Friday, May 21, 2010

தேடுகிறோம்... தேடுகிறோம்...

தேடலின் கதையைத் திரையில் காட்ட வாய்ப்பளிக்கின்றன Google-உம் Youtube-உம்!
இது என் தேடல் மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் தேடல்!
அந்தத் தேடலின் கதை???

IC on tamils??? (International Community on Tamils???)
உங்கள் தேடலை நீங்களும் படமாக்கலாம்... இங்கே!

Wednesday, May 19, 2010

தினமலரின் நிர்வாணக் குதியாட்டம்!

(இந்த இடுகையை முழுதாகப் படிக்கவும், இணைக்கப்பட்டுள்ள காணொளியைக் காணவும் மேலே உள்ள தலைப்பை ஒரு முறை சொடுக்கவும்.)

"மூடநம்பிக்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம்."
"மத நம்பிக்கைகள் என்பது வேறு; மூட நம்பிக்கைகள் என்பது வேறு"
கடவுள், மத மறுப்பை, மூடநம்பிக்கைகளை தோலுரிக்கும் போது இப்படியெல்லாம் பலர் உதார் விடுவதைப் பார்த்திருப்பீர்கள்.

ஆனால், மூடநம்பிக்கைகளும் மத நம்பிக்கைகளும் வேறுவேறானவை அல்ல.. மூடநம்பிக்கைகள் தான் மதத்திற்கான வருவாய், கூட்டம் சேர்க்கும் காரணிகள் என்பது நாம் அறிந்ததே!

அதற்கான இன்னொரு சாட்சி - தினமலரின் இந்த வீடியோ செய்திக் காட்சி!

சென்னை கோட்டுர்புரத்தில் உள்ள அரசு நிறுவனமான "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்" * குழந்தைகளுக்கான மூன்று நாள் அறிவியல் முகாம் ஒன்றை நடத்தியிருகிறது. இதில் பல்வேறு வகுப்புகளின் ஊடாக 'இந்திய பகுத்தறிவாளர் இயக்கங்களின் கூட்டமைப்பான FIRA' -வின் செயலாளரும், நாடறிந்த மூடநம்பிக்கை எதிர்ப்பாளரும், 'மந்திரமா? தந்திரமா?' செயல் விளக்க வித்தகரும், பெங்களூருவைச் சேர்ந்த பேராசிரியருமான நரேந்திர நாயக் அவர்களின் அறிவியல் விளக்க நிகழ்ச்சியும், பயிற்சியும் நடைபெற்றுள்ளது.

ஒரு நாள் அவர் எடுத்த வகுப்பிலேயே, பகுத்தறிவை - கேள்வி கேட்கும் ஆர்வத்தை குழந்தைகள் மத்தியில் அறிமுகப்படுத்தியதுமே அவர்களின் சிந்தனைப் போக்கில் மாற்றம் தென்படுகிறது. தான் கொண்ட மூடக் கருத்துகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் வயதானவர்களை விட, புதிதாக எதையும் கற்கும் குழந்தைகளிடம் பகுத்தறியும் அறிவியல் சிந்தனையை அறிமுகப்படுத்தினாலே போதும் எது சரியென்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். இதற்கு சரியான உதாரணமாகத் தான் இந்நிகழ்வை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், இப்படியெல்ல்லாம் அறிவு வந்துவிட்டால் ஆகுமோ பார்ப்பனக் கூட்டத்துக்கு... ? பாருங்கள்.. சிண்டைப் பிடித்துக் கொண்டு தினமலர் நிர்வாணக் குதியாட்டம் போடுவதை!
'பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கிறார்களாம்',
'பிஞ்சுகள் பேசிய விதம் சர்ச்சையைக் கிளப்பிய'தாம்,
'இந்து மதத்தையே விமர்சிக்கும் அளவிற்கு' பிஞ்சுகள் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்..
பொறுக்க முடியவில்லை பூணூல் கூட்டத்துக்கு!

அந்தக் குழந்தைகள் பேசுவதைக் கேட்கும்போது நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சி! தினமலர்க் கூட்டத்துக்கோ அது அதிர்ச்சி! அடிப்பீடத்துக்கே ஆப்பு என்றால் அலறித்தானே துடிக்கும் ஆரியக் கூட்டம். பெற்றோர்கள் எதிர்ப்பென்று பசப்புகிறது. பாவம் ஒரு குழந்தையின் பெற்றோரிடம் கூட எதிர்ப்பைப் பதிவு செய்ய முடியவில்லை போலும்! தினமலரின் குரல் மட்டுமே அவலமாய் ஒலிக்கிறது! நமக்கு சிரிப்புத் தான் வருகிறது.

