பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்வைக் கொட்டி, எப்போதோ பத்திரிகையில் வெளியிடப்பட்ட கார்ட்டூனை மீண்டும் வெளியிட்டிருந்த போக்கு அனைவராலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.
இதனை அடுத்து, அந்த படம் - பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இணையத்தில் இன்னும் அந்தப் படத்துடனே பாடம் வைக்கப்பட்டுள்ளது.
http://ncert.nic.in/NCERTS/textbook/textbook.htm?keps2=1-10
பார்க்க: பக்கம் 18

இந்த நேரத்தில் சமச்சீர் கல்வி விசயத்தில் நடந்த ஒன்று நினைவுக்கு வருகிறது. 2011-ஆம் ஆண்டு மே 22-ஆம் நாள் அதிமுக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் சமச்சீர் கல்விப் பாடத்திட்டங்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அன்று ஞாயிற்றுக் கிழமை - நான் சென்னையில் இல்லை. இணைய வாய்ப்பு இல்லாத காரணத்தால் உடனடியாக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் சமச்சீர் கல்விப் பாடங்களைப் பதிவிறக்கம் செய்து வைக்கச் சொன்னேன். பதிவிறக்கம் செய்யப்பட்டவற்றை ஒரு தனியார் இலவச இடம் ஒன்றில் பதிவேற்றம்ச் செய்தும் வைத்துவிட்டோம்.
அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால், எப்படியும் அரசு அலுவலர்கள் மறுநாள் வந்து தான் அதை நீக்க முயல்வார்கள் என்று தெரியும். அதனால் தான் நம்பிக்கையோடு அந்தப் பணியைச் செய்தோம். அதன்படியே நடக்கவும் செய்தது. திங்கட்கிழமை பாடங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டன. பின் நாங்கள் பதிவேற்றியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு விளம்பரப்படுத்தத் தயாரானோம்.
அப்படி மறுநாளே, பாடங்களைத் தூக்கக் கூடிய அரசு இயந்திரம் தான் இன்னும் அம்பேத்கர் பற்றிய கார்ட்டூனை நீக்காமல் இருக்கிறது என்பதை வைத்தே யார் அதிகாரம் இன்னும் இங்கே நிலைபெற்றிருக்கிறது என்பதை அறியலாம். இதனை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரிய வகையில் கவனத்தைக் கொண்டு செலுத்த வேண்டும்.
நாமும் நமது கண்டனங்களை மின்னஞ்சல், இணையத்தின் வழி மனிதவள மேம்பாட்டுத் துறைக்கும் NCERTக்கும் தெரிவிக்க வேண்டும்.
கருத்துகள்