Monday, January 30, 2012

காலங்கடந்த பதிவு! - சிந்தாநதிக்கு இரங்கல்!

யாருடைய நினைவு என்றைக்கு வரும் என்று சொல்லமுடியாது? திடீரென்று சாலையின் விளக்கொளியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதோ, வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போதோ, எப்போதோ சந்தித்தவர்களின் நினைவு தோன்றும்! பிறகு அது வாய்ப்பான நேரத்தில் மீண்டும் நினைவுக்கு வருவதும், வரும் நேரத்தில் தொடர்பு கொள்ளவோ, விசாரிக்கவோ வாய்ப்புக் கிடைப்பதும் அரிது!

அப்படி யாரையாவது தொடர்புகொள்ள, தேடிக் கொண்டிருக்கும் போது அந்த நபர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தால் எப்படி இருக்கும்? ’அவர் போயி வருசம் ஆச்சே!’ என்று ஊரில் யாரைப் பற்றியாவது கேட்டால் கிடைக்கும் பதிலைப் போலத் தான் ’சிந்தாநதி’ மறைந்து இரண்டாண்டுகள் ஆயிற்று என்ற தகவலையும் நான் தெரிந்துகொண்டேன்.

வலைப்பூவில் எழுதத்தொடங்கிய காலத்தில், blogspot-இல் எழுதும் எனக்கு, Wordpress-காரர்களே அந்நியமாகத் தெரிவார்கள். யாருமே பயன்படுத்தாத blogspirit.com-இல் ஒருவர் எழுதிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதிலும் கஜகஜவென்று, எந்த மூலையிலாவது துடித்துக் கொண்டோ, எரிந்துகொண்டோ இருக்கும் ஏதாவது ஒரு GIF படத்தோடு கூடிய அந்த வடிவமைப்பைப் பார்க்கும்போதெல்லாம், எல்லா கலரையும் போட்டு பத்திரிகை வடிவமைக்கும் அச்சக வடிவமைப்பின் நினைவுதான் வரும்.

(சிந்தாநதி என்னும் பெயரைக் கேட்டதும் மனதில் தோன்றும் வடிவம் அவரது பெயருக்கு முன்னால் இருக்கும் கட்டம் - ”✪சிந்தாநதி” ! ஏதோ ஒரு எழுத்து ஒருங்குறியில் இல்லாததால் தோன்றும் கட்டம்... வித்தியாசமாகப் பெயருக்கு முன்னால் நிற்கும் அந்தக் கட்டம் Webdings Font-ல் இருக்கும் ✪ நட்சத்திரத்தின் வடிவம் தாங்கிய எழுத்து என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன்.)

ஆனால், அவருடைய கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து, பிடித்துப் போனதாலும், தமிழ்க் கணினி சிறக்க அவர் தனது பங்களிப்பைச் செய்துவருகிறார் என்பதை அண்ணன் பாலபாரதி மூலம் கேட்டறிந்ததாலும் அவர் மீது மதிப்பு ஏற்பட்டது. பிறகு சிந்தாநதி எழுதிய “இந்திரலோகத்தில் எய்ட்ஸ்” என்ற மினி தொடர்கதையை உண்மையில் வெளியிட விரும்பி, அதற்கும் பாலபாரதி மூலம் தான் தொடர்புகொண்டு அனுமதி பெற்று வெளியிட்டேன். அது பற்றி வலைச்சரத்தில் நான் குறிப்பிட்டது:

மலேசியாவைச் சேர்ந்த சுயமரியாதைக்காரர் அ.சி.சுப்பையா எழுதி அன்றைய அரசுகளால் தடை செய்யப்பட்ட "சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்"- இந்துமதக் கடவுள்களை கூண்டில் நிறுத்திய அற்புதமான நூல். அதைப் போன்று நல்ல கற்பனை வளத்துடன் எழுதப்பட்ட சிந்தாநதியின் படைப்பு. நான்கு பாகமாக இணையத்தில் (1) (2)(3) (4) வந்த இந்த சிறுகதை, உண்மை மார்ச் 1-15, 2007 இதழில் வெளியிடப்பட்டது.
(நான் பரிமாறிய பதார்த்தங்கள் - வலைச்சரம்)