நீங்களும் கேளுங்கள் அந்தப் புலம்பலை! இனியாவது தினமலருக்கு சப்பைக்கட்டு கட்டும் கூட்டத்தார் புரிந்துகொள்வார்களா? இந்தக் கூட்டம் தான் குழந்தைகளுக்கென "சிறுவர் மலர்" போடுகிறதாம். இவர்கள் வளர்க்கும் சிந்தனை எப்படி இருக்கும் என்பதற்கு இதுவொன்றே எடுத்துக்காட்டு அல்லவா? தினமலரின் வயிற்றெரிச்சல் காட்சியைப் பார்த்துச் சிரியுங்கள்!


*குறிப்பு: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் கீழ் சென்னை கோட்டுர்புரத்தில் இயங்கும் நிறுவனத்தின் பெயர் "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்" என்பதாகும். (திருச்சியில் அண்ணா பெயரில் இதே போன்ற மையம் உள்ளது.) அதில் உள்ள ஒரு பகுதியே பிர்லா கோளரங்கம் எனப்படும் வான்காட்சியகம். தினமலர் காட்டும் காணொளியில் கூட "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்" என்ற பெயர்ப்பலகைதான் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் பெரியார் பெயரைச் சொல்லத்தான் ஆரிய நாக்குக் கூசுமே! ஈ.வெ.ரா என்றுதான் அந்து போன மணிக் கூட்டம் எழுதும். அதனால் தான் இந்த இருட்டடிப்பு! பிர்லா கோளரங்கத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமாம்!
இது தினமலர் தான் என்றில்லை தோழர்களே! சன் டிவி கும்பலும் இப்படித் தான் சொல்லி வந்தது. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் பெயரை போடும் போதும் பிர்லா கோளரங்கம் என்றுதான் போட்டு வந்தது; திரு. அய்யம் பெருமாள்- பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநரே அன்றி பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் அல்ல. நமது எதிர்ப்பைப் பதிவு செய்ததும் இப்போது அந்நிலை மாறியிருக்கிறது. ஆனால் தினமலர் திருந்துமோ?

அந்த நாள் என் நினைவில் இருக்கிறது...

அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

இன்றோ...
நாளையோ...
விடியும்
எங்கள் வாழ்வு என்று
வானோக்கியிருந்த
எங்களை
இருட்டு வந்து
சூழ்ந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

பதுங்குவது
பாய்வதற்கே என்று
போரின்
நாட்குறிப்புகளைப்
புரட்டிப் பார்த்து
நிம்மதி கொண்டிருந்த
எங்களுக்கு
நாளை குறிக்க
தாளே இல்லை என்ற
குறிப்பு வந்து சேர்ந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

'மக்களைக் காக்க
நாங்கள் இருந்த
நாள் போக...
எங்களைக் காக்க
மக்களா?
எங்கள் துவக்குகள்
மௌனிக்கும்'
என்ற குரல் கேட்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

"வெள்ளைக் கொடி
ஏந்தினாலும்
கொல்லுவோம்...
தமிழர்களை
கடைவாயில்
மெல்லுவோம்..."
-கொக்கரித்த கொடூரனின்
ரத்தம் வடிந்த
புன்னகை கண்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

தந்தையை..
தமையனை..
கணவனை...
களத்திற்குத் தந்து
தனயனை..
களத்திற்கனுப்பிய
தாய் போல்..
"எம் பிள்ளைகளை
நாட்டுக்கே கொடுத்திட்டனப்பா"
என்ற எம் தலைவனின்
பெருமிதம் கேட்ட
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

கள நிலைக்குத்
திரையிட்டு
எம் அரிப்புக்கு
சொறிந்துவிட்ட
வாய்ப்பந்தல்
வீரர்களின்
பொய்கள் வெளித்தெரிந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

இதுதான் தருணம் என
இந்தியா இளிக்க...
வருவாயில் பங்குபோட
பாக் சிரிக்க...
போதுமா ஆயுதம் என
சீனம் கொடுக்க...
ஒன்றும் நடவாது போல்
உலகமே பார்க்க...
ஓர் இனமே
இல்லாதொழிந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

தாய்நாடென்ற
கனவும் கூட
கொடூரமானதென்று
ஊளையிட்டபடி
ஊடக நரிகள்
பிணங்களைப்
பார்த்து
வயிறு நிறைந்த
அந்த நாள்
என் நினைவில் இருக்கிறது...

