முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சின்னக்குத்தூசி - சில நினைவுகள்


திராவிட இயக்க சிந்தனையாளர், எழுத்தாளர், இதழாளர் சின்னக்குத்தூசி அவர்கள் நேற்று (22.5.2011) காலை இயற்கை எய்தினார். திருமணம் செய்துகொள்ளாமல் கூட தன்னை முழுமையாக இயக்கத்துக்கும் கொள்கைக்கும் ஒப்படைத்துக் கொண்ட கொள்கை வீரர். பிறப்பால் பார்ப்பனர் தான்... ஆனால் அதற்கான எந்த அடையாளமும் குணத்தின் எந்தத் துளியிலும் இருக்காது. உண்மையில் இவர் தான் அக்கிரகாரத்தின் அதிசய மனிதர். பொதுவுடைமை இயக்கத்தவருடன் பணியைத் தொடங்கி, திராவிட இயக்கத்தில் இணைந்து இறுதிவரை கொள்கையில் உறுதியாய் இருந்தவர்.

1996-97-க்குப் பிறகு நக்கீரனில் அவர் எழுதத் தொடங்கியிருந்தார். பதின்ம வயதின் தொடக்கத்தில் வாசிப்பு வேகம் கூடியிருந்த எனக்கு, நக்கீரனில் ஆதாரத்துடன், திராவிட இயக்க உணர்வுடன் வெளிவரும் சின்னக்குத்தூசியின் கட்டுரைகள் ஈர்ப்பை அளித்தன. அவர் யாரென விசாரித்த போது, ”பிறப்பால் பார்ப்பனர். ஆனால் உறுதியான பெரியார் பற்றாளர். கடுமையான திராவிடர் இயக்க உணர்வாளர்” என்று சாக்ரடீசு அண்ணன் சொல்லியிருந்தார். எனக்கோ பெரிய ஆச்சரியம். இப்படியொரு மனிதன் இருக்க முடியுமா?

பின்னர் ’பொன்னர் - சங்கர்’ படித்த போது, அதில் கலைஞரின் முன்னுரையில், தியாகராசன் என்ற சின்னக்குத்தூசி என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார். அவரின் இயற்பெயரை அப்போது தான் அறிந்து கொண்டேன். தொடர்ந்து அவர் எழுதிய நக்கீரன் கட்டுரைகள் பலவற்றை எனது கோப்புகளில் இன்றும் வைத்திருக்கிறேன். குறிப்பாக, பாரதிய ஜனதா அரசின் இந்துத்துவ போக்குகளைப் போட்டுடைத்த கட்டுரைகள், வந்தேமாதரம் பாடல், தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னது ஏன்? போன்றவை.

’சங்கராச்சாரியார்-யார்?’ என்ற ஆசிரியரின் ஆய்வு நூலிலும் இவருடைய பணியை அறிந்தேன். சங்கராச்சாரியை ‘எதிரொலி’ ஏட்டுக்காக, சின்னக்குத்தூசியும், ஞாநியும் எடுத்த பேட்டி குறுநூலாக வந்திருந்தது. அதில் தான் உளறுவாயன் ஜெயேந்திரன் பல விசயங்களை ஒப்புக் கொண்டிருந்தான். ’பகவான்ட்ட வேண்டிண்டதால தான் கருணாநிதி படுத்துட்டார்’ என்று காய்ச்சலில் கலைஞர் பாதிக்கப்பட்டதைப் பற்றி மகிழ்வோடு பேசியது, ஆசிரியர் வீரமணியைப் பேட்டியெடுக்க கேள்விகளைத் தயார் செய்து ‘சோ’ ராமசாமியை அனுப்பியது, எதைப் படிக்க மறந்தாலும், ”விடுதலை’யையும், முரசொலியையும் முதல் ஆளா படிச்சிடுவேன்” என்று ஒப்புக் கொண்டது உள்பட.

அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலும் அதற்குள்ளாக எனக்குள் வந்திருந்தது. காலப்போக்கில், ஊடக ஆர்வம் என்னை சென்னைக்கு இழுத்து வந்தபின் திடலில் நடைபெறும் ஆசிரியரின் உரை கேட்க நண்பர்களோடு வருவார் சின்னக்குத்தூசி. மெலிந்த உடல். தலையும், அணிந்திருக்கும் கண்ணாடியும் உடலுக்குப் பொருத்தமற்றதாக இருக்கும். உடுத்தியிருக்கும் வெள்ளுடைக்குப் போட்டியிடும் அவரின் நிறம். 

