Wednesday, October 26, 2011

முகநூலில் ‘தேசீயவாதி’ ஆவது எப்படி?


தேவையான பொருட்கள்:

1. இந்திய தேசியக் கொடியின் படங்கள் சில.

2. கொடியின் வண்ணங்கள் கூடப் போதுமானது. அதிலும் குறிப்பாக ’வந்தே மாதரம்’ பாடல் டிசைனில் உள்ளது போன்ற நடுவில் அசோகச் சக்கரம் இல்லாத ஓவிய வடிவில் இருந்தால் இன்னும் உங்கள் தேசீய ‘கிரேடு’கூடும்!)


3. காந்தி, நேரு படம் பயன்படுத்தலாம். ஆனால் அதைப் பயன்படுத்தினால் காங்கிரஸ் சாயம் வந்துவிடும் ஆபத்து இருப்பதால், காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்-சின் இன்றைய அடையாளமான மோடி படத்தைப் பயன்படுத்தலாம்.

4. அன்னா ஹசாரே, மதச்சார்பின்மையைக் காக்க அப்துல்கலாம் (வேறு எந்த முஸ்லிம் படமும் அனுமதியில்லை.)

5. ’பாரத் மாத்த்த்தா க்க்க்கீ ஜே!’, ’வந்த்த்தே மாத்த்தரம்’ போன்ற ரெடிமேட் ஸ்லோகங்கள் கொஞ்சம் போல வைத்துக் கொள்ளலாம்.


செய்முறை:
இந்தியாவின் இண்டிபெண்டன்ஸ் டே, ரிபப்ளிக் டே (எது ஜனவரி 26, எது ஆகஸ்ட் 15 என்றெல்லாம் தெரியவேண்டியதில்லை.) என்று யாராவது சொல்லும் போதெல்லாம் மேற்காணும் படங்களில் ஒன்றைப் profile படமாகப் போட்டுவிட்டு, forward mail எதாவதிலிருந்து எடுத்து ஸ்டேடஸ் மெசேஜ் போடலாம்..

கூடவே ஏ.ஆர்.ரஹ்மானின் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்துவது தூக்கலாக இருக்கும்.

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது, துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டாக்கள் போல அடிவயிற்றிலிருந்து வாய் வழியாக... (நோ..நோ) குரல் எழுப்ப வேண்டும். ’ஹாக்கி’ என்ற அஜய்தேவ்கனின் இந்திப்படம் பற்றிக்கவலையில்லை.

ஊழல் ஒழிய உண்ணாவிரதம் இருப்போம். கார்ப்பொரேட் கம்பெனிகளிடம் இருந்து ஸ்பான்சர் பெற்று மூன்றாம், நான்காம் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்பொம் என்று நெஞ்சில் குத்திவிடாதபடி, டி-சர்ட்டில் குத்திய நேஷனல் பிளாக் உடன் உதார் வுடலாம். அல்லது அப்படிப்பட்ட உதார்களுக்கு link கொடுக்கலாம்.

யூ டியூப் செய்முறைப்படி, காந்தி குல்லாய் போட்டு சேட்டு கணக்கா அலைவது கூடுதல் மணம் கொடுக்கும். http://www.youtube.com/watch?v=_RJv23_CVss

ஹிந்தி படிக்கவிடாததால் பெரிய நட்டம் என்று தமிழ்நாட்டில் குல்பி விற்கும் இந்திக்காரனிடம் குல்பி வாங்கிச் சப்பியபடி ‘ச்சே... நான்சென்ஸ் டமிலியன் லீடர்ஸ்’ சொல்லவேண்டும்.

காஷ்மீர் எல்லையில் குண்டூசி விழுந்தாலும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அல்லது ஐ.எஸ்.ஓ.. எதன் மீதாவது குற்றம் சொல்ல வேண்டும். காஷ்மீரில் சாகும் மக்கள் பற்றிய கவலை நமக்கு வேண்டியதில்லை.

(அப்படியென்றால், அஸ்ஸாம், மணிப்பூர், தண்டகாருண்யா, tamil fisherman...? )
”அதெல்லாம் இந்தியாவிலேயா இருக்கு?”

குஜராத்தின் சாதனை, மோடியின் அன்பான புன்னகை, அங்கங்கே Pribe to an indian.. சீ.. Proud to be an indian, My country, இந்தியாவை வல்லரசாக்க facebook-la இந்த மெசேஜை forward பண்ணுங்க போன்ற வாசகங்களை இடையிடையே போட்டுக்கலாம்..

