Kavin Malar கவின் மலர்
ஒரு கவிமனது தற்கொலையை நோக்கி அவ்வபோது பயணித்துச் சென்று பின் மீண்டும் இயல்புக்குத் திரும்புவது வாடிக்கையானது. வாழ்நாளில் ஒருமுறையேனும் தற்கொலை எண்ணம் வராத அளவுக்கு மனிதர்கள் அத்தனை இன்பமான வாழ்க்கை வாழ நம் சமூகத்தில் பணிக்கப்பட்டிருக்கவில்லை. அவரவர் தற்கொலை எண்ணத் தருணங்களை மீண்டும் எண்ணிப்பார்க்க வைக்கிறது கவிதை. பாபுவின் கவிதையில் 1.40 என்றால் எனக்கு 2.40 ஆக இருக்கலாம். உங்களுக்கு 3.40 ஆக இருக்கலாம். ஆனால் ஒரு நாளின் எல்லா நொடியிலும் உலகின் எந்த மூலையிலாவது யாராவது ஒருவர் தற்கொலை எண்ணத்துடன் மடிந்துகொண்டிருக்கலாம் அல்லது முயன்று கொண்டிருக்கலாம். அந்த நொடியை நினைத்துப் பார்த்து அச்சங்கொள்ளவோ அல்லது அப்பாடா என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளவோ வைக்கிறது இந்தக்கவிதை. கவிதையில் ‘அம்முவோ தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறாள்’ என்கிற வரிகளே முக்கியமானவை. இந்த வரிகள் இல்லையெனில் இந்தக் கவிதை இல்லை. ஒருவேளை அம்மு தொடர்பு எல்லைக்குள்ளேயே இருந்திருந்தால் இந்தக் கவிதை நமக்குக் கிடைத்திருக்காதோ என்னவோ? ஒவ்வொரு மனமும் துயரங்கள் அழுத்துகையில் ஓர் அம்முவின் ஆறுதல் வார்த்தைகளுக்காகத்தானே துடிக்கிறது? அம்முவுடன் ஒரு வார்த்தை பேசிவிட்டால் தற்கொலை எண்ணம் மறைந்துவிடும். எல்லோருக்காகவும் ஒரு அம்மு இருப்பாள் அல்லது இருப்பான். அந்த அம்மு ஒரு தோழியாகவோ, நண்பனாகவோ, நூலாகவோ, இசையாகவோ கூட இருக்கக்கூடும். ஆனால் தற்கொலைகளைத் தவிர்க்க அம்முக்கள் அவசியம். யாரிடமாவது இரண்டு வார்த்தைகள் பேசிடத் துடிக்கும் மனதுக்கு எல்லோரும் அம்முவாகிவிட முடியாது என்றாலும் நாமும் அம்முவாக முயலலாம்.
- வே.பாபு(Babu Thakkai Babu) வின் ‘மதுக்குவளை மலர்’ கவிதைத் தொகுப்புக்கான விமர்சனத்திலிருந்து....
-----------------------------------------------
இதைப் படித்த பின், விருப்பம் போடுவதற்குக் கூட ஒவ்வொரு பிக்சலாக, மவுசை நகர்த்தியது கை! அவ்வளவு தான் அதற்கு வலுவிருந்தது. மேல் கீழாக, கீழ் மேலாக, இடையிலிருந்து.... என்று மீண்டும் மீண்டும் படிக்கிறேன் - இந்த விமர்சனத்தை! எப்படியாவது அந்தக் கவிதையை இந்த நொடியே படித்துவிட வேண்டும் என்று துடிக்கிறது மனம்!இணையத்தில் தேடிக் கிடைத்த (http://malaigal.com/?p=572) ஓரு சில வரிகளோடு, ‘அம்முவோ தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறாள்’ என்ற வரிகள் எங்காவது பொருந்துகின்றனவா என்று அலைகின்றன கண்கள்! ப்ச்...
இந்த வரியைத் தேடித் தேடி எண்ணற்ற அம்முக்கள் கிடைக்கிறார்கள் இணையத்தில்! ஒவ்வொன்றிலும் நுட்பமான ஏதோ ஓர் உணர்வு அழுத்துகிறது. http://vinaiooki.blogspot.in/2012/07/blog-post.html, http://dhineshmaya.blogspot.in/2010/12/blog-post_22.html
மீண்டும் இந்த விமர்சனத்திற்கே வந்து படிக்கிறேன். 50 ரூபாய் தான் புத்தகம்.. அதற்கு 21 ரூபாய் அஞ்சல் செலவு சொல்லும் டிஸ்கவரி புக் பேலஸ் இணையதளத்தில் இன்னும் இரண்டு புத்தகங்கள் சேர்த்தால் எவ்வளவு அஞ்சல் செலவு என ’எண்’ணிப் பார்க்கிறேன்! ம்ம்ஹூம்... இன்னும் அவசரம் தணியவில்லை. புத்தகம் வந்துசேர இரண்டு நாட்களாவது ஆகும். இன்றைய பணிகளின் நடுவில் பயணிக்கும் போது எந்தப் புத்தகக் கடையில் இந்தக் கவிதை கிடைக்கும்? என்று மீண்டும் தேடுகிறேன்.
5:40 முதல் 6:40-அய்த் தாண்டியும் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். இடையில் ஒரு 4:40 இருந்திருக்கிறது. அதில் யாருக்கு என்னவாயிற்றோ? அம்முக்கள் எப்போதும் தொடர்பு எல்லையிலேயே இருக்கட்டும்.
தொடர்பு கிடைக்காத நொடிகளில் அடித்துக் கொள்ளும் அம்முக்களின் பதற்றம் என்னைப் பற்றிக் கொள்கிறது... ஒரு சில நிமிடங்களாவது அம்முவுக்கு வாய்ப்புக் கொடுங்கள்! இல்லையேல், பின்னாளில் அம்மு - தனக்கொரு அம்முவைத் தேடவேண்டியிருக்கும்.
கருத்துகள்