முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிதாக 'புத்தகம் வெளியிட விரும்புவோர்' கவனத்துக்குச் சில...

புதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள் பலர் எழுத்தாற்றல் மிகுதியினாலும், எழுத்தார்வம் மிகுதியினாலும், புகழ் ஆசை மிகுதியினாலும் கூட புத்தகம் போடுவதைப் பார்க்கிறோம். ஏராளமான கவிதைப் புத்தகங்கள், தன் வரலாற்றுப் புத்தகங்கள், தங்களுக்குத் தோன்றிய, இதுவரை எவரும் சொல்லாத (என்று தாங்களே கருதிக் கொள்ளும்) 'அரிய' கருத்துகளை எழுதியே தீருவேன் என்று அடம்பிடிப்போர் எழுதும் புத்தகங்கள் போன்றவற்றையும் கண்டு வருகிறோம்.

இவற்றுக்கு மத்தியில் நல்ல கருத்துகளடங்கிய புத்தகங்களும் அரிதாக வரக் காண்கிறோம். நண்பர்கள், தெரிந்தோர் என்பதற்காக வாங்கிவிடுவோம் - படிப்போமா என்பது தெரியாது. எப்படியாயினும் எந்தக் கருத்தையும் வெளியிடுவதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. காலப் போக்கில் அப்படி எழுதுவோரில் பலர் நன்கு தேறி வரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, முதல் சில முயற்சிகளை, அவர்களுக்கான பயிற்சியாக நாம் கருதலாம், தவறில்லை.

கடந்த பல்லாண்டுகளாகவே என் பள்ளித் தோழர்கள் தொடங்கி, இணையத் தோழர்கள், தந்தையின் நண்பர்கள் வரை தங்கள் எழுத்துகளைப் புத்தகமாக்க வேண்டும் என்ற ஆர்வமுடையோர் பலரும், தொடர்ந்து வாசிக்க விரும்புபவன் என்ற அடிப்படையில் என்னிடம் கருத்துக் கேட்பதுண்டு. பல நேரங்களில், புத்தகம் போடப் போகிறார்களென்றால் நானே வலியப் போய் என் கருத்தைச் சொல்வதுமுண்டு.

உண்மையில் நல்ல எழுத்தாற்றல் மிக்கோர் பலரை இணையம் அடையாளம் காட்டியிருக்கிறது. அவர்களுடைய எழுத்துகள் தொகுக்கப்பட்டு, தலைப்பு வாரியாக சிறு சிறு நூல்களாகவேனும் வெளியிடப்பட வேண்டும் என்று விரும்பி, பலரிடம் அதற்கான முயற்சியையும் தொடங்கச் செய்திருக்கிறேன். அவர்கள் செய்யவில்லை என்றாலும் விடாமல் கொண்டு வர முயற்சிக்கிறேன். முயற்சிப்பேன். அது வேறு செய்தி!

ஆனால், நல்ல கருத்துள்ள படங்கள் 'வழக்கமாகவே’ மேக்கிங்கில் சொதப்புவது போல, நல்ல எழுத்தாளர்களும் தொடக்க நிலையில் அவசரப்பட்டு கையைச் சுட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும்; அல்லது புத்தக உருவாக்கத்தில் சொதப்பல் செய்து, படிக்கும் ஆர்வத்துக்கு இடையூறு விளைவித்துவிடக் கூடும்.

நல்ல புத்தகங்கள் வெளியிட, சரியாகப் போய்ச் சேர, படிக்க விரும்பும் வாசிப்பாளர்களைக் கஷ்டப்படுத்தாமல் இருக்க மிகச் சில முக்கியமான விசயங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

1. நாம் எழுதியது என்பதற்காக எல்லாவற்றையும் நூலாக்கிவிட வேண்டிய அவசியமில்லை. அவற்றில் எது அவசியமோ, எடுத்துக் கொண்ட தலைப்புக்கும், கருத்துக்கும், வடிவத்துக்கும் எது பொருத்தமோ அதை மட்டும் ஒரு தொகுதியில் கொண்டு வருதல் நன்று.

