திவான் பகதூர் தாத்தா ரெட்டமலை சீனிவாசனாரின் பிறந்தநாள் இன்று (ஜூலை 7)!
இந்நாள் நினைவுக்கு வந்ததும், உடன் நினைவுக்கு வந்த மற்றொன்று அம்பேத்கர் திரைப்படம். தமிழில் அம்பேத்கர் திரைப்படத்தைப் பார்த்தபோதிலிருந்தே இதை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
![]() |
திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் |
முதல் இரண்டு வட்ட மேசை மாநாடுகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அண்ணல் அம்பேத்கருடன் பங்கேற்றவர் ராவ்பகதூர் ரெட்டமலை சீனிவாசன் (திரைபடத்தில் அப்படித்தான் குறிக்கப்பட்டிருக்கிறது). ஜாபர் பட்டேலின் ”டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர்” படத்தில் வரும் வட்ட மேசை மாநாட்டுக் காட்சியைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
![]() |
முதல் வட்டமேசை மாநாட்டுக் காட்சி (அம்பேத்கரின் வலப்புறம் ராவ்பகதூர் சீனிவாசன்) |
முறுக்கு மீசையுடன் நாம் பார்த்துப் பழகிய ரெட்டமலை சீனிவாசனை அங்கு காணோம். மாறாக தலையில் முண்டாசுடன் மீசையில்லாத ஒரு பார்ப்பனரைப் போலவே காட்டப்பட்டிருப்பார். ராவ்பகதூர் சீனிவாசன் என்ற பெயரைப் பார்த்ததும், ஜாபர் பட்டேலின் (சீனிவாச அய்யங்கார்கள் மாதிரி) மனதில் அப்படியோர் பிம்பம் தோன்றியிருக்குமோ என்னமோ? அம்பேத்கர் படத்தில் வரும் (https://youtu.be/hScBhoGOJZc?t=1h36m33s) இந்த இணைப்பையொட்டிய காட்சிகளைப் பாருங்கள்.
![]() |
முதல் வட்டமேசை மாநாட்டுக் காட்சி (அம்பேத்கரின் வலப்புறம் ராவ்பகதூர் சீனிவாசன்) |
உண்மையான வட்டமேசை மாநாட்டுப் புகைப்படம் இதோ. (அண்ணல் அம்பேத்கருக்கு வலப்புறம் கம்பீரமாக ரெட்டமலை சீனிவாசன் அமர்ந்திருப்பார்)
வரலாற்றுத் திரைப்பட உருவாக்கத்தில் நடக்கக்கூடிய பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று. அந்த குறிப்பிட்ட வரலாற்றோடு தொடர்புடைய, படத்தின் மையக்கருவை ஒட்டி வரும் அத்தனைப் பேரையும் சரியாக அவர்களின் வடிவத்திலேயே காட்ட வேண்டும்.
ஏனெனில், ஒரு பார்வையாளனாக நமக்குத் தெரிந்தவர்களைப் பற்றிய குறிப்பு இருக்கிறதா? அதுவும் சரியாக இருக்கிறதா? என்று கவனிப்பது மனித இயல்பு. அப்படி தந்தை பெரியாரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் அம்பேத்கர் படத்தில் இடம்பெறவில்லை என்பது சட்டென உறைத்தது. ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் காந்தி திரைப்படத்தில் அம்பேத்கர் இல்லை; தாகூர் இல்லை. ஜாபர் பட்டேலின் அம்பேத்கர் படத்தில் பெரியார் இல்லை; இன்னும் பல முக்கியமானவர்களும் (பெரியார் உள்பட இத்தகைய வரலாற்றுப் படங்களில்) விடுபட்டுப் போயிருக்கலாம்.
ஆனால், அப்படத்தின் பல்வேறு அத்தியாயங்களுள் வட்டமேசை மாநாடு - பூனா ஒப்பந்தம் தொடர்பான அத்தியாயம் மிக முக்கியமான ஒன்று. அந்த அத்தியாயத்தில் வரக்கூடிய முக்கியமான இரு பாத்திரங்கள் தான் தந்தை பெரியாரும், ராவ்பகதூர் ரெட்டமலை சீனிவாசன் அவர்களும். காந்தியின் உயிரை விட, பல கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் தான் முக்கியம் என்று அம்பேத்கருக்கு ஆதரவான குரலாக ஒலித்தது தந்தை பெரியார் தான். ஆனாலும், அந்தப் பதிவு எப்படியோ விட்டுப் போய்விட்டது.
![]() |
இரண்டாவது வட்டமேசை மாநாட்டுக் காட்சி |
அதே போலவே, ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் உருவமும் மாறிப் போயிருந்தது. ஆனால், இதைப் பற்றி யாரும் குறிப்பிட்டு எழுதியதாக நினைவில்லை. எனவே, அம்பேத்கர் படத்தில் ரெட்டமலை சீனிவாசன் உருவம் குறித்து பதிவு செய்து வைத்துவிடுவோமே என்பதற்காக இதை எழுதுகிறேன். அவ்வளவே!
இணைப்பு:
இன்றைய விடுதலையின் ஒற்றைப்பத்தியில் இரட்டைமலை சீனிவாசன் பற்றிய மயிலாடன் குறிப்பு!
கருத்துகள்