அரிதாய்க் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அண்ணனுடன் மூத்த தோழர்களைச் சந்திக்கச் செல்வதுண்டு. அப்படி ஒருமுறை இதழாளர்களின் வேடந்தாங்கல் என அறியப்படும் 13, வல்லப அக்கிரஹாரம் தெருவில் உள்ள சிறிய அறைக்குச் சென்றோம். நூல்களாலும், இதழ்களாலும் சூழப்பட்ட அறைக்குள் ஓர் அறிவுக் களஞ்சியத்துக்குள் களஞ்சியமாக அமர்ந்திருந்தார். என்னை திரைப்படக் கல்லூரி மாணவன் என்று அறிமுகப்படுத்திவிட்டு, ’உண்மை’யில் தொடர்ந்து நான் எழுதி வருவதைப் பற்றிச் சொன்னார் அண்ணன். உண்மை முன்பை விடச் சிறப்பாக வருவதைப் பற்றியும், நான் எழுதி வருவதைப் பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்த அய்யா சின்னக்குத்தூசி, “நானும் ஒரு ஆறு மாசம் ’உண்மை’யை கவனிச்சுக்கிட்டிருந்தேன் சார். ஆசிரியர் பார்க்கச் சொன்னார். இப்போ நல்லா வருது சார்.” என்று மனதாரப் பாராட்டினார். உண்மை இதழைப் பார்த்துக் கொள்ளச் சொல்லும் அளவுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்திருக்கிறார் என்பது மேலும் ஆச்சரியமூட்டியது. அப்போதே எனக்குத் தோன்றியது ஓர் எண்ணம். அது ஆசையாகவும் ஆனது. 

இரத்த உறவுகள் இன்றி, முற்றிலும் நண்பர்கள், தோழர்கள், கொள்கை என்றே வாழ்ந்துவிட்ட சின்னக்குத்தூசி அவர்கள், தனது மரணத்திற்குப் பின் தன் இறுதி நிகழ்வின் செலவுகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை, தான் தங்கியிருந்த மேன்சன் உரிமையாளரிடம் கொடுத்து வைத்திருக்கிறார் என்று நான் கேள்விப்பட்ட தகவல் சின்னக்குத்தூசியின் மீதான மதிப்பை, அன்பை இன்னொரு பங்கு உயர்த்தியது.

சந்திப்பு முடிந்து வெளியில் வந்ததும், அண்ணனிடம் என் எண்ணத்தைச் சொன்னேன். சின்னக்குத்தூசியைப் பற்றிய ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்பது தான் அது. இவ்வெண்ணம் குறித்து தோழர் இதழாளர் கோவி.லெனின் அவர்களிடமும் பகிர்ந்து கொண்டோம். நக்கீரனில் பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல், சின்னக் குத்தூசி அவர்களின் நெருங்கிய நண்பரின் மகன் தான் கோவி.லெனின். அவருக்கும் அது அவசியம் என்றே பட்டது. நாங்களும் சின்னக்குத்தூசி அவர்களிடம் அனுமதி கேட்டோம். லெனின் மூலமாகவும் கேட்டோம். வேண்டாம் என்றே சொல்லிக் கொண்டிருந்தார். 

பெரியார் திடலில் இதழாளர் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்ட போது அவரை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால் உடல்நலமில்லாமல் அப்போதே அவர் மருத்துவமனை புகுந்து 5 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. இதைச் சாக்காக வைத்தாவது அவரைப் பேசச் செய்து பதிவு செய்துவிட வேண்டும் என்று நினைத்தேன். அப்போது அதற்கும் வாய்ப்பில்லாத சூழலில் அவர் உடல்நலம் கடுமையாய் பாதிக்கப்பட்டிருந்தது. 

