தந்தை பெரியாரின் கொள்கைகளை புத்தகங்கள் மூலம் நாளும் பரப்பும் அரும்பணி ஏற்றிருந்த தோழர் செங்கை பூ.பூபதி அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தையும், தாங்கொணாத துயரத்தையும் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. 14.02.2011 இரவு 7 மணிக்கு தனது சொந்த ஊரான செங்கல்பட்டில் வயது நாற்பதுக்குள் தான் என்றாலும், காசநோய் தீவிரத்தின் காரணமாக இறப்பு நிகழ்ந்திருக்கிறது. கடந்த சனிக்கிழமையன்று அவரைத் திடலில் சந்தித்தேன். உடல்நிலை குறித்து கேட்டபோது, எப்போதும் போல் இருப்பதாகச் சொன்னார்.. உடலின் சோர்வை உழைப்பில் காட்டாமல்!
எப்போதும் வருத்தும் உடல்நிலையைக் குறித்தும் கவலை கொள்ளாமல் கொண்ட கொள்கைக்காக களப்பணியாற்றும் சுயமரியாதை வீரர். யாருடைய உதவியையும் எவ்விதத்திலும் ஏற்கமாட்டார்; யாருடைய பரிதாபத்தையும் கோர மாட்டார். அவருடைய உடல்நிலை மோசமாகும் சமயத்தில் எல்லாம், தென்சென்னை, வட சென்னை, தாம்பரம் கழகத் தோழர்கள் தான் அவருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வார்கள். அவற்றையும் கூட ஒருவித தயக்கத்துடனே ஏற்றுக் கொள்வார்.
சென்னையைச் சுற்றி திராவிடர் கழகத்தின் சார்பில் எங்கு கூட்டம் நடந்தாலும், அது தெருமுனைக் கூட்டமோ, மாநாடோ, நெடுந்தொலைவோ, போக்குவரத்து வசதி இருக்கிறதோ இல்லையோ, புத்தகம் விற்குமோ விற்காதோ எப்படியிருந்தாலும், புத்தகங்களைக் காட்சிக்காகவாவது வைத்துவிட்டு வருவோம் என்று கிளம்பிவிடுவார். கட்டுக் கட்டான புத்தக மூட்டைகளைத் தானே சுமந்துவரும் அவரிடம், அவற்றைக் கொடுங்கள் நாங்கள் எடுத்து வருகிறோம் என்று கேட்டாலும் தர மாட்டார். பனி பெய்யும் மாதங்களிலும், தலையையும் காதையும் மூடிய மப்ளரோடு புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு கூட்டங்களுக்குச் சென்று நள்ளிரவுக்கு அப்பாலும் பெரியார் திடலுக்கு திரும்புவார்.
பாசத்திற்குரிய அண்ணன் அறிவுமதி அவர்கள் விருப்பப்பட்டு
எடுக்கச் சொன்ன படம். (இடம்: வி.ஜி.பி.தங்கக் கடற்கரை)
பூபதியுடன் எழுத்தாளர் பாமரன்
திராவிடர் கழகக் கூட்டங்கள் என்று மட்டும் இல்லை; முற்போக்கு சிந்தனையுடைய கூட்டம் எங்கு நடந்தாலும் அங்கே அவர் புத்தக விற்பனை இருக்கும். பெரியார் திடலின் உத்தியோகப்பூர்வ ஊழியர் கிடையாது. ஆனால் திடல் குடும்பத்தில் அவர் ஒருவர். எனக்குத் தெரிந்து கடந்த 7 ஆண்டுகளாக திடலில் தான் அவருடைய வாசம். எங்கே எந்த சூழலில் எந்தப் புத்தகத்தைக் கொண்டு சென்று படிக்க வைக்கலாம் என்பது அவருக்கு நன்கு தெரியும்.
யாரிடமும் ஒரு பைசாவும் கடன் வாங்கும் பழக்கம் அவருக்குக் கிடையாது. புத்தகம் விற்கும் கழிவுத் தொகையில் தான் அவருடைய வாழ்க்கை என்றாலும், முதல் முயற்சியில் இருக்கும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்களிடம் அதற்காகப் பெரும் இடைஞ்சல் தரமாட்டார். புத்தகம் பதிப்பிப்பவர்கள், விற்பனையாளர்களிடம் இருந்து உரிய தொகையைப் பெறுவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். ஆனால் பூபதி இவற்றிலெல்லாம் ”பெரியாரைப் பின்பற்றுபவன்; எப்படிப்பட்ட நேர்மையாளனாக இருப்பான்” என்பதற்கு சான்றாக இருந்தவர்.
பெரியாரின் கொள்கை பரவுவதற்கு தன்னை முழுமையும் ஒப்படைத்துக் கொண்டவர். போராட்டக் களங்கள், மாநாடுகள் என அனைத்திலும் பங்கேற்பவர். கூட்டங்களுக்கோ, திடீர் போராட்டங்களுக்கோ அவசரத்தில் இவரை அழைக்காமல் போய்விட்டால் உரிமையோடு கோபித்துக் கொள்ளக்கூடியவர். குழந்தைகள் மேல் அபார பிரியம் கொண்டவர். அதே நேரம் தனக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாதென்பதிலும் எச்சரிக்கையோடு இருக்கக் கூடியவர். ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளில் தேநீர்க் கடைகளிலும், உணவகங்களிலும் வேலை பார்த்த தனது இளமைக் காலத்திற்குப் பிறகு, திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பின் தனது உயிர்மூச்சாக பெரியாரைக் கருதியவர்.
முதன் முதலில் தனியாளாக இயக்கத்துக்கு வந்த பூபதி, தொடர்ந்து தனது அண்ணன், குழந்தைகள், அண்ணி என்று குடும்பத்தையே இயக்கக் குடும்பமாக மாற்றிய சாதனையாளர். அவருடைய அண்ணன் பூ.சுந்தரம் இன்று செங்கல்பட்டு கழக மாவட்ட அமைப்பாளராகவும், அண்ணி ஆனந்தி - திராவிடர் மகளிர் பாசறை பொறுப்பாளராகவும் இருந்து களப்பணியாற்றி வருகிறார்கள்.
உலகத் தமிழ் மக்கள் அரங்கம் (Orkut) நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தோழர் உடுமலையுடன்...
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தோழர் உடுமலையுடன்...
அவரைப் போற்றவும், அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பவும் தான் பலரால் முடிந்ததே தவிர, அவருக்கு இணையாக பணியாற்ற முடிந்ததில்லை. யார் பின்வாங்கினாலும் தான் பின்வாங்காதவர். சிகரெட் உள்ளிட்ட எந்த பழக்கங்களும் இல்லாவிட்டாலும் கூட காசநோய் தீவிரம் காரணமாக எப்போதும் தனக்கு மரணம் நேரலாம் என்பது தெரிந்தும், கடைசி வரை தீவிரமாக உழைத்தவர். ஒவ்வொரு கூட்டத்திலும் வாசலில் புத்தகம் விற்கும் பூபதியை நான் புகைப்படம் எடுக்காமல் போவதில்லை. அப்படி விட்டுவிட்டாலும் அவரே அழைத்துவிடுவார். குழந்தையைப் போல கோபித்துக் கொள்வதும், தலை சாய்த்துச் சிரிப்பதும், கொடகொட என்று பேச்சும் அவருடைய தனி இயல்புகள்.
நான் இயக்கிய ‘திற’ குறும்படத்தில் அவரும், அவருடைய அண்ணன் மகள்கள் இருவரும் நடித்திருந்தனர். அதில் ஷகினாவை தூக்கிக் கொண்டு வந்து மருத்துவமனையில் கிடத்தும் குழுவில் இவரும் ஒருவர். வடநாட்டார் முகச்சாயலை ஒத்திருந்ததால், அவருக்கும் ஹிந்தியில் பேச ஒரு வசனம் கொடுத்திருந்தோம். அவர் ஆர்வத்தோடு, அதை எழுதி வாங்கி மனப்பாடம் செய்து கொண்டு வந்து பேசினார். அவர் பேசிய பேச்சுக்கு இணையாகக் குரல் பதிவு(dubbing) செய்வதற்குள் பெரும்பாடாகிவிட்டதென்பதும், கிட்டத்தட்ட 10 பேர்கள் பேசிப் பார்த்து அவருடைய உருவத்துக்கு சரியான குரல் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் கூடுதல் சுவாரஸ்யமான தகவல்கள். இதன் காரணமாகவே அவரை ‘ரஜினிக்கு அடுத்து உங்களுக்குத் தான் இந்த ஸ்பீடு பேச்சு’ என்று கிண்டல் செய்ததும் உண்டு.
![]() |
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களைப் பற்றி அவதூறாக எழுதிய “இந்தியா டுடே”வைக் கொளுத்தும் போராட்டத்தில் செங்கை பூபதி |
அவரை விளையாட்டாக, புரட்சிப் புயல் என்றும் செங்கை சிங்கம் என்றும் அழைப்போம். “சார்.. சார்... என்னப் போயி அவரோட ஒப்பிடுறீங்களே.. நான் வேட்டிதான் (கொள்கை) முக்கியம்னு நினைக்கிறவன் சார். எனக்கு வெறும் துண்டு தேவையில்ல சார்” என்பார் சிலேடையுடன்!
பொதுச்செயலாளர்கள் கவிஞர் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு மற்றும் பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான் ஆகியோர் சென்னையில் எங்கு கூட்டத்திற்குச் சென்றாலும் தானும் உடன் சென்று உதவுபவர். பெரியார் திடல் பணியாளர்களுக்கெல்லாம் பொங்கல் புத்தாடை எடுத்துத் தந்த அண்ணன் அன்புராஜ், பூபதிக்கும் ஒன்று எடுத்துக் கொண்டு வந்து வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்டு பூபதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களைப் பற்றி அவதூறாக எழுதிய “இந்தியா டுடே”வைக் கொளுத்தும் போராட்டத்தில் செங்கை பூபதி
அண்மையில் ”2ஜி அலைக்கற்றை: உண்மை என்ன? பின்னணி என்ன?” நூலை பெருமளவில் விற்று, அதில் தனக்குக் கிடைத்த கழிவுத் தொகையைக் கொண்டு வந்து, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் நன்கொடையாக வழங்கினார். ”நீ வச்சுக்கய்யா.. உடம்பைப் பார்த்துக்க... ” என்று ஆசிரியர் அன்போடு மறுத்தபோதும், ”இதை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு கொடுத்துவிடுங்கள்” என்று உறுதியாக அதை ஆசிரியர் அவர்களிடமே தந்துவிட்டார்.
தலைவர், தொண்டர் யாராயினும் தனக்கு சரியென்று பட்டதை எடுத்துச் சொல்லும் துணிவாளர். கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகச் சொற்பொழிவாளர் பெரியார் செல்வம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஆர்.எஸ்.எஸ். காலிகள் செய்த வன்முறையின் போது கூட்டத்தின் ஒருபகுதியில் புத்தகம் விற்றுக் கொண்டிருந்த பூபதி தாக்கப்பட்டு காயமடைந்தார். ஒவ்வொரு கூட்டத்திலும் ஏதோவொரு இருட்டு மூலையில் புத்தகம் விற்றுக் கொண்டிருக்கும் இவருக்கு மிரட்டல்களும் எதிர்ப்புகளும் உண்டு. அந்த எதிர்ப்புகளெல்லாம் அவரை கட்டிப் போட்டுவிடவில்லை.
அவரிடம் வந்து வம்பிழுக்கும் பலர், அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தான் ஓடியிருக்கிறார்கள். கொள்கையையும், தலைமையையும் எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்க மாட்டார். இன எதிரிகளும், துரோகிகளும் இவரிடம் பேச்சுக் கொடுக்கவே அஞ்சுவர். ’பட்’ பட்’டெனத் தெறிக்கும் பதில்களில் அதுவரை யாரும் சிந்திக்காத கோணம் இருக்கும்.
சான்றுக்கு ஒன்று:
”பூபதி, புத்தகம் போட்டிருக்கிறோம். அதை விற்பனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். வழக்கமான அளவை விடக் கழிவு கூடுதலாக எடுத்துக் கொள்” என்றார் ஒருவர்.
”நான் எல்லாப் புத்தகங்களையும் விற்பதில்லை. கொள்கைப் பிரச்சார நூல்களைத் தான் விற்கிறேன்.” என்றார் பூபதி.
“நாங்களும் பெரியார் நூல்களைத் தான் வெளியிட்டிருக்கிறோம்” என்று இடைமறித்தார் கேட்டவர்.
“நான் நல்ல நோட்டை வச்சிருக்கிறேன். நீ கள்ள நோட்டைக் கொண்டுவந்து விற்கச் சொல்லுகிறாயே! நியாயமா சொல்லு” என்றார் பூபதி. அதன்பிறகு வந்தவர் வாயை மூடிக் கொண்டார்.
ஆம். எப்போதும் கள்ள நோட்டு புழங்காத தூய்மை பூபதிக்கு சொந்தம். பூபதியைப் போன்ற கொள்கைப் பற்றாளர்கள், உறுதியாளர்கள் திராவிடர் கழகத்திற்கே சொந்தம்! அவருக்கு என்றும் நம் வீரவணக்கம்!
வாழ்க பூபதி! பெருகட்டும் பூபதியைப் போன்ற களப் பணியாளர்கள்!!
![]() |
காலம் முழுக்க அவர் சுமந்து விற்ற புத்தகங்கள் இன்று அவரின் நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கின்றன... |
கருத்துகள்
வீரவணக்கம் தோழரே!
மானமிகு பூபதி அவர்களுக்கு வீர வணக்கங்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் அவரைப் போன்ற வழியில் ஏதேனும் கழக பரப்புரையில் நடக்க உறுதி ஏற்கிறேன்.
திறவில் கண்ணுற்ற முகம் நேரில் காண முடியாமை குறித்து வருத்தங்கள் தாம் எனினும் நிறைவான வழியில் வாழ்ந்த மானமிகு தோழருக்கு அன்பான வீர வணக்கங்கள்!!!
வா. நேரு, மதுரை