ஹார்டு டிஸ்குகளில் கண்ணுக்குத் தெரியாத காரணங்களால் காணாமல் போகும் கோப்புகளைப் பற்றி அறிந்ததும், ஏற்படுகிற மனநிலை - அணுகுண்டு வீச்சில் அழிந்துபோன நகரங்களில் உறவுகளைத் தேடுகிற மனநிலை! சுவடே இல்லாமல் அழிந்துபோய்விடும் அவற்றைப் பதிவு செய்யவோ, காக்கவோ நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் எல்லாம் நொடியில் சிலிக்கான் பொதிகளுக்குள் கரைந்துபோய்விடுகின்றன.
ஹெட் கடித்தாலும் மிச்சமிருக்கும் ஒலி/ஒளிப்பேழையின் (கேசட்) மேக்னடிக் டேப்பை செலோ டேப் கொண்டு ஒட்டி பத்திரப்படுத்தும் அளவிற்குக் கூட பாதுகாப்பில்லை. சிடிகள் நொறுங்கினால் 700 எம்பி, டிவிடி தெறித்தால் 4.7 ஜிபி, ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போனாலோ ஒன்றிரண்டு டிபி என நம் வரலாற்றை, படைப்பை காணாதடித்து நம் பிபியை வெகுவாக எகிற வைத்துவிடுகின்றன.
கடந்த தலைமுறை பிலிமாகவும், புத்தகமாகவும், படங்களாகவும் காத்து வைத்தவைகளை முழுமையான செலவுவைக்கும் தீர்வுகளுக்குப் போகமுடியாத நம் எளிய (சிடி, டிவிடி, ஹார்ட் டிஸ்குகள் போன்ற) டிஜிட்டல் முயற்சிகள் ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்துவிடுகின்றன. கிழிந்த தாள்களை ஒட்டியோ, சிதைந்த படத்தின் மீது வரைந்தோ அவற்றை மீட்டமைக்க முடியாது.
தொட்டுணரவோ, பார்த்தறியவோ முடியாத டிஜிட்டல் கா(ர்)டுகளுக்குள் தொலைத்துவிட்டு எங்கே தேடுவதென அலைந்துகொண்டிருக்கிறோம் பலர்! என்னென்ன போனதென்ற பட்டியலும் அதனுடனே சேர்ந்து போய்விடுகிறது. எதையெல்லாம் இழந்தோம் என்பதறியாமல் ஹூ ஆம் அய் ஜாக்கிசான் போலவோ, வெற்றிவிழா கமல் போலவோ அலையப் போகிறோம்.
இந்த லட்சணத்தில் ஒட்டுமொத்த வணிகமும் பணமாகவோ, காசாகவோ கண்ணுக்குத் தெரியாத டிஜிட்டலுக்குள் போய் சிக்கியபின், ஒட்டுமொத்தமாக பணம் இல்லாமல் போனதாக அறிவிக்கப்பட்டாலும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை நினைத்தாலே பீதியாகிறது.
விவரம் அறிந்தவர்களிடமே பல்லாயிரம் ரூபாயை எளிதாக ஏடிஎம் மூலம் சுருட்டிவிடுகிற திருடர்கள், கன்னக்கோல் வைக்காமல், கதவைப் பிளக்காமல் உட்கார்ந்த இடத்திலிருந்தபடி வங்கியிலிருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் நம் பணத்தை அலேக்காக அபேஸ் செய்தாலும் நம்மால் செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை.
இவர் தான் பணத்தை எடுத்தார் என்று மும்பையோ, பூனேவோ, கொல்கத்தாவோ, எங்கிருந்தோ வந்த அழைப்புகளின் செல்பேசி எண்களைக் கொடுத்தாலும் யாருக்கு பணம் திரும்ப வந்திருக்கிறது.
ஓட்டு விசயத்திலும் இது தான். வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவதும், கள்ள ஓட்டு போடுவதும் எளிதில் முடிகிற காரியமில்லை. இன்றைய ஊடக உலகில் எளிதில் அகப்பட்டுவிடும். ஆனால், வாக்குப்பதிவு எந்திரங்கள் அப்படியில்லை. மிகவும் எளிமையாக மொள்ளமாரித்தனம் செய்து பாஜக போல வெற்றிபெற்றுவிடலாம்.
டிஜிட்டல் அறிவியல் வளர்ச்சியின் முழுமையடையாத இந்த ஆபத்தில் பல கோப்புகளை இழந்துவிட்டோம்... இன்னும் இழக்கப்போகிறோம் என்பது மட்டும் அச்சம் நிறைந்த ஒன்றாக மிரட்டுகிறது. அதை ஈடுகட்டுவதற்கான செலவும், மீட்டெடுப்பதற்கான செலவும் பெரும் தொகையாக மிரட்டுகிறது.
ஒய் பிளட்? சேம் பிளட்!
கருத்துகள்