வலைச்சரத்தின் பதிப்பாசிரியராகவும் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு அவசரக் காலத்தில் என் கையில் வந்த வலைச்சரத்தில் என்னால் இயன்றவரை நான் ப்திவுகளைத் தொகுத்துக் கொடுத்தேன். கடைசி நாள் தொகுப்புக்குப் போகும் வேளையில் என் நேரம் முடிந்திருந்தது. அதையொட்டி எனக்கும் சிந்தாநதி அவர்களுக்கும் நடந்த உரையாடல்:

PRINCENRSAMA said...
பேப்பரைப் பிடுங்கும் வரை பரிட்சை எழுதும் மாணவனைப் போல் கடைசி வரை எழுதிக் கொண்டிருந்தேன். நேரம் முடிந்ததும் பேப்பரைப் பிடுங்கும் வாத்தியாரைப் போல் பிடுங்கிவிட்டார்கள் பொறுப்பாசிரியர்கள் :-(
சரி... வலைச்சரத்தின் பெயரைச் சொல்லி என் தளத்தில் ஒன்றிரண்டு தொடர்கிறேன். அந்த இணைப்போடு சுட்டியாய் வந்து பின்னூட்டத்தில் தொடர்கிறேன்.


ஹை! இப்ப என்ன பண்ணுவீங்க!
September 10, 2007 8:10:00 AM GMT+05:30  


✪சிந்தாநதி said...
அடுத்தவருக்கு கைமாறும் நேரம் வந்துவிட்டதால் இரவு உங்க பேப்பரைப் பிடுங்கியது நான் தான்.;)
நீங்க முடித்து விட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன். இப்படி கடைசி நேரம் வரை பரீட்சை எழுதுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா இன்னொரு பதிவு கிடைத்திருக்குமே..அடடா தவற விட்டுட்டமே ;(


//வலைச்சரத்தின் பெயரைச் சொல்லி என் தளத்தில் ஒன்றிரண்டு தொடர்கிறேன். அந்த இணைப்போடு சுட்டியாய் வந்து பின்னூட்டத்தில் தொடர்கிறேன்.//


கண்டிப்பா செய்யுங்க...
September 10, 2007 9:09:00 AM GMT+05:30


PRINCENRSAMA said...
அடடா, பதிப்பாசிரியரே களத்தில் இறங்கிவிட்டாரா? மகிழ்ச்சி!
September 10, 2007 10:15:00 AM GMT+05:30  


----------------------------------------------------------


பிறகு அவ்வப்போது அவரது படைப்புகளைப் படிப்பதுண்டு. ஆண்டுகள் கடந்து திடீரென அவருடைய ‘இந்திரலோகத்தில் எய்ட்ஸ்’ நினைவுக்கு வரவே, ’வேறெதுவும் ரசிக்கத்தகு பதிவுகள் உள்ளதா?’ என சிந்தாநதி தளத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்று தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் 2009-க்குப் பிறகு பதிவுகள் எதுவும் போடவில்லை என்பதைக் கண்ணுற்ற பிறகே கடைசிப் பதிவு எது எனத் தேடிப் போனேன்! வலைப்பூ முகவரியை மாற்றுவதும், தனி டொமைன் பெயர் போட்டு சொந்த வீட்டில் குடியேறிவிடுவதும் அதிகம் நடக்கும் வலைப்பூ உலகில் எங்கே போயிருக்கிறார் என்று தேட அதுதானே வழி!



அப்போது தான் அவருக்கு அஞ்சலிப் பதிவுகள் இருந்ததைக் கவனித்தேன். எப்படி கவனிக்காமல் போனேன் என்று தெரியவில்லை. இளம்வயதில் அவர் மரணம் - பேரிழப்பு! நேரில் சந்தித்துப் பழகும் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், சிலரிடம் அன்பு கொண்டிருப்போம் அல்லவா? அப்படித்தான் சிந்தாநதியின் மீதான என் அன்பு! அவர் மறைந்தாலும் அவரது பதிவுகள் இன்னும் இருக்கின்றன - அவர் கருத்தைச் சொன்னபடி! தாமதமாக என் இரங்கலைப் பகிர்ந்து கொள்ள நேர்ந்தாலும், சிந்தாநதியினால் blogspirit இணையமும்,  வலைப்பூ - Blog எழுதுவதற்கான Spirit-ம் என் நினைவில் தொடர்கிறது. வாழ்க சிந்தாநதி!
----------------------------------------------------------

