புதிய திரட்டி தமிழ்ச் சரத்திற்கு வாழ்த்துகள்!
நான் வலைப்பூவுலகத்திற்குள் எண்ணற்ற திரட்டிகள் இருந்தாலும், என் மனம் கவர்ந்தது தமிழ்மணம். இன்று எப்படி பித்துப் பிடித்ததுபோல முகநூலின் காலக்கோட்டை அடிக்கடி புதுப்பித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேனோ, அப்படி ஒரு காலத்தில் தமிழ்மணம் திரட்டியை மீண்டும் மீண்டும் புதுப்பித்துப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்.
மைக்ரோ பிளாக்கிங்கும், சமூக ஊடகங்களும் பெருகிய பின், அருகிப்போன வலைப்பூ பரப்பில், அவ்வப்போது முக்கிய பதிவுகளை மட்டும் பதிவேற்றிவிட்டு, ஒரு காலத்தில் ஓடிவிளையாடிய பூங்காவில் காய்ந்த சருகுகளுக்கு மத்தியில் கால்பதித்துத் திரும்புதல் போலச் சென்று வருவேன்.
நீச்சல்காரனின் பதிவொன்று, எதிர்நீச்சல் பதிவாக முகநூலில் கண்ணில் பட்டது. பூங்காவைப் புதுப்பித்து, பூச்சரம் தொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை கண்டு மகிழ்ந்தே, நானும் ‘தமிழ்ச்சரம்’ வலைப்பூ திரட்டியில் பதிவு செய்துள்ளேன். நல்முயற்சி வெல்ல வாழ்த்துகள்!
கருத்துகள்