காதல் கவிதைகளின் தொகுப்பு நடுவில் ரெண்டு சமூகக் கவிதைகளையோ, கவிதைத் தொகுப்புக்கு மத்தியில் நாலு செய்தி/கட்டுரைத் துணுக்குகளையோ, சம்பந்தமேயில்லாமல் ஜோக்குகளையோ போடுவதைத் தடுக்க சட்டமே கொண்டுவந்தாலும் நல்லது. (ஒரு பொருள் சார்ந்து வடிவத்தில் வேறுபடும் படைப்புகளைப் பொருளோடு தொகுத்தல் வேறு)

2. எந்த எழுத்துருத் தொகுப்பில் (Font Group) தட்டச்சு செய்கிறோம் என்பது, எந்த எழுத்துருவில் வெளியிடப்போகிறோம் என்பதைப் பொறுத்து அமையவேண்டும்.

எல்லா எழுத்துருக்களுக்கும் மாற்றிக் கொள்ளும் வசதி வந்துவிட்டாலும், சில நிறுவனங்களின் எழுத்துருக்களுக்கு அவ் வசதி கிடைப்பதில்லை. அப்படி இருந்தாலும் பலருக்குத் தெரிவதில்லை.

இன்றைய சூழலில் கணினிப் பழக்கம் இல்லாதவர்கள் தான் கையால் எழுதி, தட்டச்சு செய்து வாங்குகிறார்கள். எனவே, அவர்கள் இதில் கவனம் எடுக்க வேண்டும். (Font Group என்று நான் குறிப்பிடுவது Tam, Tab, Sreelipi, LT-TM, RGB, Ka போன்றவை -இன்னும் நிறைய இருக்கின்றன.)

இணையத்தில் எழுதுவோர் ஒருங்குறியிலேயே (Unicode) பெரும்பாலும் எழுதி வைத்திருப்பதால், அதிலிருந்து Copyleft Fonts ஆன Tam பயன்படுத்துதல் நல்லது. அதற்கு மாற்றிக் கொள்ளுதலும் எளிது.

3. எந்த எழுத்துரு வடிவில் (Font Style) வெளியிடுகிறோம் என்பது மிக மிக முக்கியமானது. இணையத்தில் பயன்படும் அதே ஒருங்குறி எழுத்துரு அச்சுக்குப் பயன்படாது. வழக்கமாக Ms.Wordஇல் பயன்படுத்தும் Aavarangal, Ts-CU Paranar, Latha போன்றவை புத்தகமாகப் படிப்பதற்குக் கொடுமையான எழுத்துருக்கள்.

ஒருங்குறி எழுத்துகளை அச்சுக்குப் பயன்படுத்த முடியாது என்ற முந்தைய நிலையிலிருந்து மாறி, TTF எழுத்துருக்களைப் போலவே Vijaya, ila.sundaram போன்ற எழுத்துரு வடிவங்கள் வந்திருக்கின்றன. Heading, Running Font போன்றவற்றிற்கும் பல வடிவங்கள் உள்ளன. அவற்றில் இன்னும் முன்னேற்றங்கள் தேவை. (அச்சுக்குப் போகும்போது அச்சு மை அழுத்தமாக விழுவதைப் போல் இருக்கிறது.)

4. எழுத்துருக்களில் தலைப்புக்கான எழுத்துருக்கள், செய்திக்கான எழுத்துருக்கள், படைப்புக்கான எழுத்துருக்கள் என்று பல வகைகள் இருக்கின்றன.

தலைப்புக்குப் பயன்படுத்தும் எழுத்துரு வடிவங்களை Running Textக்குப் போட்டு கண்ணுக்குக் கொலையடிக்காமல் காக்க வேண்டியது முதன்மையான ஒன்று. Heading Fontடையும், Running Fontடையும் ஒன்றுக்கொன்று மாற்றிப் போட்டு தான் பெரும்பாலான புதிய புத்தகங்கள் வெளிவருகின்றன. அதை எப்படியாவது தடுக்க நம் டிடிபி டிசைனப்பர்கள் தான் அருள்புரிய வேண்டும்.

எழுத்துரு அளவுகளிலும் கவனம் வேண்டும். Italics, Bold எங்கு பயன்படுத்த வேண்டும் என்ற அறிவைக் கொஞ்சம் வளர்த்துக் கொள்ளலாம் நம் டிசைனர்கள்!