அண்மையில் அப்படி நேர்ந்த மற்றொரு இழப்பு முகநூல் தோழர் கிப்டன் அவர்கள். விவாதங்களுக்கு மத்தியில் முகநூலில் சந்திக்கும் உணர்வாளர்! திராவிட இயக்கத்தில் பணியாற்றி மறைந்த தோழர் கிப்டன் அவர்களுக்கு என் வீரவணக்கங்கள்!!

Thursday, January 26, 2012

கள்ள நோட்டைக் கண்டுபிடிப்போம் வாங்க!

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே எ.எ.வி.வி. (எண்ணி எழுதாமல் விட்ட விசயம்) மற்றொன்று - கள்ளநோட்டு விவகாரம். நாடெங்கும் இப்பிரச்சினை கவனம் பெற்றிருக்கும் சூழலில் இப்போதாவது எழுதிவிடுவோம் என்ற வேகத்துடன் அதிகாலை 4மணிக்கு எழுதத் தொடங்குகிறேன்.
--------------------------------------------------------------------
கையில் கிடைக்கும் நோட்டு ஒத்தையோ கத்தையோ, அது கள்ள நோட்டா நல்ல நோட்டா என்று சோதனை செய்து, பணத்தைக் கொடுத்தவர் வயிற்றில் பீதியைக் கிளப்பி ஆராய்ச்சி செய்யும் பழக்கம் 2010-ன் இறுதிவாக்கில், மின்னஞ்சலில் கிடைத்த தகவல்களைக் கொண்டு எதார்த்தமாய் தொடங்கியது. 

எனது ஆய்வில்... கிட்டத்தட்ட ஆய்வாகவே இதைச் செய்தேன் என்பதை அருகில் உள்ளவர்கள் அறிவார்கள்- நொந்த மனத்துடன்....! ஏன்னா அவங்க கிட்ட இருந்துதானே கத்தையைப் புடுங்கி ஆராய்ச்சி பண்ணுவேன். அவங்களுக்கும் இந்த ஆய்வு நோய் தொற்றிக் கொண்டது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

எங்களது ஆய்வில் மிகக் குறைந்த அளவு என்று எடுத்துக் கொண்டாலும் 15 % முதல் 25% வரை கள்ள நோட்டுப் புழக்கம் இருந்துவருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையில் அது பெரிதும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவே இருந்தது. 1000, 500 மட்டுமல்லாமல், சர்வ சாதாரணமாக 100 ரூபாய், 50 ரூபாய், 20, 10 வரைக்கும் கள்ள நோட்டுகள் இருக்கின்றன. 

வங்கிகளில் பீதியைக் கிளப்பிய அனுபவமும் உண்டு. SBI-ல் சென்று அவர்கள் கொடுத்த இரண்டு 500 ரூபாய்த் தாள்களில் ஒன்று கள்ள நோட்டு என்று நான் சொன்னதும் அரண்டு, மிரண்டு, கள்ள நோட்டு கண்டுபிடிக்கும் எந்திரத்தில் எல்லாம் வைத்துப் பார்த்தனர். ‘இல்ல சார்’ என்று பதறிய காசாளர், கடைசியில் ஏன் வம்பு என்று எனக்கு நோட்டை மாற்றிக் கொடுத்துவிட்டார். உடன் வந்த நண்பருக்கு பேரதிர்ச்சி..! வங்கியில் கூட எது கள்ள நோட்டு என்று கண்டுபிடிப்பதில் இருக்கும் தெளிவின்மை. 

