இணை(ய) தளம்
ஆறாம் வகுப்பில் சென்று
அமர்ந்த நாள்முதல்
எனக்கு நண்பன் அவன்...
எவ்வளவுக்கு
எவ்வளவு நண்பனோ,
அவ்வளவுக்கு
அவ்வளவு போட்டியாளன்...
முதலிடத்திற்கான போட்டியில்
முட்டிக் கொண்டபடியே
பத்தாம் வகுப்பு
முடிந்து பிரிந்தபோதும்...
ஆட்டோகிராப் அவசியமில்லை என
எங்கள் நட்பைப்
புகழ்ந்துகொண்ட போதும் கூட..
அவன் பிறந்தநாள் தெரியாது எனக்கு...
பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
பெரிதாய்ப்படாத அந்த நாட்களில்...
கேட்காமலே கடந்து வந்துவிட்டோம்!
பின்னொரு நாள்...
கல்லூரியில் வெவ்வேறு துறைகளில்
சந்தித்த போது...
யாரோ ஒருவர்
எனக்கு அறிமுகப்படுத்த
நாங்கள் சிரித்த சிரிப்பில்
வெட்கிப் போனான் அவன்...
உள்ளூர நாங்களும்...
அன்று தொடங்கியது
இரண்டாம் இன்னிங்ஸ்...
இன்னும் ஆட்டம் முடியாத
எங்கள் நட்புக்காலத்தில்...
ஒரு முறையேனும்
கேட்கத் தோன்றவில்லை
எனக்கு அவன் பிறந்தநாளை...
அவனுக்கு என் பிறந்தநாளை!
இருவரும் பங்கேற்கும்
நண்பர்கள் பிறந்தநாளின்போதுகூட
அவனிடம் கேட்க நினைப்பது
அசிங்கமாகப் பட்டதெனக்கு....
அப்படியே கரைந்துபோன
வருடங்களின் தொடர்ச்சியில்
என் பிறந்தநாள் கேட்டு
மிதந்து வந்த ஒரு
மின்னஞ்சல் சொன்னது
அவன் பிறந்தநாளை!
இப்போது எந்தத் தயக்கமுமின்றி
மீண்டும்...
ஆறாம் வகுப்பில்
அருகருகே அமர்ந்த
மனநிலையோடு சொல்கிறேன்....
பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா!
கருத்துகள்