூச்சாகக் கொண்டு உழைத்து வருகிறார்.
பெரியார் இயக்கம் என்றால், திராவிடர் கழகம்தான்! பெரியார் இயக்கத்தின் தலைவர் என்றால், அது மானமிகு வீரமணி அவர்கள்தான். இது அடிமுதல் நுனிவரை அண்டம் அறிந்த அறுதியிட்ட உண்மையாகும்.
அவர்மீது வீசி எறிவது தூசு அளவு என்றாலும் சரி, தூண் அளவு என்றாலும் சரி அது பார்ப்பனர்களுக்குப் பரிமாறக் கூடிய பால் பாயாசமே!அதேநேரத்தில், பெரியார் கொள்கையை ஏதோ ஒரு வகையில் பலகீனப்படுத்திட (முடியுமா என்பது வேறு பிரச்சினை) மேற்கொள்ளும் துரோகச் செயல்தான் அது என்பதும்தான் உண்மை! என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே செய்யும் சிறுபிள்ளைத்தனத்துக்காகப் பரிதாபப்படுவோம்!
அனைத்து ஜாதியினருக்கு அர்ச்சகர் உரிமை என்றாலும், சமூகநீதியில் அடுத்துப் பெறவேண்டிய உரிமைகள் என்றாலும் அவற்றைச் சாதிக்கக் கூடிய அமைப்பும் சரி, தலைமையும் சரி - நம்மைச் சார்ந்ததே!
75 ஆண்டு அகவையில் 65 ஆண்டு பொது வாழ்க்கை - தந்தை பெரியார் அவர்களின் அங்கீகாரம் - அர்ப்பணிக்கும் பொதுத் தொண்டு - இவற்றால் வைரம் பாய்ந்து உருப்பெற்ற ஒரு வலிமையான தலைமையால்தான் எதையும் சாதிக்க முடியும். அந்தத் தலைமையின் சொற்களுக்கும், எழுத்துகளுக்கும்தான் வலிமை உண்டு - சமூகத்தின் அங்கீகாரமும் உண்டு.
சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் வரை தமது கருத்தால் அணுகுமுறையால் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர் மானமிகு வீரமணி.
அரசியல் போக்குகளை மாற்றக் கூடியவர் - தம் கொள்கை வழியில் ஆட்சிகளை உருவாக்கக் கூடியவர். அந்தத் தலைவரைப் பற்றிக் கொண்டு பணியாற்ற முடியவில்லை என்றால், அது வாய்ப்புக்கேடே! ஸ்தாபன ரீதியாகப் பணியாற்றும் - கற்றுக் கொள்ளும் பண்பாடு என்பது நமது தமிழர்களிடம் குறைவே! தமிழர் வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
எல்லோருமே தலைவராக ஆசைப்படலாம். ஆசைப்படுவது என்பது வேறு - அதற்குச் சமூக அங்கீகாரம் கிடைப்பது என்பது வேறு - இரண்டும் ஒன்றல்ல! அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள உழைப்பும், அறிவும், ஆற்றலும், தியாகமும், வார்ப்பும் தேவை. ஒரு தலைவர்மீது அவதூறுச் சேற்றை வீசி விடுவதாலேயே, தான் தலைவர் ஆகி விட்டோம் என்று கனவு கண்டு விடக் கூடாது.
தந்தை பெரியார் அவர்களால் சண்டித்தனம் என்று கண்டிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், ஒரு கட்சியின் பொதுச்செயலாளராகி விட்டார்.அன்றைய தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் அனுப்பிய தந்தியையும், கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் நேரில் சென்று உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்ட வேண்டு கோளையும், புறக்கணித்து (கொள்கைக்கு விரோதமாக) தம்மை திலீபன் என்று நினைத்துக் கொண்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வீராவேசமாகப் (வழக்கம்போல உள்ளூர் ஏடுகளில் செய்தி இடம் பெறும் வண்ணம்) புறப்பட்டவர் 24 மணி நேரம்கூட தாக்குப் பிடிக்க முடியாமல், உடும்பு வேண்டாம் கைவந்தால் போதும் என்ற நிலையில், வெட்கத்தைவிட்டு சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என்று தந்தை பெரியார் கூறுவாரே, அதுபோல அதே கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவரிடம் தொடர்பு கொண்டு - உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வாருங்கள், வாருங்கள் என்று கெஞ்சி மன்றாடிய வீராதி வீரர்தான் இவர்.
"நான் கோவையில் உள்ள ஒருவரின் கட்சிக்குப் போகப் போகிறேன் என்று திராவிடர் கழகத் தோழர்கள் பரப்புகிறார்களே - நான் என்றும் திராவிடர் கழகத்துக்காரனாகவே இருக்க, தொடர எண்ணுபவன்; தயவு செய்து அப்படிப் பிரச்சாரம் செய்யவேண்டாம் என்று தோழர்களுக்கு அறிவுரை கூறுங்கள்" என்று திராவிடர் கழகத் தலைமைக்கு உருக்க மாகக் கடிதம் எழுதியவர் - இன்றைக்கு அந்தக் கோவைக்காரர் பொதுச் செயலாளராக இருக்கும் கழகத்திற்கே தலைவராகி விட்டார் - தலைமை வியாதி எவ்வளவு பொல்லாதது பார்த்தீர்களா? இதைப்போல் எவ்வளவோ உண்டு. கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்படக் கூடாது!
உலகம் முழுவதையும் தந்தை பெரியார் சிந்தனைகள் பரவுவதற்கு ஒல்லும் வகையால் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவர் அழைக்கிறார்! சென்னையில் செப்டம்பர் 6, 7 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கும் முப்பெரும் மாநாடுகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவையானவை!உலக பகுத்தறிவு ஆய்வு அமைப்பின் தலைவர் நியூயார்க்கைச் சேர்ந்த பேராசிரியர் பேரறிஞர் டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்கள் பங்கேற்பது மிகவும் சிறப்பானதாகும்.பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பகுத்தறிவாளர்கள் வருகிறார்கள். முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்களுக்கு அமெரிக்காவில் இயங்கும் பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில், சமூகநீதிக்கான வீரமணி விருது வழங்கப்பட உள்ளது.

மாநில இளைஞரணி மாநாடு, மகளிரணி மாநாடுகளும் நடைபெற உள்ளன.
குடும்பம் குடும்பமாக வாரீர்! வாரீர்! என்று அழைக்கின்றோம்.

குறிப்பு: ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்களை நாம் எப்பொழுதும் பொருட்படுத்துவதில்லை. இப்பொழுது அளிக்கப்பட்டுள்ள விளக்கம்கூட தந்தை பெரியார் அவர்களுக்குப் பின் திராவிடர் கழகம் மேற்கொண்ட பிரச்சாரப் பணிகள், வெளியீடுகள் குறித்து இன்னும் அறியாத பகுதியினர்க்கு வெளிப்படுத்தும் நோக்கத்தில்தான் இது எழுதப்படுகிறது.வேறு எதையோ நினைத்து யாரும் துள்ளவேண்டாம்!
நன்றி: http://files.periyar.org.in/viduthalai/20080824/news03.html

கருத்துகள்

அதி அசுரன் இவ்வாறு கூறியுள்ளார்…
\\\"நான் கோவையில் உள்ள ஒருவரின் கட்சிக்குப் போகப் போகிறேன் என்று திராவிடர் கழகத் தோழர்கள் பரப்புகிறார்களே - நான் என்றும் திராவிடர் கழகத்துக்காரனாகவே இருக்க, தொடர எண்ணுபவன்; தயவு செய்து அப்படிப் பிரச்சாரம் செய்யவேண்டாம் என்று தோழர்களுக்கு அறிவுரை கூறுங்கள்" என்று திராவிடர் கழகத் தலைமைக்கு உருக்க மாகக் கடிதம் எழுதியவர் - இன்றைக்கு அந்தக் கோவைக்காரர் பொதுச் செயலாளராக இருக்கும் கழகத்திற்கே தலைவராகி விட்டார் - தலைமை வியாதி எவ்வளவு பொல்லாதது பார்த்தீர்களா? \\\\

அப்படி ஒரு கடிதம் இருந்தால் அதையும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஊன்றிப் படித்துவிட்டோம். உண்மையையும்-தெரிந்துகொண்டோம். நாங்கள் தெரிந்துகொண்டதை விரைவில் உலகுக்கு அறிவிப்போம். - அதி அசுரன்
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
மன்னிப்புக் கடிதம் தந்த மாவீரர்களெல்லாம் நிறைந்த இடத்திலிருந்து பேசுகிறீர்கள் தோழர்! வெளியிடலாமா என்பதை கொளத்தூருக்கு போன் போட்டு கேட்டுச் சொல்லுங்கள்! வேண்டுமானால், கோவைக்காரரிடமும் கேளுங்கள், வெளியில் போய் வந்த அனுபவம் இருமுறை இருக்கிறது அவருக்கு! அவர் கடிதம் கூட கோப்பில் இருக்கும்.
எதையும் ஆதாரமின்றி பேசுவது திடலின் வழக்கமல்ல என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…