ஏ.டி.எம் எந்திரங்களில் இருந்தும் கள்ளநோட்டுகள் வந்திருக்கின்றன. ஒருமுறை தானியங்கி காசுவழங்கும் எந்திரத்தில் இருந்து தோழர் (பலர்பால் தானே!) எடுத்துக் கொடுத்த 10000 ரூபாயைக் கவனித்துப் பார்த்ததில் 40% அதாவது 4000 ரூபாய் கள்ள நோட்டு! பிறகு அவர்கள் குடும்பத்துக்கே அது குறித்து விளக்கம் அளித்தேன். கள்ள நோட்டு எது என்று கண்டுபிடிக்க அன்றைக்கு இணையத்தில் இருந்து இரண்டு இணைப்புகளை அவர்கள் எனக்கு அனுப்பினார்கள். அவ்விரண்டில் RBI கொடுத்திருந்த விளக்கத்தில் நான் சொன்ன தகவல்கள் இல்லை. காரணம் அது 1999 ஆண்டுக்குரிய எச்சரிக்கை! இன்றும் அது இணையத்தில் உள்ளது. மற்றொரு இணைப்பு வேலை செய்யவில்லை. (http://pauri.nic.in/IdentyFakeNote.htm)

காலந்தோறும் கள்ளநோட்டுகளின் தரம் உயர்ந்தே வந்திருக்கிறது. எத்தனையோ நுணுக்கங்களை அரசு கொணர்ந்தாலும், அவற்றை அடுத்தடுத்த பதிப்பில் உயர்த்திக் கொண்டே வருகிறார்கள் கள்ளநோட்டு தயாரிப்பாளர்கள். நான் பார்த்த கள்ளநோட்டுகளின் தரமும் வெவ்வேறு விதத்தில் இருந்தது. பார்த்த உடனே பளிச்சென வித்தியாசம் தெரியும் வகை ஒன்று. அந்த நோட்டுகளை அச்சின் தரத்திலும், வண்ணங்களைக் கொண்டுமே எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ரோஸ் நிறம் அப்பிக் கிடக்கும் 50 ரூபாய் நோட்டுகளும் மஞ்சளாய் இல்லாமல் பச்சை நிறத்துக்கு மாறி இருக்கும் 500 ரூபாய் நோட்டுகளும் இவ்வகையின.

ஆனால் தரத்தில் சவால் விடும் நோட்டுகளையும் கூட, இரண்டு, மூன்று இடங்களைச் சோதிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். முழுமையாக கள்ள நோட்டுகளைச் சோதிப்பது எப்படி என்பதற்குக் கீழே கொடுத்திருக்கும் படங்களைப் பார்க்கலாம். இவற்றில் சில சரியாக நம்மால் உணரமுடியாதவை.

உடனே கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் (நான் கையாண்டவை):

பணத்தை எண்ணும்போது, வெள்ளைப் பகுதி (காந்தி படம் நீர்க்கோடு தெரிவதற்காக விடப்பட்டிருக்கும் அல்லவா?) மேலே தெரியுமாறு வைத்துக் கொண்டு எண்ண வேண்டும். (இயல்பாக ஒரே சீராக பணத்தை அடுக்கிக் கொண்டு எண்ண வேண்டும் என்ற அடிப்படையை என் தந்தையிடமிருந்து நான் கற்றிருக்கிறேன். அதிலும் பழைய தாள்களை முன்னால் வைத்து, புதிய தாள்களை அடியில் வைத்து அடுக்கிக் கொண்டு வரும் என் அய்யாவின் நேர்த்தி என்னைக் கவர்ந்த ஒன்று)

எண்ணுதல் - சரியான முறை
எண்ணுதல் -  தவறான முறை
* இவ்வாறு எண்ணும் போது முதலில் கவனிக்க வேண்டியது சீரான பதிவு. (கீழே விவரம் கொடுக்கப்பட்டுள்ளது)

கடந்த 7 வருடங்களாக வெளிவரும் புதிய நோட்டுகளில் ரூபாயின் மதிப்பும், அதற்கு முன்பு பூ வடிவங்களும் இவ்விடத்தில் அச்சிடப்பட்டுள்ளன. புதிய நோட்டுகள் கையில் இருந்தால் கண்டிப்பாக சீரான பதிப்பில் ரூபாயின் மதிப்பு, அதாவது 100, 500, 1000 போன்ற எண்கள் இடம்பெற்றிருக்கும். 

பழைய தாளில் உள்ள பூ வடிவம்
* அதில் சந்தேகம் வந்தால் அடுத்து நோக்க வேண்டியது. காந்தி நீர்க்கோடு படம் இருக்கும் அந்த வெள்ளைப் பகுதியினுள் பக்கவாட்டில் நீர்எழுத்திலேயே அச்சிடப்பட்டிருக்கும் ரூபாயின் மதிப்பு. (காந்தியின் நீர்க்கோடு படம் கள்ளநோட்டிலும் உண்டு. ஆனால் அதற்கடுத்த தொழில்நுட்பமான கருப்பு வட்டமிடப்பட்டிருக்கும் இடம் இன்னும் கள்ளநோட்டில் வரவில்லை.)

புதிய தாளில் உள்ள ரூபாய் மதிப்பு சீரான பதிவு மற்றும் நீர் எழுத்து

* இதில் சந்தேகம் இருந்தால் பின் பக்கம் திருப்பிப் பாருங்கள். நல்ல நோட்டில், கீழ்ப்பகுதியில் நடுவில் எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற தகவல் இருக்கும். கள்ளநோட்டில் அச்சடிக்கப்பட்ட ஆண்டு இருக்காது.


* கள்ளநோட்டில் வண்ணங்கள் சரியான அளவில் இல்லாமல், அப்பிவைத்தது போல அடுத்த படங்களிலும் கூட சேர்ந்திருக்கும். நல்ல நோட்டில் சாட்டிலைட், கணினி போன்றவை பிசிறினிறி தனியாகத் தெரிவது போல் கள்ள நோட்டில் தெரியாது. அந்த சிகப்பு வண்ணம் அடுத்த படங்களின் மீதும் ஒட்ட்யிருக்கும்.


இவை தவிர, பாதுகாப்பு இழையின் அளவும் வடிவமும் கள்ளநோட்டில் தனியாகத் தெரியும். ஏதோ பேருக்கு பேக்கரியில், பால்பேடா மீது சில்வர் பூசியது போல இருக்கும். ஆனால் நல்ல நோட்டில் தெளிவாகத் தெரியும்.

பிறகு தொடு உணர்வு, வண்ணம் மாறும் எழுத்துகள், சாய்த்துப் பார்த்தால் தெரியும் பணத்தில் வண்ணம் என்று இதர ஏரியாக்கள் நிறைய உண்டு. அவற்றை விளக்கமாகக் கீழே பாருங்கள். இப்போது RBI வெளியிட்டிருக்கும் தகவல்களிலும், துண்டறிக்கைகளிலும் அவை தெளிவாக உள்ளன. இதற்கென அவர்கள் பன்மொழிகளிலும் தயாரித்திருக்கும் விளம்பரமும் சிறப்பாக இவற்றை விளக்கும்.

http://www.paisaboltahai.rbi.org.in/poster.htm - இவ்விணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளத்தக்க துண்டறிக்கைகளும், அதற்குக் கீழே பிளாஷில் செய்யப்பட்ட விளக்கங்களும் உள்ளன.

http://www.paisaboltahai.rbi.org.in/tvc.aspx - இவ்விணைப்பில் விளக்கக் காணொளி உள்ளது. தமிழிலும் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.

படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கலாம்




Monday, January 23, 2012

ஒரே மெட்டு - எத்தனை பாடல்!! அடடா...என்றும் ராஜா!

அவசியம் எழுத வேண்டும்; பிறருக்குச் சொல்ல வேண்டும் என்று நாம் கருதி பணி/சோம்பல் காரணமாக தள்ளிப்போடும் செய்திகள் பல பிறரால் சொல்லப்பட்டுவிடும் போது, நாம் நினைத்தது வந்துவிட்டதே என்ற மகிழ்ச்சியும், கொஞ்சம் இயலாமையால் உருவான பொறாமையும் ஏற்படுவதை மறுக்க முடியாது. ஆனால் அதை மீறி, மகிழ்ச்சியை வளர்த்துக் கொள்ளுதலே நமது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்கிற உணர்வில் தான் இது வரை செயல்பட்டு வந்திருக்கிறேன். (வேற வழி...!)

அந்த வகையில் நீண்ட நாட்களாக நினைத்துவைத்திருந்த சில விசயங்கள் பதிவாகவோ, செய்தியாகவோ, படத்திலோ வெளிவந்து விட்டன. எனவே இனியும் அவற்றைக் காலம் கடத்தாமல் பதிவது என்ற நோக்கில் தொடங்கிவிட்டேன். அநேகமாக, அடுத்த ஓரிரண்டு பதிவுகளும் இதே திக்கில் இருக்கலாம்..

---------------------------------------
இளையராஜாவின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டு, அணுஅணுவாய் ரசிக்கும் பழக்கம் அண்ணன்களிடமிருந்து தொற்றியது. ஒவ்வொரு இசை நுணுக்கங்களையும் ரசித்து, வியந்து, மகிழ்வது தனிசுகம்.

இப்போதிருக்கும் சன் மியூசிக் வருவதற்கு முன்னால், சன் தொடங்கிய சில ஆண்டுகளில் சன் மூவீஸ் என்றும், சன் மியூசிக் என்றும் இரண்டு சேனல்கள் தோன்றின. பின்னர் அவை தொடரப்படாமல் நின்றுபோயின. அதன் பின்னர் 2000-ஆம் ஆண்டு வாக்கில் கே டிவி-யும் பின்னர் சன் நியூஸ், சன் மியூசிக், ஆதித்யா என அடுத்தடுத்து சேனல்கள் வந்தன.

நிறைய இடைக்காலப் படங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது சன் மூவீஸும், கே டி.வியும் தான். அதே போல் தான் சன் மியூசிக் சேனலும்.

ஆட்டோ ராஜா படத்தில் ’சங்கத்தில் பாடாத கவிதை...’ பாடலுக்கு பாட்டி ஒருவருடன் மலர்களுக்கு மத்தியில் காதல் செய்து கொண்டிருப்பார் விஜயகாந்த். அட்டகாசமான அந்தப் பாடலை தேடித்தேடிக் கேட்கத் தொடங்கினேன். பிறகு இணையத்தின் துணை கொண்டு அந்தப் பாடலை தேடிய போது, அதே இசையில் எண்ணற்ற பாடல்களை பல மொழிகளில் ராஜா உருவாக்கியிருப்பது தெரிந்தது.

தம்பி புருனோவும், நானும் அவற்றைத் தொகுத்துக் கொடுத்து, ஒரு முறை சூரியன் பண்பலையில் நண்பர் ராஜசேகர் மூலமாக பகிர்ந்து கொண்டோம். அந்த இணைப்புகளோடு நமது வலைப்பூவிலும் எழுத வேண்டுமென்று அதை வைத்திருந்தும் இழுத்துக்கொண்டே போய் எழுத முடியவில்லை.

இத்தொகுப்புகளை பலரும் யூடியூப் இணையதளத்தில் குறிப்புடன் கூட இணைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று அக்கா கவின் மலர் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் இந்த தொகுப்பைத் தேடிப் பகிர்ந்திருந்தார்கள். எனவே வாயை மூடிக் கொண்டு அதையே எடுத்து இந்தப் பக்கத்திலும் பதிந்துவிட்டுப் போகிறேன்... பொறாமை கலந்த மகிழ்ச்சியுடன்!

-------------------------------------------------------
திகமாக இசை கேட்டுக்கொண்டிருப்பதன் பலன் இந்த குறிப்பு..

எனக்குத் தெரிந்து மிக அதிகமான எண்ணிக்கையில் ஒரே ஒரு மெட்டு இத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருப்பது இளையராஜாவின் இந்த ஒரு மெட்டுதான் என்று நினைக்கிறேன்.

மலையாளத்தில் ’ஓலங்கள்” படத்தில் இடம்பெற்ற ‘தும்பி வா’ முதல்... 


இதோ..:http://www.youtube.com/watch?v=QczFj252vGE



அதன்பின் தமிழில் ‘ஆட்டோ ராஜா’வுக்காக இங்கே : 

http://www.youtube.com/watch?v=DQg-5s21zP4



அதன்பின் தெலுங்கில் பாலுமகேந்திரா இயக்கத்தில் ’Nireekshana’ படத்தில்:


http://www.youtube.com/watch?v=hNaJftkrKcU



அதனபின் தமிழில் அதேபடம் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘கண்ணே கலைமானே” என்ற பெயரில் வெளியானது.
http://www.youtube.com/watch?v=YkNNB_y15ZA



அநேகமாக பாலுமகேந்திராவுக்கு மிகப் பிடித்த மெட்டாக இது இருந்ததால்...மீண்டும்..Aur ek prem kahani" இந்திப் படத்தில் அதே மெட்டை மீண்டும் பயன்படுத்தினார்
http://www.youtube.com/watch?v=oJL9Z17P4YA



மீண்டும் 'Paa" படத்தில் அதே மெட்டு..வேறொரு வடிவத்தில்... :
http://www.youtube.com/watch?v=Ir6tShQJmHk



இவை மட்டுமல்ல....வரிகளே அல்லத ஒரு இன்ஸ்ட்ருமெண்டல் போனஸ்
:http://www.youtube.com/watch?v=8Thz8_Z7rw8





இது மாதிரி ஒரே மெட்டு இத்தனை முறை வேற்ங்காவது பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்.

எத்தனை முறை எப்படிக் கேட்டாலும் பிடித்துப் போகும் மாயம் தான் என்ன?
நன்றி: கவின்மலர்
https://www.facebook.com/kavinnnn/posts/3148563476301
--------------------------------------------------------

ஒரே மெட்டு தான்.. ஆனால் அதில் எத்தனை உணர்வுகளைக் கொடுக்க முடிகிறது இவரால்...!

காதலாகிக் கசிந்துருகும் பாடல், அப்படியே உற்சாகமாக குழந்தைகள் பாடும் பாடலாகிறது, இளசுகள் சுற்றுலாவில் கரகரப்புடன் பாடும் துள்ளல் பாடலாகிறது...! இது தவிர கார்த்திக்ராஜா இசையில் விளம்பர இசையாகவும் வந்துள்ளது. (’நீர்வீழ்ச்சி தீமூட்டுதே’ பாடலை எழுதியவர் பாவலர் அண்ணன் அறிவுமதி அவர்கள்)

ராஜா - நீ - தமிழன் உலகுக்குத் தந்த இசைக் கொடை!

Tuesday, January 10, 2012

தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல்! நன்றி தோழர்களே!

”எனக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த்டே!” என்று சொல்லிக் கொள்ளும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா? அன்றைக்கு முழுமையும் அவர்களுடைய நாள் என்ற உணர்வு தான் அதற்கு காரணம். எல்லா நாளும் நம்முடைய நாள் தான் என்றாலும் கொண்டாட்டத்திற்குரிய நாள்களாக பிறந்தநாள், திருமணநாள் போன்றவை அமைகின்றன.

கூடுமானவரை, மறக்காமல் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதும், இயன்றவரை குட்டிக் குட்டி கொண்டாட்டங்களை கேக் வெட்டி நடத்துவதும் எமது வழக்கங்களில் ஒன்று.

அப்போதெல்லாம் "Happy Birthday To You|" பாடுவதற்கு பதிலாக, தமிழில் அதே ராகத்தில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்; இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பாடுவேன். தமிழில் நல்ல பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் இல்லையே என்ற வருத்தமும், நமது இசைக் கலைஞர்களை வைத்து ஒன்று தயாரித்து வெளியிட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும்; இருக்கிறது.

அந்த ஏக்கத்தினைத் தீர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது - முகில் படைப்பகம் வழங்கியிருக்கும் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல். வித்யாசாகரின் நற்றமிழில் ஆதியின் இனிய இசையில் சரோ என்ற மென்குரல் நாயகனின் குரலில் தேனாய் பாய்கிறது பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்!

இந்தப் பாடலை குறுந்தகடு வாயிலாக வெளியிடவேண்டும். இணையத்தில் நல்ல தரத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செயும் வாய்ப்பும் வேண்டும் என்று முகில் படைப்பகத்தாரை வேண்டிக் கொள்கிறேன்.



http://vidhyasaagar.com/

நீங்களும் கேட்டு மகிழுங்கள்! பரப்புங்கள்! பயன்படுத்துங்கள்!!

Related Posts with Thumbnails