வாய்க்காலில்
குருதியோடிய
அந்த நாள்...

பெருவெடிப்பு
நிகழ்ந்த
அந்த நாள்...

கனவுகள்
பாஸ்பரசில் கரைந்த
அந்த நாள்...

துரோகங்கள்
சூழ்ந்த...

நினைவுகள்
மரத்த...

மரணமே
ஓலமிட்ட...

இனமே
அழிந்துபட்ட...

அந்த நாள்...
அந்த நாள்...
அந்த நாள்...

என் நினைவில் இருக்கிறது...
இருக்கும்...

மண்ணில்
என் எலும்பு
கரையும் வரை...
என் ஊன்
கலக்கும் வரை...
எம்மினத்தின்
கடைசி உயிர்
இருக்கும் வரை...
அந்த நாள்
எம் நினைவில் இருக்கும்...

நந்திக்கடலில்
புலிக்கொடி
பறக்கும்
நாள்வரை...
அதைக் கடந்தும்
அந்த நாள்
எம் நினைவில் இருக்கும்...

Tuesday, May 04, 2010

ரத்தச் சாட்டை எடுத்தால்...

மே நாளையொட்டி பதிவிட வேண்டும் என்று நினைத்து இந்தப் பாடலைத் தேடித் தேடி பின்னர் ஒரு வழியாக cooltoad.com-இல் கண்டெடுத்தேன். பின்னர் பாடல் வரிகளை எழுதி இப்போதுதான் பதிவிட முடிகிறது. "எரிமலை எப்படிப் பொறுக்கும்?" - இந்தப் பாடலை எனக்கு அறிமுகம் செய்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. அட, பழக்கம் எல்லாம் கிடையாதுங்க... ஒரு முறை தொலைக்காட்சியில்(சன் ஆக இருக்கக்கூடும்) சிறப்பு நிகழ்ச்சி நடக்கும் நாள் ஒன்றில் (எந்த நாளென்று நினைவில்லை) (அப்போதைய) கவியரசு வைரமுத்து பங்கேற்கும் "பாட்டு பட்ட பாடு" என்ற அறிவிப்பு கேட்டுக் காத்திருந்து பார்த்த நிகழ்ச்சி.

சென்சார் துறையின் கத்திரிகளால் வெட்டப்பட்ட அல்லது அதற்காக மாற்றப்பட்ட பாடல்கள் பற்றிய நிகழ்ச்சி அது. அவை குறித்து விரிவான தனிப்பதிவொன்றையும் அப்பாடல்களுடனான எனது அனுபவத்தையும் எழுதலாம். எழுதுவேன். அப்படி வந்த பாடல்களின் வர்சையில் சிவப்பு மல்லி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலையும் பற்றிக் குறிப்பிட்டார் வைரமுத்து. நான் அப்போதுதான் அந்தப் பாடலை முதல் முதலாகக் கேட்கிறேன். நெருப்புத் தெறிக்கும் அந்த வரிகளில் அப்போதே நரம்பு முறுக்கேறியது எனக்கு. அன்று முதல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகிப்போனது இப்பாடல்.

"எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?" -
இந்த வரிகளுக்கு அடுத்து வந்த வரியை சென்சாரின் கத்திரி காவு வாங்கியிருக்கிறது. இதோ கவிப்பேரரசின் கணீர் குரலில் இதைப் படித்துப் பாருங்கள்.
"எரிமலை எப்படி பொறுக்கும்? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்.. இந்த வரிகளுக்கு அடுத்து 'ரத்தச் சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்' என்று எழுதியிருந்தேன். நான் எழுதியிருந்த வரியில் 'ரத்தச் சாட்டை' என்ற சொல்லில் வன்முறை இருப்பதாக சென்சார் துறை கருதியது. பாடல் பதிவாகி படம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்ட நிலையில்.. இந்தப் பாடலின் வரிகளை சென்சாருக்காக பின்வருமாறு மாற்றினேன். "சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்."

முதலில் வந்த இசைத் தட்டுகளில் 'ரத்தச் சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்' என்ற வரி தான் இடம்பெற்றிருந்ததாம். எனக்கு அந்த வரியோடு பாடுவதில் தான் விருப்பம். நான் பாடும்போதெல்லாம் ரத்தச் சாட்டையைத் தான் எடுப்பேன். இருப்பினும் அந்தப் பாடல் கிடைக்கவில்லை. கிடைத்தால் அதையும் பதிவிடுகிறேன். இப்போதைக்கும் 'சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால்' என்ற வரியுடன் பாடல் வரிகளைப் பதிவிடுகிறேன். பாடலையும் இணைத்துள்ளேன்.
கேளுங்கள்... உழைப்பாளர் தின சிறப்புப் பாடல்.

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: சிவப்பு மல்லி
இயக்கம்: இராம.நாராயணன்
பாடலாசிரியர்: கவிப்பேரரசு வைரமுத்து

ஆண் 1:
எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ஆண் 2:
எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால்
துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால்
துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

(பறை இசை)

சரணம் 1: (ஆண்-1)
ரத்தம் இங்கே வேர்வையாக
கொட்டிவிட்டது;
உயிர் வற்றிவிட்டது
காலம் இங்கே ஊமைக் கையைக் கட்டி விட்டது;
கண்ணீர் சுட்டுவிட்டது

ரத்தம் இங்கே வேர்வையாக கொட்டிவிட்டது;
உயிர் வற்றிவிட்டது
காலம் இங்கே ஊமைக் கையைக் கட்டி விட்டது;
கண்ணீர் சுட்டுவிட்டது

ஏரு பிடித்தவர்
இருமி இளைத்தவர்
வேர்வை விதைத்தவர்
வெயிலில் அறுத்தவர்
தட்டிக் கேட்கும் காலம் வந்தால்
தர்மங்கள் தூங்காது.

குழு:
மேதினம் உழைப்பவர் சீதனம்
மேதினம் உழைப்பவர் சீதனம்

ஆண்-1
எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால்
துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்
குழு:
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

சரணம் 2: (ஆண்-2)
எழுதியபடி தான் நடக்கும் எல்லாம்
விதிவசம் என்பதை விட்டுவிடு!
இளமை உன் தோள்களில் இருக்கும்போதே
எது நிசம் என்பதை எட்டிவிடு

எழுதியபடி தான் நடக்கும் எல்லாம்
விதிவசம் என்பதை விட்டுவிடு!
இளமை உன் தோள்களில் இருக்கும்போதே
எது நிசம் என்பதை எட்டிவிடு

காலம் புரண்டு படுக்கும்
நம் கண்ணீர்த் துளியைத் துடைக்கும்
காலம் புரண்டு படுக்கும்
நம் கண்ணீர்த் துளியைத் துடைக்கும்

குழு:
மேதினம் உழைப்பவர் சீதனம்
மேதினம் உழைப்பவர் சீதனம்

ஆண் 1:
எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால்
துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

(பறை இசை)

சரணம் 3: (ஆண் 1)
ஏழை வர்க்கம் வேர்வைக்குள்ளே முத்துக் குளிக்கும்;
பின்பு செத்துப் பிழைக்கும்
உழவன் வீட்டுத் தேனும் கூட உப்புக் கரிக்கும்
அதில் கண்ணீர் மிதக்கும்

செருப்பென உழைத்தவர்
வரப்பென இளைத்தவர்
சுடச்சுட அழுதவர்
அடிக்கடி இறந்தவர்

வெற்றிச்சங்கம் ஊதும்போது
தர்மங்கள் தூங்காது

ஆண்:
எரிமலை எப்படிப் பொறுக்கும்?
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால்
துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

குழு:
மேதினம் உழைப்பவர் சீதனம்
மேதினம் உழைப்பவர் சீதனம்

மேதினம் உழைப்பவர் சீதனம்
மேதினம் உழைப்பவர் சீதனம்

(ஆண் 1 - டி.எம்.சவுந்தரராஜன் | ஆண் 2: எஸ்.என்.சுரேந்தர்)

Related Posts with Thumbnails