Tuesday, December 28, 2010

எல்லை தாண்டிய பயங்கரவாதம்!


சிப்பிகள் பொறுக்க வந்தோம்
சிதைகள் தந்தாய் - எங்கள்
கடல் தமிழர் வாழ்க்கை இன்று
புதை குழி மண்ணாய்!

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் கிடைப்பது கடினம்;
கடல்நீர் நாட்டுள் பயணம் வந்தது
வடிந்தது எங்கள் உதிரம்!

நாட்டுக்குள் பூகம்பம் வந்தது
மக்கள் கடற்கரை சென்றனர்.
கடலுக்குள் பூகம்பம் வந்தது
கடற்கரையே காணாமல் போனது!



உயிரைப் பணயம் வைத்தோர்
உயிருடன் வந்தனர் - தங்கள்
உறவுகள் காவு போனதைக்
கண்டதும் வெந்தனர்!

கடல் என்னும் கந்துவட்டிக்காரன்
பணயப் பொருளை மாற்றி கைக்கொண்டான்!
தடைச் சட்டம் போட ஆளில்லை - கடல்
தடைக்கெல்லாம் தயங்குகிற ஆளில்லை!

இது
மனித குலத்தின் மீது
எல்லை தாண்டிய பயங்கரவாதம்!
இயற்கை
என்ன செய்யும் பாவம்?

ஆழ்துளை போட்டான்
அணுகுண்டு வீசினான்

கடற்கரைக் காடுகள் அழித்து
களியாட்ட விடுதிகள் கட்டினான்

நீரை உறிஞ்சினான்
நிலத்தடியில் வறட்சி..
கோலா பாட்டில் குளிர்ச்சி!

சுற்றுச்சூழலின்
சூத்திரம் மாற்றினான்..
தற்கொலைத் தூதனைத்
தானே தேடினான்!


தன்னை கவனிக்காத
மனிதனைத்
தானும் கவனிக்கவில்லை
இயற்கை!

பயங்கரவாதி இயற்கையா?
இல்லை மனிதன்!

கொலை
செய்தவனை விட
தூண்டியவனுக்கே
தண்டனை அதிகம்!
பெற்றுவிட்டோம்!

பழித்தது போதும்
இயற்கையை!
அது சுவற்றிலடித்த
பந்து!

நன்மையோ
தீமையோ
செய்ததே விளையும்

தீமை தொடர்ந்தால்
மனித இனம் அழியும்

இது
இயற்கையின் விதி!
அறிவியல் சமன்பாடுகளில்
அழியாத விதி!

(27.12.2004 அன்று சுனாமியின் தடங்களை அண்ணா நினைவிடம் தொடங்கி, நொச்சிக்குப்பம், டுமீங்குப்பம், பட்டினப்பாக்கம், சாந்தோம், ஸ்ரீநிவாசபுரம் முடிய வலிகளைச் சுமந்தபடி பார்த்துவிட்டு வந்தேன். பின்னர் ஒரு நாள் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டும் கலை நிகழ்ச்சியில், பரதநாட்டியத்தின் பின்னணியில் வாசிப்பதற்காக எனதருமைத் தோழி தேவி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்டது.)

Monday, December 27, 2010

இலவசக் கழிவறையும், சில கழிவுகளும்

மதுரை பேருந்து நிலையம் அருகில் நவீன இலவச கழிப்பிடம் ஒன்றைக் கட்டப்பட்டிருக்கிறது! அவரைப் பாராட்டுவதை விட்டுவிட்டு அழகிரி படம் இருப்பதைப் புகைப்படம் எடுத்துக் காட்டி கிண்டல் அடிக்கிறார் ஒருவர். அங்கே ராசா படம் வைக்கவேண்டும்; பெண்கள் பகுதிக்கு கனிமொழி, நீராராடியா என்று ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள். வேலையத்த வெட்டிகளைப் போல உங்கள் அருவெறுப்பை இங்கே வந்து காட்டுவதா?