கடந்த மாதம் தேர்தல் முடிந்து, 10 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அவரைச் சந்தித்துவிட்டு வரலாம் எனக் கிளம்பிய அண்ணனுடன் சென்றிருந்தேன். எங்களுக்கு முன்பே அய்யா கோபண்ணா அங்கே அமர்ந்திருந்தார். ஓராண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனைப் படுக்கையிலேயே இருந்த சின்னக்குத்தூசி அவர்களுக்கு கோபண்ணா, பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு போன்ற தோழர்கள் தான் பேச்சுத் துணை. இதற்கு முதல்வாரம் தான் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சென்று பார்த்துவிட்டு வந்தார். வாய்ப்புக் கிடைக்கும் போது ஆசிரியரும் சென்று பார்த்து நலம் விசாரித்து வருவார். நக்கீரன் சார்பில் பார்த்திபன் மற்றுமொரு தோழர் என இருவர் மாற்றி, மாற்றி அய்யாவைக் கவனித்துக் கொண்டிருந்தனர். கடந்த ஓராண்டுகளாக பில்ரோத் மருத்துவமையில் நக்கீரன் கோபால் அவர்களின் கவனிப்பில் தான் பாதுகாக்கப்பட்டார்.

”சாவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்.என்னை மருத்துவமனையில் இருந்து விடுவித்துவிட்டால் கூடப் போதும். நான் அப்படியே இரண்டொரு நாளில் இறந்துவிடுவேன். மருத்துவர்களிடம் கெஞ்சிப் பார்த்துவிட்டேன். ஒப்புக் கொள்ளமறுக்கிறார்கள்” என்று அவர் சொல்லும் போது, யாரையும் சார்ந்து இருக்காமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருந்த ஒரு மனிதனுக்கி, தனக்கு பிறர் சார்பு அவசியமாகிவிட்டது என்பதே பெரும் பாரத்தைத் தந்திருந்தது என்பதை உணர முடிந்தது.  கவிஞரிடம் இதைச் சொல்லும்போது, சின்னக்குத்தூசி அவர்களுக்குக் கண்களில் நீர் வழிந்ததாம். மிகுந்த வருத்தத்தோடு ஏற்கெனவே கவிஞர் இது பற்றி சொன்னார். 

நேரில் அதே வாசகங்களைக் கேட்டது இன்னும் வருத்தத்தை அளித்தது. அந்த நிலையிலும், தனது நண்பரின் (லெனின் அப்பா) உடல் நலம் குறித்துக் கவலைப் பட்டு அதற்காக ஆசிரியரிடம் ஆலோசனை கேட்டிருப்பதாவும், அவரிடம் நினைவுபடுத்துமாறும் கேட்டுக் கொண்டார் சின்னக்குத்தூசி. அன்னா ஹசாரே குறித்த தகவல்கள் வேண்டும் எனக் கேட்டிருந்தார். விடுதலையில் வந்தவற்றையும், The Hindu கட்டுரைகளும் கேட்டார். படிக்கச் சிரமமாயிருந்தாலும், படிக்கச் சொல்லிக் கேட்பதும், சொல்லி எழுதச் சொல்வதும் அவரை ஓரளவு காத்துவந்தன.

கடந்த இரு தினங்களுக்கு முன், என் அண்ணனுக்கு தொலைபேசியிருக்கிறார். அண்ணனும் சென்று சந்தித்துவிட்டு வந்தார். நேற்று காலை பெரியார் சாக்ரடீசு அண்ணன் சின்னக்குத்தூசி மறைந்த தகவலை தெரிவித்தபோது வேதனையோடு, நக்கீரன் அலுவலகத்துக்குச் சென்றோம். அவருடன் பணியாற்றியோர், அவரைப் பின்பற்றியோர், அவர் மீது அன்பு கொண்டோர் என தோழர்களால் நிரம்பியிருந்தது அந்த இடம். நக்கீரன் கோபால், க.திருநாவுக்கரசு ஆகியோரோடு ஆறுதலைப் பகிர்ந்துகொண்ட ஆசிரியர் கி.வீரமணி சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக அவர் உடல் அருகிலேயே நின்று கொண்டிருந்தார். உட்காரச் சொன்னபோது கூட மறுத்துவிட்டார். கலைஞர் காலையிலேயே வந்து சென்றுவிட்டார். அவரது பேனா மூடப்பட்டு சட்டையில் சொருகப்பட்டிருந்தது... திராவிட இயக்கச் சிந்தனையைப் பதிவு செய்துகொண்டிருந்த அந்தப் பேனா ஓய்வு கொண்டுவிட்டது.

