முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அது ஒரு மழைநாள்!

அது ஒரு மழைநாள்! பள்ளி விரைவாக மூடப்பட்டுவிட்டது. நான் ஆறாம் வகுப்பில் எஸ்.எம்.எஸ். பள்ளியில் சேர்ந்து சில மாதங்கள் தான் ஆகியிருக்கும். பள்ளி விரைவாக விட்டாலே எழும் குதூகலம் - மழையைத் தாண்டி எங்களை மகிழ்ச்சியில் நனைத்திருக்கிறது.

எப்போதும் பள்ளிவிடும் நேரத்திற்கு வந்து அழைத்துச் செல்ல வரும் அய்யாவுக்கு (அப்பாவுக்கு Samy Samatharmam) சீக்கிரம் பள்ளி மூடப்பட்ட தகவல் தெரியாதே என்று எனக்கொரு சந்தேகம். அப்போது நாங்கள் இருந்த திருவள்ளுவர் திருநகர், சர்ச் 5-ஆம் தெருவிலேயே ’நரம்பி’ என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் நாராயணன் என் வகுப்பிலேயே என்பவனும் படித்துவந்தான். இன்னொரு வகுப்புத் தோழன் வேலுச்சாமியுன் உடன் சேர மழைவிட்டு தூறிக் கொண்டிருந்த சாலையில் நடக்கத் தொடங்கிவிட்டோம்.

நடக்கத் தொடங்கியதற்கு இவ்வளவு பில்ட் அப்பா? என்று கேட்கத் தோன்றலாம். காரணம் உண்டு. பள்ளிக்கோ எங்குமோ நடந்து சென்று பழக்கமில்லாத ஆள் நான். எத்தனைப் பணி இருந்தாலும், சரியான நேரத்திற்கு எங்களை அய்யா வந்து அழைத்துச் செல்லாத நாளே இல்லை. எங்கள் அய்யாவின் வண்டிச் சத்தம் கேட்டாலே என்னுடன் படிக்கும் மாணவர்கள் கூட பள்ளி முடியப்போகிறது என்ற மகிழ்ச்சிக்கு வந்துவிடுவார்கள். காலை, மதியம், மாலை என்று எப்போதும் அய்யாவின் வாகனம் தான். தரையில் கால் படவிட்டதில்லை என்பார்களே அப்படித் தான் - சைக்கிள் வைத்திருந்த காலத்திலிருந்து டிவிஎஸ் சேம்ப் ஓட்டும் காலம் வரை!

மழையில் நனைய ஆசைப்படும் ஹீரோயின்களைப் போல, அன்று நாங்களும் தூறலில் நனைந்தபடி, சாலையில் ஓடும் மழைநீரில் கால் நனைத்தபடி நடந்துகொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. இயக்கப் பேரணிகள் தவிர நடப்பதை வேறெங்கு நடப்பதையும் நான் விரும்பியதில்லை. ஆனால், அன்று நடந்தே வீடுவந்து சேர்கிறேன். வழியில் வேலுச்சாமி விடைபெற்றுக் கொள்ள, நரம்பியும் நானும் மட்டும் திருவள்ளுவர் திருநகர் வரை வந்து சேர்ந்தோம். எப்படி நடக்கத் தொடங்கினேன் என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை. (நடக்கிறது தப்புன்னெல்லாம் சொல்ல வரல...)

கல்லுக்கட்டியிலுள்ள எங்கள் பெரிய கடையைத் தாண்டிச் சென்ற மாணவர்கள் மூலமாக பள்ளிவிட்ட தகவல் எங்கள் அய்யாவுக்குத் தெரியவர, அப்போது எங்களிடமிருந்த அம்பாசிடர் TN 63- 1279 வண்டியை எடுத்துக் கொண்டு வேறு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தங்கையையும் (Princess Samadharmam)அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்த பார்த்த அய்யாவுக்கு என்னைக் காணாததும் கலக்கம். அன்றென்று பார்த்து, அந்த மழையில் மகிழ்ந்தபடி அண்ணன்கள் இருவரும் ( Periyar SocratesEnnares Bradla ) தியாகராசன் தெருவிலிருந்த சிறிய கடையை மூடிவிட்டு, காரை எடுத்துக் கொண்டு என்னை அழைத்துச் செல்ல அய்யாவுடன் வந்திருக்கிறார்கள்.

பள்ளியில் நான் இல்லாததால், நான் நடந்து சென்றிருக்கக் கூடும் என்று யோசிக்கக் கூட அவர்களால் முடியவில்லை. பிறகு நான் கிளம்பிச் சென்றதைப் பார்த்த பள்ளிக்கூட பியூன் சொன்னதும் தான் வழியில் என்னைத் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள். பிறகு தேடியபடியே வீடு வந்துசேர, மழையில் நனைந்தபடி வந்ததற்காக அண்ணன்களெல்லாம் திட்ட, ‘ச்சும்மா வந்துட்டேன்’னு சொல்லிவிட்டு, கிளம்பி விஜயா டீச்சர் வீட்டுக்கு டியூசனுக்குப் போய்விட்டேன்.

எப்போதும் TVS Champ வண்டியில் அழைக்கவரும் அய்யா, மழை முடிந்து சாலையெல்லாம் சேறாக இருக்கும் என்பதால் அன்று சைக்கிளில் வந்தார். நான் நடந்து வந்தது குறித்து விஜயா டீச்சரிடம் அங்கலாய்த்துவிட்டு, என்னைப் பின்னால் அமர வைத்தபடி வீட்டுக்கு அழைத்துவந்தார். வரும் வழியெல்லாம், நான் தனியாக வந்தது குறித்தும், மழையில் நடந்து வந்தது குறித்தும் தனது கவலையையும், அச்சத்தையும் சொல்லியபடி, மாலையில் அண்ணன்கள் கோபித்துக் கொண்டதற்கு சமாதானம் தெரிவிக்கும்வண்ணம் பேசியபடியே வந்தார். ‘இப்படில்லாம் தனியா வரக்கூடாதுய்யா... மழை நேரம் ஏதாவது ஆயிடுச்சுன்னா என்ன பண்றது? கொஞ்சம் லேட் ஆனாலும், நீ ஆபிஸ் ரூம்ல... இல்லைன்னா, ஹெச்.எம் ரூம்ல போய் உட்கார்ந்துக்க...’ என்று பேசியபடியே வந்தார். 
உருகிப்போய் நான் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருக்க, என்னை உருவாக்கியவர் கலக்கத்துடன் என்னுடன் பேசிக் கொண்டுவர, அந்த இரவு வேளையில் மெல்லிய காற்றுடன் வீசிய, மழையில் நனைந்த சாலையின் மணத்தை இப்போது என் நாசியில் நுகரவைத்துவிட்டது - இந்த ஓவியம். இன்னும் ஆயிரமாயிரம் நினைவுகளை நெஞ்சில் நினைக்கவைத்துவிட்டீர்கள் தோழர் Mani Varma! நன்றி... நன்றி...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…