கோடிகோடியாய்க் கோயிலுக்குக் கொட்டி அழுபவர்களும், திருவிழா, கொண்டாட்டம் என்று பாவக் கணக்கை தீர்க்க செலவு செய்து கொண்டிருப்பவர்களும் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அப்படி நடக்கும் திருவிழாக்களில் கூட முறையாகக் கழிப்பிட வசதி செய்து கொடுக்காமல், போகும் வரும் இடங்களில் எல்லாம் அசுத்தம் செய்து ஊரையே கழிவறையாக்கிவிட்டுச் செல்லும் படி திருவிழா நடத்துகிற கோயில்களையும், அதன் மூலம் கொள்ளையடிக்கிற கும்பலையும் கண்டிக்க ஒருமுறையாவது உங்களுடைய விரல்கள் கணினியைத் தொட்டிருக்குமா? சுகாதரமற்ற குளங்களினாலும், கோவிலைச் சுற்றிய கழிவுகளினாலும் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கெல்லாம் கவலைப்பட்டதுண்டா?

சமூகத்திற்குப் பயன்படும் விதத்தில் கழிவறை கட்டிவிட்டவர் அழகிரி ஆதரவாளராக இருந்தால் அவரையும், மனமிருந்தால் அழகிரியையும் சேர்த்துப் பாராட்டுவதை விட்டுவிட்டு கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறீர்களே! வெட்கமாயில்லை...?

ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் தோற்றத்தைக் கொண்டே, தொடர்ந்து வன்மம் நிறைந்ததும், கருத்தற்ற கிண்டலுமாக பேசிக் கொண்டிருப்பதும், கற்றோர்க்கு அழகல்ல!

கழிவறையில் அடையாளத்திற்காக படம் மாட்டப்பட்டிருந்தால், அதைக் கேவலம் என்றா கருதுவீர்கள்? அப்படியெனில் அதைப் பயன்படுத்தும் நீங்கள் அதைவிடக் கேவலமானவர்களா? நாம் கேவலமானவர்களா? ஏன், உங்களில் யாருக்கும் கழிவு வெளியேறாதா? கடவுளர், கடவுளச்சி படங்களை கழிவறைகளில் மாட்டியிருக்கிறார்களே! அதற்கென்ன பொருள்?
---------------------------------------------------------------------------------------------

இதை விட மோசமான, ஆபாசமான குறுந்தகவல்களும், மின்னஞ்சல்களும் தி.மு.க.வைக் குறிவைத்து எய்யப்படுகின்றன. ஸ்பெக்ட்ரம் குறித்த கேள்விகளுக்குப் பதில் தரத் தயார் என்று சொன்னாலும், நாடாளுமன்றத்தை நடத்த விடாத அராஜககும்பலைப் போலத்தான் இருக்கிறது இவர்களது நடவடிக்கை.

"ஸ்பெக்ட்ரம் பிரச்சினை - ஊழல் பிரச்சினையில்லை; கற்பனை நட்டம் என்ற கதை கட்டல்" என்று தெரிந்ததும், "அதுவும் இவர்கள் சொன்ன தொகையெல்லாம் சம்பந்தமே இல்லாத தொகை" என்று இதே துறைக்கான முன்னாள் அமைச்சர் அருண்ஷோரி சொன்னதும், "2001-இலிருந்து விசாரிக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் சொன்னதும் நடந்தபிறகு முறையான கருத்துகளை விட்டுவிட்டு, அவதூறு பரப்பும் விதமாக மட்டுமே வருவதை கவனித்தாலே இந்த கெட்டிக்காரர்களின் புளுகு எத்தனை நாள் என்று தெரிந்துவிடும்.

Wednesday, December 15, 2010

பாவாணர் துரோகியோ?

துரோகி முத்திரை குத்துவதற்கு இப்போது ஆதாரங்களையெல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை.

கலைஞரைப் பாராட்டி, வாழ்த்தி யார் பேசினாலும், அவர்களுக்கெல்லாம் ’துரோகி’ முத்திரை குத்தி குதூகலிப்பதுதான் தமிழ் தேசியத்தை வளர்க்கும் பணி என்றும், ஈழத்திற்கு செய்யும் பணி என்றும் கருதிக் கொண்டு இணையக் களங்களில் எண்ணற்றோர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கலைஞரை கரிகால் வளவனோடு ஒப்பிட்டு ’திராவிட ஞாயிறு’* பாவாணர் அவர்கள் பேசியிருப்பதைப் படித்ததும், அவருக்கும் துரோகி முத்திரை குத்திவிடுவார்களோ என்று பயமாய் இருக்கிறது. 

திரவிட மொழி நூல் ஞாயிறு பாவாணர் பார்வையில் கலைஞர்
”கரிகால் வளவனே திரும்ப நம் கருணாநிதியாராகப் பிறந்தானோ என்றுகூட நாம் நம்பும்படியாக இருக்கின்றது. அந்தக் கரிகால் வளவனும் காவிரி நாட்டிலேதான் பிறந்தான். இவரும் அந்த நாட்டிலேதான். அந்தப் பூம்புகாரை அவன் வளப்படுத்தினான். இவரும் இப்போது அதைப் புதுப்பித்து வருகின்றார்.... அவன் இளமையிலே பகைவராலே இடர்ப்பட்டுத் துன்பப்பட்டு அதிலிருந்து தப்பினான். அப்படியே இவரும் போன பொதுத் தேர்தலிலே (1971) எப்படியோ பகைவரிடத்தில் அகப்பட்டுத் தப்பினார்... அந்தக் காலத்திலேயே அவரைப் பற்றி ஏதாவது ஒரு புகைப்படமோ, பூச்சுப் படமோ இருந்திருந்தால், இவர் முகச்சாடை கூட ஒத்துப் போகுமோ என்றுகூட நாம் நினைக்கும்படியாக இருக்கிறது.”
- பாவாணர் உரைகள் - பக்கம். 82
நன்றி: கருஞ்சட்டைத் தமிழர் (அக்டோபர் 1-15, 2010)

ஏப்ரல் முட்டாள் முத்திரையைக் கையில் வைத்திருப்பவன் யார் முதுகில் குத்தினாலும், அவரெல்லாம் முட்டாளாகி விடுவார் என்பதுபோல் ஆகிவிட்டது ’துரோகி’ பட்டமும். முத்திரையை வைத்திருப்பவன், தன் முதுகில் புதிதாய் ஒருவர் குத்திவிட்டாலும், தானும் துரோகியாகிவிடுவோம் என்பது புரியாமல் திரிவது போல் இருக்கிறது.  

திராவிட ஞாயிறு பாவாணர் :
இதென்ன இத்தனை நாளும் மொழிஞாயிறு என்று தானே கேள்விப்பட்டு வந்தோம்; புதிதாய் என்ன ’திராவிட ஞாயிறு’ என்று சிலர் எண்ணக் கூடும். உண்மையில் நடந்தது என்ன? என்பதை பேராசிரியர் சுப.வீ அவர்கள் ’கருஞ்சட்டைத் தமிழர்’ அக்டோபர் 1-15, 2010 எழுதியிருக்கிறார்கள். அதனையும் அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன்.

மறைக்கப்படும் திராவிடம்


தனித்தமிழியக்க முன்னோடிகளில் ஒருவரும், தன்னிகரற்ற தமிழ் அறிஞருமான ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களை மொழி ஞாயிறு என அழைக்கின்றோம்.
அறிஞர் பாவாணருக்கு ‘ மொழிஞாயிறு பட்டம் ’, எந்த ஆண்டு, எந்த அமைப்பால் வழங்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முயன்றபோது, புதிய செய்தி ஒன்று கிடைத்தது.
1957 ஆம் ஆண்டு சேலம் தமிழ்ப் பேரவையினர் பாராட்டு விழா நடத்திப் பாவாணருக்கும், பொன்னம்பலனாருக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இருவருக்குமான விருதுகள் மற்றும் பொற்கிழிகளைத் தந்தை பெரியார் வழங்கியுள்ளார். அவ்விழாவில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரும் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கியுள்ளார். பொன்னம்பலனாருக்கு அன்று வழங்கப்பட்ட பட்டம்தான் ‘தமிழ் மறவர்’ என்பது. இச்செய்திகள் அனைத்தும், பாவாணரின் இளைய மகனார் மணி என்ற தே.மணிமன்றவாணன் எழுதியுள்ள, ‘பாவாணர் நினைவலைகள்’ (பக்.197) என்னும் நூலில் உள்ளன.
இவற்றுள் ஒரு செய்தி முதன்மையானது. அறிஞர் பாவாணருக்கு அன்று வழங்கப்பட்ட பட்டம் ‘திரவிட மொழிநூல் ஞாயிறு’ என்பதுதானே அன்றி ‘மொழி ஞாயிறு’ என்பதன்று. சுருக்கம் கருதி ‘திரவிட’ என்னும் சொல் நீக்கப்பட்டுள்ளதாக எண்ணிவிடக் கூடாது. ‘மூதறிஞர் ராஜாஜி நகர்’ என்பது, எம்.ஆர்.நகர் என்று சுருங்குவதில்லை. ஆனால் தியாகராயர் நகர் என்பது ‘தி.நகர்’ என்றும், கலைஞர் கருணாநிதி நகர் என்பது ‘கே.கே.நகர்’ என்றும் சுருங்கிவிடுகின்றது.
‘திராவிட’ மறைப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இனி நாம் பாவாணரைக் குறிப்பிடும்போதெல்லாம் ‘திரவிட மொழிநூல் ஞாயிறு’ என்றே எழுதுவோம். சுருக்கம் தேவைப்படின் ‘திராவிட ஞாயிறு ’ என்போம்.
(அன்று வழங்கப்பட்ட விருதின் படத்தையும், எடுக்கப்பட்ட ஒளிப்படத்தையும் கொடுத்துதவிய திரு. மணி அவர்களுக்கு நன்றி!)
நன்றி: கீற்று

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ‘மறைக்ப்படும் திராவிடம்’ என்ற இந்தக் கட்டுரையை வெளியிட்ட கீற்று, கலைஞரைப் பற்றி பாவாணரின் பேச்சு அடங்கிய பெட்டிச் செய்தியை வெளியிடவில்லை. சரி, என் பயம் பலிக்குமா? இல்லையா? என்பதை இன்னும் சில நாட்களில் இணைய தளங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Tuesday, December 14, 2010

என்னாச்சு பிளாக்கருக்கு? வலைப்பூ காணாமல் போச்சு :(

திடீர் திடீரென சில வலைப்பூக்கள் காணாமல் போகின்றன. என்னவென்று அந்தந்த வலைப் பதிவரைக் கேட்டபோது தான் அவரும் கவனித்தார்.


இவ்வாறு ”நீங்கள் தேடும் வலைப்பூவைக் காணவில்லை. நீங்கள் இவ்வலைப்பூவின் உரிமையாளரானால் கணக்கில் நுழைக” என்று பதில் வருகிறது. தனது கட்டுப்பாட்டகத்துக்குள் சென்று அவர் பார்த்த போது மேலும் அதிர்ச்சி. வலைப்பூ இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் காணாமல் போயிருக்கிறது. ஆனால், google தேடலில், cached இணைப்பில் முந்தைய பதிவுகள் கிடைக்கின்றன. 

சரி, இது குறித்து Blogger-க்கு தெரிவிக்கலாம் என்றால், அங்கே ஒரு வாரமாக இது குறித்து முனங்கி முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. என்ன பிரச்சினை? என்ன செய்யலாம்? என்று 
விவரம் தெரிந்தவர்கள் பாருங்கள். முடிந்தால் தமிழில் இது குறித்த விளக்கங்களைத் தாருங்கள்.


இது போல பதிவுகளைத் தொலைத்தவர்கள் அங்கே போய் முறையிடுங்கள். அவர்கள் தீர்வை முன்மொழியும் போது மின்னஞ்சலில் அது குறித்த தகவல் கிடைக்க வழியேற்படும். 

அப்புறம் என்னை மாதிரி பல பதிவுகள் வைத்திருப்போர், சுற்றுலாவிற்குப் போய்விட்டு ஆங்காங்கே பிள்ளைகள் தலையை எண்ணி சரிபார்ப்பதுபோல், எல்லாப் பதிவுகளும் இருக்கின்றனவா? இல்லை சுழலில் ஒன்றிரண்டு காணாமல் போய்விட்டனவா? என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

Related Posts with Thumbnails