எவ்வித மூடநம்பிக்கைகளுக்கும் இடமின்றி நடைபெற்றது இறுதி ஊர்வலம். ராயப்பேட்டை நக்கீரன் அலுவலகத்திலிருந்து, மயிலாப்பூர் மயானம் வரை ஊர்வலத்தில் நடந்து வந்தார் தளபதி மு.க.ஸ்டாலின். உடன் பரிதி இளம்வழுதி, மேயர் மா.சுப்பிரமணியம், அசன் முகமது ஜின்னா, ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மயான வாயிலில் காத்திருந்த தமிழர் தலைவர் கி.வீரமணி, ஆற்காடு வீராசாமி ஆகியோரும் இணைந்து கொண்டனர். பத்திரிகையாளர்கள் சூழ வீரவணக்க முழக்கம் ஒலிக்க இறுதி நிகழ்வு நடந்து முடிந்தது. கட்சி வேறுபாடில்லாமல்

இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு முறை உண்மைக்காக ஒரு கருத்துக் கேட்க வேண்டும் என்ற காரணத்தைப் பயன்படுத்தி, அவரிடம் சொல்லாமல்கூட,  கையுடன் வீடியோ கேமராவையும் எடுத்துச் சென்றுவிட்டோம் நானும் உடுமலையும். அப்படியே பேச்சுக் கொடுத்து கொஞ்சம் நீளமாக வளர்த்துவிடலாம் என்ற நப்பாசை. கேமராவைத் தூக்கியதும், அவருக்கே உரிய குரலில், மெதுவாக ஆனால் உறுதியாக, ’முதல்ல அதை உள்ளே வையுங்க சார்’ என்று மூடி உள்ளே வைக்கும் வரை விடமாட்டேன் என்றுவிட்டார். கடைசிவரை அவரைப் பற்றிய ஆவணப்படம் அல்லது குறைந்தபட்சம் அவருடைய ஒரு காணொளிப் பேட்டியைக் கூட எடுக்க முடியவில்லை. அவரது மறைவையும், இறுதி ஊர்வலத்தையும் விடாமல் பதிவுசெய்தன நக்கீரன், பெரியார் வலைக்காட்சி கேமராக்கள். தடுப்பதற்கு அவரால் முடியவில்லை.
----------------------------------------------------------------------
படத்திறப்பு நிகழ்வு:
வருகின்ற மே. 29 ஞாயிறு அன்று சென்னை பெரியார் திடலில் சின்னக்குத்தூசியின் படத்திறப்பு விழா நடைபெறவுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தளபதி மு.க.ஸ்டாலின், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், நக்கீரன் கோபால் மற்றும் இதழாளர்கள் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
கொள்கை வீரனான தோழனை இழந்த வருத்தத்துடன் தமிழர் தலைவர் கி.வீரமணி

இறுதி வரை உறுதியாய் நின்ற அக்கிரகாரத்து அதிசய மனிதருக்கு, அய்யாவின் வழித்தோன்றலின் இறுதி மரியாதை. உடன் நக்கீரன் கோபால், கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு (நக்கீரன் அலுவலகத்தில்...)

இறுதிக் காலத்தில் சின்னக்குத்தூசியைப் பாதுகாத்த நக்கீரன் ஆசிரியரும் ஆசிரியரும் ஆறுதல் பகிர்வு

எப்போதும் சமூக சீர்திருத்தத்திற்கான சிந்தனையை விதைத்துக் கொண்டிருந்த பேனா ஓய்வெடுக்கிறது சின்னக்குத்தூசியின் சட்டைப் பையில்..

இறுதி மரியாதை செலுத்த வந்த மு.க. தமிழரசு

இதழாளர்கள், கொள்கை உணர்வாளர்களோடு இறுதிப் பயணம்

மறைந்த திராவிட இயக்கச் சிந்தனையாளர் சின்னக்குத்தூசி அவர்களின் இறுதி ஊர்வலத்தில் முழுக்கப் பங்கேற்று அந்தக் கொள்கை வெறியனுக்கு மரியாதை செய்த தளபதி! உடன் பரிதி இளம்வழுதி, ஜெ.அன்பழகன், அசன் முகமது ஜின்னா, மா.சுப்பிரமணியன் 
சாலையில் நின்றோரெல்லாம் மறைந்தவர் யாரென்று கேட்டபடி தோழர்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சுயநலம் பாராத கொள்கை வீரனுக்கு தளபதியின் மரியாதை


இதழாளரின் மாலை நேர வகுப்பாசிரியராக இருந்த சின்னக்குத்தூசியின் மாணவர்கள் - இன்றைய இதழாளர்கள்

இறுதி மேடையில் சின்னக்குத்தூசியின் உடல்... சூழ்ந்து நிற்கும் தமிழ்ச் சொந்தங்கள்
வெந்தணலில் இட்டாலும் மாறாத கொள்கைக் கோமான் தகனமேடையில்..
தோழனை இழந்த வருத்தத்துடன் கவிஞர் கலி.பூங்குன்றன், பாலகிருஷ்ணன், கயல் தினகரன்
மே 29 அன்று சின்னக்குத்தூசியாரின் படத்திறப்பு நிகழ்வுக்கு திட்டமிடல்.. நிகழ்வு இடம்:பெரியார் திடல்


கருத்துகள்

ஜோ/Joe இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழ்ந்த அஞ்சலி! வாழ்க சின்னக்குத்தூசி ஐயா புகழ் !
vijayan இவ்வாறு கூறியுள்ளார்…
பொதுஉடைமை இயக்கத்தோழர் EMS .நம்பூத்ரி பாட்டை போல சொந்த வாழ்க்கையில் ஒரு காந்தியனாக எளிய வாழ்வு வாழ்ந்திருக்கிறார் திரு.சின்ன குத்தூசி.அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்வல்லானை வேண்டுகிறேன்.தமிழ்நாட்டை ஊழல் சமுத்திரத்தில் மூழ்கி எடுத்த திராவிட இயக்கங்களை எப்படி அவர் ஆதரித்து எழுதினார் என்பது அதிசயமாக இருக்கிறது.
ரோகிணிசிவா இவ்வாறு கூறியுள்ளார்…
avarai patri niraya visayangal ariya thantharku nandri.
RIP
ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
அவர் திருவல்லிக்கேணி ஸ்டார் திரை அரங்கின் எதிர் தெருவில் இருந்த மேன்சனில் முன்பு குடி இருந்தார்.
இறுதியில் எங்கு வாழ்ந்தார்
நா. கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் ப்ரின்ஸ்,

நலமா?

சின்னக்குத்தூசியாரின் நூல்களை வாங்கிப் படிக்கத் தூண்டும் பதிவு.

விடுதலை இணையப் பதிப்பை பயனர் தேர்ந்தெடுத்தால் (ஆப்ஷன்) உ, ஊ சீர்மை டைனமிக் எழுத்துருவில் (யூனிக்கோட்) தெரிய ஏற்பாடு செய்யுங்கள். திரு. வீ. அன்புராஜ், திரு. சாக்ரடீஸ், உங்களுக்கும் மடல் எழுதுகிறேன். தந்தை பெரியார் எழுத்துச் சீர்மை தமிழ்க் கல்விக்கும், பல சூழலில் வாழும் தமிழர்தம் குழந்தையர் எழுத்தை மறவாது இருக்கவும் மிக உதவும். பெரியாரின் சீர்மையை இணைய உலகுக்குக் கொண்டுவாருங்கள். நீங்கள் செய்தபின்னர் இன்னும் சில வலைத்தளங்கள் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்கள். உ-ம்: காந்தளகம்.

அன்புடன்
நா. கணேசன்
nanban இவ்வாறு கூறியுள்ளார்…
திரு. சின்ன குத்தூசி ஒரு முழு பகுத்தறிவாளர் . ஆத்மா என்ற மூட நம்பிக்கையில் உடன்பாடு இல்லாத அவருக்கு இரங்கல் செலுத்தும்போது ஆத்மா , எல்லாம்வல்ல போன்ற சொற்களை பயன்படுத்தாமல் இருப்பதுதான் நாகரீகம்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Hey - I am definitely glad to find this. Good job!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…