5. புத்தக அட்டைகளைக் கூட இப்போதெல்லாம் நல்ல வண்ணம் வடிவமைத்துவிடுகிறார்கள். எனவே அதில் சொல்வதற்கு பெரிதாக எதுவுமில்லை. ஆனால், அச்சுக்குப் பொருந்தும் அளவிலும், வண்ணத்திலும் அவை வடிவமைக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

6. எழுத்துப் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இலக்கணப் பிழையின்றி எழுதும் பயிற்சியும் நமக்குக் குறைவு, என்ன செய்வது?

அஃறிணைக்கும், உயர்திணைக்கும், ஒருமைக்கும், பன்மைக்கும் வேறுபாடு தெரியாமல், ‘கிறது, கின்றன’க்களைக் கலந்து போட்டுக் கிண்டிவிடுகிறோம். தீபாவளி மைசூர் பாகுகள் மாதிரி கடக்க, கடிக்க, மெல்ல முடியாமல், வாசித்தலில் தடைக் கற்களாகப் போய்விடுகின்றன.

எனவே, பிழை திருத்துதல் மிக அவசியம். அப்படி பிழை திருத்துவோர் தங்கள் கருத்துகளைப் புகுத்துவோராக இருக்கக் கூடாது. வார்த்தைகளைத் திரிப்போராக இருக்கக் கூடாது. தமிழாசிரியர் சரியாகத் திருத்துவார் என்று இந்தக் காலத்தில் நம்பிவிடவும் கூடாது. தமிழ் இதழியல், பதிப்புலகில் பிழை திருத்துநர்கள் குறைந்துவருதல் வருந்தற்குரியது. நல்ல வாசிப்பாளரால் சரியான ’பிழை திருத்துநராக’ வரமுடியும். பலர் முயற்சிக்கலாம்.

பிழை திருத்துதல் வேறு; புத்தகங்களை எடிட்டிங் செய்தல் வேறு. அப்படி எடிட் செய்வோர் இருபக்கத்திலும் நம்பகமும், நல்லறிவும், கண்டிப்பும் உடையோராக இருந்தால் தொடக்க கட்ட எழுத்தாளர்களுக்கு நல்லது.


7. உரிய தட்டச்சர், வடிவமைப்பாளர், அச்சகரைத் (not அர்ச்சகர்) தேர்ந்தெடுப்பது முக்கியம். எல்லா எழுத்துருக்களையும் பயன்படுத்தியே ஆக வேண்டியதில்லை. எல்லா வண்ணங்களையும் கொட்டியாக வேண்டியதில்லை. ஆயிரக்கணக்கில் அச்சடிக்க வேண்டியதுமில்லை.
படங்களைப் பயன்படுத்தினால், அச்சுக்குச் செல்லும் முன், PDFஇல் அவற்றுக்குரிய Link கோப்புகள் சரியாக இருக்கின்றனவா, படங்கள் தெளிவாகத் தெரிகின்றனவா என்று பார்த்துவிட வேண்டும்.
இல்லையென்றால் கட்டம் கட்டமாக பிக்செல்ஸ்தான் வரும்...பிக்சர் வராது. எல்லா அச்சகர்களும் தொழில்நுட்ப ரீதியில் பெரிய பிஸ்தாக்கள் இல்லை. எனவே கவனமாக இருக்க வேண்டும்.

சின்னச் சின்ன புத்தகங்கள், குறைந்த பிரதிகளுக்கெல்லாம் சிவகாசி போக வேண்டியதில்லை. அது ஒரே ஒரு ஜட்டி எடுப்பதற்கு திருப்பூர் போவதைப் போல.

அச்சடிக்கப் பயன்படுத்தும் தாள், அட்டை போன்றவை முக்கியம். வெள்ளவெளேர் என்று நீலத்தில் முக்கிய தாள்களாக எடுக்காமல்,
தேவைக்கேற்ப கொஞ்சம் Nature Shade பக்கம் போகலாம்.