தேசீயத்தின் பிராண்டு அம்பாசிடர்களான மணிரத்னம், ஷங்கர், அர்ஜூன் படங்களைக் கண்டு விரைப்புக் கொள்ள வேண்டும்,

இதெல்லாம் செஞ்சா... நீங்க அக்மார்க் ’இந்து’ய தேசீயவாதி ஆயிடலாம்...

முடிவுரை: அவ்வப்போது ஆங்கில ஊடகங்கள் பரிந்துரைக்கும் நிலைப்பாடுகளை மட்டுமே எடுத்துவருவதால், அவை கேபிளில் கட்டாகும் வரை... அல்லது இண்டர்நெட்டில் லைவ் போகும் வரை...

Tuesday, October 25, 2011

தீபாவளியன்று வீட்டுக்கு வந்த பெரியார்

...... 1949க்குப் பிறகு அய்யா அவர்கள் எனது இல்லத்தில் தான் தங்குவார்கள் (காரைக்குடி வரும்போது) என்பது எனக்குக் கிடைத்த பெருமையாகும்.


ஒருமுறை 1950வாக்கில் தீபாவளி அன்று திடீரென்று பெரியார் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து விட்டார்கள். முதல் நாளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சி முடித்து மதுரை வந்த அய்யா மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு வந்து விட்டார்கள்.

நேராக எனது கடைக்கு முன் அய்யாவின் வேன் வந்து நின்றுள்ளது. நான் அந்த நேரம் கடையில் இல்லை. எனது மைத்துனர் தனுக்கோடிதான் கடையில் இருந்தார். அப்போது மதியம் 3-4 மணி இருக்கும். வந்தவுடன் "சாமி எங்கே?" என்று கேட்டதும், "வீட்டிலிருக்கிறார். இதோ கூட்டி வருகிறேன்" என்று கிளம்பியவரை நிறுத்திவிட்டு, அய்யா அவர்களே தனியாக கடை எதிரே உள்ள ஒரே நீளமான சந்தில் வருகிறார்.

(படம்:பெரியார் நடந்து வந்த சந்தின் இன்றைய தோற்றம்)
(உள்படம்: என்.ஆர்.சாமியும், பேராண்டாள் அம்மையாரும், கையில் குழந்தையாக திராவிடச்செல்வம்)
நான் கருப்புச்சட்டையுடன் எதிரே வருகிறேன். சற்று தூங்கிவிட்டு வருவதால் எனக்கே ஒரு சந்தேகம். 'காண்பது கனவோ' என்ற நிலை. 
"அய்யா வாங்க" என்றேன். 
அய்யாவும் "வாங்க வீட்டிற்குப் போகலாம்" என்று சொன்னபடியே வீடு நோக்கி நடந்தார். நானும் கூடவே பின் சென்றேன். 

வீட்டில் நுழைந்து, என் துணைவியார் மற்றும் நான்கு (அப்போது நான்கு குழந்தைகள்தான்) குழந்தைகளும் அனைவருமே தீபாவளி துக்க நாள் குறித்து கருப்பு உடை அணிந்திருந்ததைப் பார்த்த அய்யா அவர்கள் ”ரொம்ப சரி, ரொம்ப சரி” என்றுரைத்து ”அம்மா காப்பி போடுங்கள். சாப்பிட்டு செல்கிறேன்” என்றார்கள். கடையிலிருந்த என் மைத்துனனும் கருப்புச் சட்டையுடன் தானிருந்தார்.
(பின்னொரு நாள் எடுக்கப்பட்ட படம்: என்.ஆர்.சாமி அவர்களின் ஆறு செல்வங்கள்
இடமிருந்து: திராவிடமணி, தமிழரசி, ஈவெரா மணியம்மை, திராவிடச்செல்வம்(கீழே), ஜனசக்தி, சமதர்மம்)
எனது குடும்பம் கொள்கையில் பிடிப்புடனிருக்கிறார்களா என்று பார்த்து விட்டுப் போக வந்திருப்பார்கள் என்று எண்ணி மகிழ்ந்தோம். 
-----------------------------------------------------------------------------------------

(என் தாத்தா என்.ஆர்.சாமி அவர்கள், தன் வாழ்க்கைப் பாதையைத் தானே சொல்லும் பாங்கில் எழுதப்பட்ட ”காவனூர் முதல் காரைக்குடி வரை... வழி: மலேயா” என்ற கட்டுரையில், ”திடீரென வீட்டுக்கு வந்த பெரியார்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட செய்தி - காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர் என்.ஆர்.சாமி நூற்றாண்டு விழா மலரிலிருந்து...)

Friday, October 21, 2011

மாசு அகற்றிய மாசு!


இந்தக் கட்டுரையை நான் எழுதத்தொடங்குகிற இந்த நொடியோ (11:59:14 - 20.10.2011), அல்லது எழுதத் தோன்றிய 16-ஆம் தேதி இரவோ எந்த விதத்திலும், பிரச்சாரத்திற்கோ ஒரு ஓட்டிற்கோ கூடப் பயன்படப் போவதில்லை; அந்த நோக்கமும் இல்லை.

ஏன், எழுதும் நான், என் ஓட்டைக் கூடத் தர முடியாதவன்... சென்னை மாநகராட்சிக்கு! (காரைக்குடிக்குச் சென்று 19-ஆம் தேதி வாக்கிட்டுவிட்டு வந்துவிட்டேன்) வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் மீதான வெறுப்பையும் தாண்டி, மக்களின் ஆதரவு என்னும் பேரலை இவருக்குச் சாதகமாக இருப்பினும், சென்னை மாநகராட்சியை எப்பாடுபட்டேனும் கைப்பற்றியே தீருவது என்ற வெறியில், இவரது வெற்றி ஆளுங்கட்சியினரால் தட்டிப் பறிக்கப்படலாம். ஆனாலும் என் நன்றியைத் தெரிவிக்கும் நோக்கம் ஒன்றே என்னை எழுதத் தூண்டுகிறது.

நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுக்காமல், மாநகராட்சி உறுப்பினர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் முறை கடந்த 2006-ஆம் ஆண்டு பின்பற்றப்பட்டது. அப்படி சென்னை சைதையிலிருந்து தி.மு.க.வின் சார்பில் மாமன்ற உறுப்பினராகத் தேர்வாகி, பின்னர் மாநகரத் தந்தை ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மா.சு என்கிற மா.சுப்பிரமணியன்.

சென்னையின் பெரும் மாற்றங்களுக்குக் காரணமாயிருந்த தளபதி மு.க. ஸ்டாலினின் காலத்திற்குப் பிறகு (1996-2001), மீண்டும் அவரே மாநகராட்சிக்கு 2001-இல் வென்ற நிலையில், அன்றைக்கு ஆட்சியில் அமர்ந்த ஜெ-யும் அவரது அடியாளாக காங்கிரசிலிருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்திருந்த கராத்தே தியாகராஜன் போன்றோரும் கொடுத்த குடைச்சல், துணை மேயர் என்னும் பெயரில் அடித்த கூத்து, பின்னர் கராத்தேவைப் போட்டுத் தள்ளத் தயாரான முதல்வர் ஜெ-யின் செயலால் அவர் தப்பியோடி வடநாட்டில் மறைந்த மர்மம் என சீர்கெட்டுப் போயிருந்த சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை மாற்றியமைக்க வேண்டிய மாபெரும் பணியைத் திறம்பட செய்து முடித்தவர் மா.சுப்பிரமணியன்.

பெரியார் கொள்கைப் பற்று, திராவிட இயக்கச் சிந்தனை, கலைஞரின் மீதான பாசம் என பக்கா தி.மு.க.காரர்! சென்னையின் ஒவ்வொரு வளர்ச்சியும் தி.மு.க. காலத்தில் மட்டுமே செய்யப்பட்டது என உறுதியாகச் சொல்ல முடியும். அதனாலேயே தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும் சென்னையை இன்னும் சிறப்பாக நிர்வகித்த பெருமையும் மா.சு அவர்களுக்கு உண்டு. எளிமை, பழகுதற்கு இனிமை, மக்கள் எவரும் சென்று சந்திக்கும் அளவு இயல்பான பண்பு இவருடையது.

ஜீ தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில், தொலைபேசியில் குறை தீர்க்கும் நிகழ்ச்சிக்காக நேயர்கள் உரையாடும் போது, தெருப் பெயரைச் சொன்னவுடனேயே, அங்கே என்ன பிரச்சினை? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? எப்போது சரியாகும்? என பதில் சொல்லி நிகழ்ச்சித் தொகுப்பாளரையே வியக்க வைக்கும் அளவு சென்னையின் நீள அகலங்களைச் சரியாகத் தெரிந்து வைத்திருந்தவர்.

கூவம் கால்வாய்ச் சீரமைப்புத் திட்டம், சென்னையெங்கும் பூங்காக்கள், போக்குவரத்தைச் சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போன்ற பணிகள் குறிப்பிடத்தக்கன. ஆனால், அவற்றையெல்லாம் விட என்னை ஈர்த்தவை சில.

தனியார் பள்ளிகள் தான் தரத்தில் சிறந்தவை என்ற மாயையை அகற்றி, சென்னை மாநகராட்சிப் பள்ளிப் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெறமுடியும்; முதலிடத்தைப் பிடிக்க முடியும் என்னும் அளவிற்கு பள்ளிகளின் தரத்தைத் தூக்கிப் பிடித்தது முக்கியமானது. 

மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் வைத்தால் தங்க மோதிரம் அணிவித்து அவர்களை ஊக்கப்படுத்தியது இன்னொன்று. ’நல்ல தமிழ்ப்பெயர்களைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்’ என்று சொல்லுவதோடு அல்லாமல் அதற்கொரு பரிசும் கொடுத்து அதற்கொரு பயனையும் தந்தது அத்திட்டம்.

சென்னை சாலைகளின் இரு பக்கச்சுவர்களிலும் தமிழர் தம் பண்பாட்டையும், வரலாற்றையும் பறைசாற்றும் வண்ணம், இயற்கைக் காட்சிகளும், தமிழகத்தின் வளங்களும் தலைநகருக்குப் பெயர்ந்துவிட்டதோ என்று வியக்கும் வண்ணம் வண்ண ஓவியங்களை மிளிரச் செய்து, வழமையான அலுத்துப் போன சென்னை வாழ்க்கையில் இருந்து சென்னை மக்களுக்கே புத்துணர்வான மனமாற்றத்தைத் தந்தவர் மா.சு! (பெங்களூருவில் இருந்ததைப் போலத் தான் இந்தத்திட்டம் பின்பற்றப்பட்டது என்றாலும், அங்கிருந்த மொக்கையான ஓவியங்களை ஒப்பிடுகையில் அழகுணர்ச்சியோடு அதைச் செய்தவர் நமது மேயர் என்று பெருமையாய்ச் சொல்லாம்.




இன்னும் தலையாய ஒன்றுண்டு.


”வாணிகர்,தம் முகவரியை வரைகின்ற பலகையில்,ஆங் கிலமா வேண்டும்?
'மாணுயர்ந்த செந்தமிழால் வரைக' என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்!
ஆணிவிற்போன் முதலாக அணிவிற்போன் ஈராக அனைவர் போக்கும்
நாணமற்ற தல்லாமல் நந்தமிழின் நலம்காக்கும் செய்கையாமோ?



உணவுதரு விடுதிதனைக் 'கிளப்'பெனவேண் டும்போலும்! உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்கு 'சில்குஷாப்' எனும்பலகை தொங்குவதால் சிறப்புப் போலும்!
மணக்கவ ரும் தென்றலிலே குளிராஇல்லை? தோப்பில் நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தா னில்லை!” 


என்றெழுதிய புரட்சிக் கவிஞர் போல், ’தமிழ் இருக்காதா எம் தலைநகர்த் தெருவினில்’ என்று வருந்திக் கொண்டிருந்த வேளையில், விதிமுறையை நெருக்கி, ”ஆக்ஸ்போர்டு பிரஸ்’ என்றாலும் தமிழில் எழுது” என்று பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து, பாதையோரக் கடை வரைக்கும் தமிழில் பெயர்ப்பலகை எழுத வேண்டும் என்பதை நடைமுறைக்குக் கொண்டுவந்து வெற்றிகண்ட பெருமை சர்வ சந்தேகமில்லாமல் மா.சுப்பிரமணியன் அவர்களைத் தான் சாரும். 


”தமிழை எங்கே தேடுவேன்?” என்று பாடல்கூட வெளிவந்து இணையதளங்களில் உலவியது. 

ஆனால், ஆங்கில எழுத்துகளை தமிழில் மாற்றி Transliteration செய்தால் மட்டும் போதாது. நல்ல தமிழில் மொழியாக்கம் செய்து ‘இனிப்பகம்’, ‘வெதுப்பகம்’, ’தொலை தொடர்பகம்’ என்று தமிழ் எழுத்துருவைக் கேள்விப்படாத பன்னாட்டு நிறுவனங்கள் கூட, அதிகம் அழகில்லாத ’ஒருங்குறி’ எழுத்துகளைப் பயன்படுத்தி தமிழ்ப்பெயர்ப் பலகை வைக்க வேண்டிய அளவு நடைமுறையில் உறுதியாக இருந்து சாதித்தும் காட்டியது மனமுவந்து பாராட்டத்தக்கது. இன்னும் சில இடங்களில் அப்படித் தான் இருக்கிறது என்று குறைப்படவும் கூடும். மறுக்கவில்லை. ஆனால் ஓரிரண்டு வீதம் தவிர முழுமையான வெற்றி என்றே சொல்லவேண்டும். தமிழில் கட்டாயப்படுத்தி எழுதச் செய்தாலும், அழகைக் கெடுப்பதாகக் கருதி அதை வெறுப்போடு எழுதியவர்களே பின்னர் ரசிக்கும்படி இருந்த இன்பத்தைத் தந்தவர் நம் மா.சு அவர்கள்!


மதராஸ் என்றிருந்ததை மாற்றி ’சென்னை’ என்று சொல்ல வைத்த கலைஞரைப் போல, சென்னையின் தெருக்களில் தமிழ் கிடந்து தள்ளாடும் என்றிருந்த ’மாசு’ தனை அகற்றி தமிழ் செழிக்க வைத்த ’மா.சு’ அவர்களே, உங்களை நாளும் நன்றியோடு நினைவுகொள்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது இவரைப் பாராட்டி எழுத! (8 மணிக்காவது நான் பதிவை முடிக்க வேண்டாமா?)


இன்று வெளிவரும் முடிவுகள் எப்படியும் இருக்கலாம். சென்னை மக்கள் மட்டுமல்ல... உணர்வுள்ள தமிழர்கள் எங்கிருப்பினும் உம்மை நன்றியோடு நினைப்பார்கள்! சென்னை மாநகராட்சிக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் உங்கள் பணி தேவைப்படுகிறது வாருங்கள்!


பின்குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு இன்றியமையாத இன்னொரு பணியும் உண்டு... அதை வெற்றிபெறுபவரின் கவனத்துக்கு வைப்போம் - மாநகரைக் காக்க!

Sunday, October 16, 2011

ராம்தேவை விட பெரிய தில்லாலங்கடி!

’சுடிதார் எஸ்கேப்’ புகழ் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது, அவரது பல படங்களையும் ஊடகங்கள் பெரிதாக விளம்பரப்படுத்தின. ஏற்கெனவே ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளை மிகச் சரியாகப் பயன்படுத்தி வந்த ராம்தேவுக்கு இவை பெரிதும் பயன்பட்டன.

அதில், மூச்சை நன்கு உள்ளிழுத்து, வயிற்றைக் குழி விழுந்தது போல் காட்டும் படம் கூட பெரிய அளவு பிரபலமாகவில்லை. காரணம், சிறுவயதில் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக வந்து, 2 ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு, மேஜிக் ஷோ செய்யும் எளிய வகை நிபுணர்கள் காட்டும் தண்ணீரை நிறையக் குடித்து பம்புசெட்டு போல வெளியே விடுதல், பேப்பர் மேஜிக் போன்ற வித்தைகளில் ஒன்றுதான் வயிற்றை உள்ளிழுத்துக் காட்டி வியப்பூட்டுவதும்!


ஆனால், பிரபலமான மற்றொரு படம் - இரண்டு கால்களையும் பாம்புபோல் பின்னி நிற்கும் படமாகும். பல பேர் இதைப் பார்த்தே இவர் பெரிய யோகா வித்தகர், உண்மையான சாமியார் என்று பேசிக் கொண்டார்கள்.

அடப்பாவிகளா! நம்ம வைகைப் புயல் வடிவேலு, ”சிங்கார வேலன்” படத்திலேயே இந்த வேலையெல்லாம் காண்பிச்சுட்டுட்டாரே! அப்ப அவரையெல்லாம் ராம்தேவுக்கு முன்னோடின்னுல்ல சொல்லணும் என்று யோசித்துக் கொண்டேன்.

நேற்று பாத்த youtube காணொளி ஒன்றில் விழிகள் வியக்க ஒரு மனுசன் பண்ணதைப் பார்த்தா, ”இவர்லாம் இந்தியாவுக்கு வந்து யோக குருவானா... ராம்தேவ் ஒரு தீவைத் தானே விலைக்கு வாங்கினார். இவர் இந்திய தீபகற்பத்தையே விலைக்கு வாங்கிடுவார்’னு நெனச்சுக்கிட்டேன்.






ஆனா, இவர் விவரமில்லாமல், ‘வயித்துக்காக மனுசன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு’ என்பதைப் போல, வயிற்றுக்காக உடலைச் சுருக்கி, டென்னிஸ் மட்டைக்குள் புகுந்து வெளிவருகிறார். இதெல்லாம் செஞ்சா   நம்ம ஊரில் இவர்தான் பெரிய தில்லாலங்கடி!

Related Posts with Thumbnails