அதே நேரம் நாம் அச்சடிக்க விரும்பும் அளவு, எண்ணிக்கை, பக்கங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு உள்ளூரிலோ, சிவகாசியிலோ, சென்னையிலோ,கோவையிலோ அச்சடிப்பதை முடிவு செய்யலாம்.
அச்சகர் வேறு, பதிப்பாளர் வேறு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

8. பணம் பெற்றுக் கொண்டு புத்தகங்களை அச்சடித்துக் கொடுக்கும் பதிப்பகங்கள் இருக்கின்றன. தொழில்முறையில் நல்ல புத்தக உருவாக்கத்திற்கு அவர்கள் உதவுகின்றனர். ஆனால், ஆர்வக் கோளாறில் வருவோரிடம் பணம் பிடுங்கி ஏமாற்றும் நிறுவனங்களும் இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே,புத்தகம் வெளியிடும் நண்பர்களைத் தொடர்புகொண்டு சரியாக பதிப்பகங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அதிலும் குறைவான பிரதிகளை அச்சிட்டுக் கொடுக்க எமரால்டு பதிப்பகம் போன்றவர்கள் அதற்கான திட்டங்களோடு தயாராக இருக்கிறார்கள். அவர்களை அணுகலாம்.

அணிந்துரை, வாழ்த்துரை, பாராட்டுரை, முன்னுரை, என்னுரை, இணைப்புரை, பின்னுரை என்று 16 பக்க புத்தகத்துக்கு 32 பக்க உரைகளை வாங்காமல், அளவோடு ’உரை’களை வாங்கி நாம் நிறைவுகொள்ள மனதிற்கும் ‘உறை’யிட்டுக் கொள்ளுதல் வாசகர்களுக்கு நன்று.

9. புத்தக வெளியீட்டு, அறிமுக விழாக்கள் போன்றவற்றை அதிக செலவின்றி செய்யலாம். கல்யாணம், காதுகுத்து ரேஞ்சுக்கு சொந்தக்காரர்கள் மத்தியில் பெருமை அடித்துக் கொள்ளும் நிகழ்வாக அல்லாமல், அவர்களுக்கும் கருத்துச் சேரும் வண்ணம் விழாக்களை நடத்துதலும், அதிலும் பாராட்டுரைக்குக் கட்டுப்பாடு வைத்தலும் அவசியம்.

பத்திரிகைகளின் புத்தகப் பகுதிக்கு அனுப்பலாம். புத்தகக் கடைகளில், உரிய விற்பனையகங்களில், இணையதளங்களில் விற்பதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். இல்லாவிட்டால், நம் 60-ஆம் ஆண்டு விழா/பிள்ளைகளின் கல்யாணத்தின் போது ஓரத்தில் கறைபட்ட புத்தகங்களை தேங்காய்ப் பையில் போட்டுத் தரவேண்டியிருக்கும்.

(குங்குமம், விபூதி போன்றவற்றுக்குப் பதில் புத்தகங்களைத் தருவது முக்கியமானது என்றாலும், அது விற்காததால் தரும் சூழலுக்கு நாம் போக வேண்டியதில்லை. தேவைப்பட்டால், அத்தகைய நிகழ்வுகளில் தருவதற்காகவே கூட நாம் புத்தகம் அச்சடித்துக் கொள்ளலாம்)

10. என் கருத்துக்கு உடன்பாடானதோ இல்லையோ, புத்தகம் வெளியிட விரும்புவோருக்கு “இங்கு யோசனைகள் (மட்டும்) இலவசமாக வழங்கப்படும்” என்பதை போர்டு மாட்டித் தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்குறிப்பு:
1. உடனடியாக என்னுடைய நினைவுக்கு வந்த சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளேன். சேர்க்க வேண்டியவை என்று தோன்றினால் பின்னர் சேர்க்கிறேன். தோழர்களும் பின்னூட்டத்தில் சேர்க்கலாம்.

2. நான் பயன்படுத்தியுள்ள கலைச் சொற்களிலும், தொழில்நுட்ப ரீதியிலும் பிழையிருப்பின், தோழர்கள் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளலாம்.

3. சில இடங்களில் சுவைக்காக கிண்டல் தொனியில் எழுதியிருந்தாலும், அவை நம் புதிய எழுத்தாளர்களை, எழுத்தார்வம் மிக்கோரை ஊக்கமிழக்கச் செய்வதற்காக எழுதப்படவில்லை.
நம் எழுத்தாளர்கள் ஊக்கத்துடன், சரியான வகையில் புத்தகம் வெளியிட ஊக்கப்படுத்தும் நோக்கோடு மட்டுமே ஊக்கத்துடன் எழுதியிருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொண்டு....

கருத்துகள்

கரந்தை ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள பதிவு
நன்றி
தனிமரம் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான விளக்கப்பகிர்வு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam