Friday, August 29, 2008

"அவனாம் - இவனாம்!"

மாநாட்டுச் சிந்தனைகள்

- மின்சாரம்

எல்லோருக்குமே தெரியும் தந்தை பெரியார் நூல்களை வெளியிடுவதிலோ, பகுத்தறிவு வெளியீடுகளைக் கொண்டு வருவதிலோ திராவிடர் கழகத்தோடு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தோடு போட்டி போட முடியாது என்று அந்தக் குழுவுக்கு மட்டுமா - எல்லோருக்குமே தெரியும்.
மிக நன்றாகவே தெரியும்! தந்தை பெரியார் கருத்துகளை பகுத்தறிவுச் சிந்தனைகளை யார் எடுத்துச் சொன்னாலும் மானமிகு வீரமணி என்ன சொல்லுகிறார் என்பதுதான் எடுபடும் என்பது அந்தக் குழுவுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே தெரியும்.
உலகுக்கே தெரியும்! தந்தை பெரியார் கருத்துகளுக்குக் சட்டம் வடிவம் கொடுக்க தேவையான அழுத்தத்தைத் தந்து, சாதிக்கக் கூடிய ஆற்றல் ஆசிரியர் வீரமணிக்குத்தான் உண்டு என்பது அந்தக் குழுவுக்கு மட்டுமல்ல. அகில உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மிக மிக நன்றாகவே தெரியும்.
யாருக்குத்தான் தெரியாது? தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை எல்லைக் கோடுகளைத் தாண்டி, உலகின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் திறனும், திட்பமும் - அதற்கான அமைப்புகளை உருவாக்கித் தொடர்ந்து செயல்படச் செய்விக்கும் செயல் திறன் சிறு வயது முதலே இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, ஈரோட்டுத் தந்தையால் அடை யாளம் காட்டப்பட்ட அந்த மாமனிதர் வீரமணிக்குத்தான் உண்டு என்று அந்தக் குழுவுக்கு மட்டுமல்ல உலகமே ஒப்புக் கொண்ட ஒன்றுதான்.
ஒரு தலைவரின் கொள்கைகள் தொடர்ச்சியாகக் கொண்டு செலுத்தப்பட கல்வி நிறுவனங்கள் என்பவை தலை சிறந்த ஏற்பாடு என்பது அந்தக் குழுவுக்குத் தெரியாது - கல்வியாளர் களுக்கும் தொலைநோக்குச் சிந்தனையாளர்களுக்கும் நுட்பமாகவே தெரியும்.
மத நிறுவனங்கள்கூட இந்த நுட்பத்தைப் புரிந்து கொண்டு இருக்கும்போது, பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்ப வர்களுக்கு விளங்காமல் போனால் அதற்குக் காரணமும் ஆத்திரமும் அறியாமையும்தான்!
வீரமணி என்ன சொல்கிறார்? விடுதலை என்ன எழுதுகிறது? பெரியார் திடலின் செயல்பாடு என்ன என்ற இந்த மூன்று ஆய்தப் புள்ளிகள்தான் பெரியாரியலின் விவேகம் - வேகம் நிறைந்த அதிகாரப் பூர்வமான மையம் என்பது மக்களுக்குத் தெரியும். அதற்கு மேல் யார் எழும்பிக் குதித்தாலும், குடலை அறுத்துக் கொண்டு காட்டி குரக்கலி வித்தை காட்டினாலும், குரங்காட்டம் போட்டுக் கரணம் அடித்துக் காட்டினாலும் அவற்றைத் தமாஷாகக் கருதித் தட்டி விட்டுப் போவார்களே தவிர, அவற்றினை ஒரு பொருட்டாக யாரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
காரணம் தொலைநோக்காளரான தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய அமைப்பும், ஏற்பாடும், வார்த்துக் கொடுத்து விட்டுச் சென்ற தலைமையும் அத்தகையவை!
வேறு யாருக்கும் தந்தை பெரியார் அவர்களிடமிருந்து இந்த அளவு அங்கீகாரம் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களுக்குக் கிடைத்த அளவுக்குக் கிடைத்திடவில்லை.
தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை பிளவுகள் கழகத்தில் தோன்றியது போல தோற்றம் அளித்தாலும், அது அடியிழந்து போனதற்கு இதுவே காரணம் - அடிப்படையும்கூட!
அந்த அங்கீகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அவர் கொடுத்த உழைப்பும், திட்டங்களும், ஏற்பாடுகளும் நுட்பங்களும் அணுகுமுறைகளும் சாதனைகளும் அவரை அசைக்க முடியாத அடையாறு ஆலமரமாக்கி விட்டது!
ஆத்திரப்பட்டு என்னப்பா செய்வது? அசிங்கப்படுத்த முயற்சிக்கலாம். அதற்கான ஆள்கள் தமிழர்களிடத்தில் மலிவாகக் கிடைக்கத்தான் செய்வார்கள் - அதையும்தான் தந்தை பெரியார் சொல்லி வைத்துச் சென்றுள்ளாரே!
ஒரு சினிமா நடிகரை புரட்சித் தலைவர் என்று அவர் பின்னால் சுற்றித் திரிந்தவர்களுக்கு எல்லாம் இப்பொழுதுதான் உண்மையான புரட்சித் தலைவர் பெரியார் என்று தெரிய ஆரம்பித்திருக்கிறது.
அவன் இவன் என்று தமிழர் தலைவரை ஒருமையிலே பேசி அந்தக் கூடாரத்தின் தகுதியை தலைக்குமேல் உயர்த்திக் காட்டுகிறது ஒரு ஜீவன்! பெண்களுக்கே தாலி கூடாது என்கிற ஒரு இயக்கத்தில் தன் பணக்கார அகங்காரத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட, அரை கிலோ தங்கத்தைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு திரியும் அசல் பத்தரை மாற்றுத் தங்கம் கொள்கையில் அவர்.
யார் எதைப் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டதே!
காலமெல்லாம் தந்தை பெரியாரை வசைபாடியே திரிந்த, பெரியாரைக் கொச்சைப்படுத்துவதிலேயே காலத்தைக் கழித்த மார்க்சிஸ்ட் போர்வையில் திரிந்த (அ) சிங்கங்கள், வீரமணியை வசைபாடுவதற்கென்றே பெரியார் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு போர் குரல் கொடுக்கக் கிளம்பியுள் ளது. வாழ்க அவர்தம் தனி ஒழுக்கமும் தியாகச் சீலமும்!
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற இழி குணத்தில் இத்தகு ஆசாமிகளைத் தேடிப் பிடித்து இழுத்து வந்திருக்கின்றது ஒரு குழு. திராவிடர் கழகத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்துள் ளது என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கின்றன.
அட, மடசாம்பிராணிகளே! நீங்கள் சொல்லுகிற வாதப் படியே வைத்துக் கொண்டாலும், வீரமணி பெரியார் விட்டுச் சென்ற சொத்துகளை ஆயிரம் மடங்கு வளர்த்திருக் கிறார் என்பதை இதன் மூலம் ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?
நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் கழுத்தில் சூட்டப்படும் புகழ் மாலையாக அல்லவா மாறுகிறது! வீரமணி - அவருக்குள்ள தனித் தன்மையான ஆற்றலே அதுதான்!
கூர்தீட்டிய மரத்தையே பதம் பார்க்கக் கிளம்புவது தமிழர்களின் சுபாவம்!
பெரியார் கருத்துகளையும், இயக்க ஆவணங்களையும் பிற்காலத்திலும் பேசப்பட வைக்கும் ஏற்பாட்டில் ஆருயிர் இளவல் வீரமணிக்கு நிகராக இன்னொருவரை உலகத்திலே ஈடாகக் கூற எவரும் இல்லை என்று சொன்ன முதல் அமைச் சரிடம், இப்படி ஒரு கோரிக்கை வைக்கிறீர்களே, உங்களைவிட விவரமற்ற பைத்தியக்காரர்கள் வேறு யார்?
தோழர்களே, தந்தை பெரியார் அவர்களை ஒரு காலத்தில் கொச்சைப்படுத்திய ஒரு கூட்டம், அய்யா கண்டெடுத்த அறிவுக் கருவூலமாம் நமது ஆசிரியரை தமிழர் தலைவரை கொச்சைப்படுத்தி, காயப்படுத்த கிளம்பியிருக்கிறது.
சிலிர்த்தெழும் கறுஞ்சிறுத்தைகளே! கருஞ் சட்டைப்போர் மறவர்களே! உங்கள் நெருப்புப் பார்வைகண்டு பொசுங்கட்டும் அந்தப் பஞ்சுப் பொதிகள்!
புறப்படுங்கள் சென்னை மாநாட்டுக்கு, புறப்பாட்டுப் பாடுவோம்! புலிப் போத்துகளே எழுக!
செப்டம்பர் 6,7, நீங்கள் இருக்கும் இடம் சென்னை; அப்பொழுதுதான் எதிரிகளும், அவர்களை ஆசை தீரக் குளிப்பாட்டும், பதர்களும் இருக்கும் இடம் தெரியாமல் போய் ஒளியும்!
சந்திப்போம்! சந்திப்போம்!!

நன்றி: விடுதலை-http://files.periyar.org.in/viduthalai/20080827/news39.html

"குடிஅரசு" இதழ்களை வெளியிட
பெரியார் திராவிடர் கழகத்துக்குத் தடை!

இப்போதுள்ள நிலையே (Status Quo) நீடிக்கும்சென்னை - உயர்நீதிமன்றம் ஆணை
"குடிஅரசு" இதழ்த் தொகுதிகளை வெளியிடுவது குறித்து திராவிடர் கழகத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டவர்கள் நடத்தும் பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பினை எதிர்த்து, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் கி. வீரமணி அவர்களால் சென்னை - உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.வழக்கினை நீதிபதி எம். ஜெயபால் அவர்கள் விசாரித்தார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ. தியாகராசன், த. வீரசேகரன், பி. பிரசாத், ஆர். அருண்குமார், எம். சுனில்குமார் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கினை விசாரித்த நீதிபதி, இந்தப் பிரச்சினையில் இப்பொழுதுள்ள நிலையே நீடிக்கவேண்டும் (Status Quo) என்றும், வழக்கு வரும் 1.9.2008 அன்றைக்கு (திங்கள்கிழமை) ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவித்தார். எதிர்தரப்பினருக்காக வக்கீல் எஸ். துரைசாமி ஆஜரானார்.இதன்படி “பெரியார் திராவிடர் கழகம்” “குடிஅரசு” தொகுப்புகளை வெளியிட முடியாது என்று தடை விதிக்கப் பட்டுள்ளது.

Tuesday, August 26, 2008

மோதல் போக்குதான் நோக்கம்!

மோதல் போக்குதான் நோக்கம்!

- மின்சாரம்

தந்தை பெரியாரின் நூல்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனதிற்குச் சொந்தமானவை. அவை பதிப்புரிமை பெற்றவை என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஓர் அறிவிப்பினை செய்தாலும் செய்தார்-
இது என்ன அநியாயம்! பெரியாரின் சிந்தனைகள் தனி உடைமையா? பெரியாரின் கருத்துகள் மக்களுக்குப் போய்ச் சேரவேண்டாமா? - அதனைத் தடுப்பதா? என்று பெரியார் கொள்கையைப் பரப்புவதற்கென்றே பிறந்தவர்கள்போல் தாம் - தூம் என்று எகிறிக் குதிக்கிறார்கள். கருத்துப் பஞ்சம் ஏற்பட்டு வற்றிப் போய்க்கிடக்கும் சில இதழ்களும், தொலைக்காட்சிகளும் ஆகா - கிடைத்தது ஒரு விஷயம்; அதை வைத்துக் காலட்சேபம் செய்வோம் என்று புறப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இதுதான் சந்தர்ப்பம் என்று பார்ப்பனர் ஒருவர் கூடப் புறப்பட்டு விட்டார் - பெரியார் கருத்துகளைப் பரப்புவதில் அவ்வளவு ஆர்வம் பீறிட்டுக் கிளம்பியிருக்கிறது அவாளுக்கு. தொலைக்காட்சி ஒன்றில் ஒருபட்டி மன்றத்தையே நடத்தினர். பொதுவாக நடுவராகயிருக்கின்றவர் திறந்த மனத்தோடு ஆசனத்தில் அமர்ந்திருக்கவேண்டும். அந்த இலக்கணம் கூடத் தெரிந்து கொள்ளாமலே சில்க் புகழ் வீரர் நடுவராக அமர்ந்து வாய்ச் சவடால் அடித்தது பரிதாபமானது.
எங்களுடைய நோக்கத்தைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள் - என்று நடுவராக இருக்கிறவரே சொல்லிவிட்ட பிறகு, மற்ற பேச்சாளர்களைப்பற்றி கேட்கவா வேண்டும்?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பெரியாரை சிறை வைக்கலாமா? அவர் கருத்துகள் போய் சேர்வதைத் தடுக்கலாமா? என்கிற போக்கிலே, தட்டிக் கேட்க ஆளில்லாதால் சண்டப் பிரசண்டம் செய்தனர்.
அவர்கள் யாருக்குமே திராவிடர் கழகம் என்ன செய்கிறது? எவ்வளவு நூல்களை வெளியிட்டிருக்கின்றது? எத்தனைக் குறுந்தகடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன? என்பது பற்றிய அடிப்படைத் தகவல்கள் இல்லாமல் - தெரிந்துகொள்ளவும் ஆசைப்படாமல், முயற்சியும் செய்யாமல் கேமிரா முன் உட்கார வாய்ப்புக் கிடைத்ததே என்று வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறிக் கொட்டினர்.
தன்மான இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட காலந்தொட்டு, வேறு எந்த காலகட்டத்திலும் இவ்வளவு பகுத்தறிவு நூல்கள் வெளியிட்டதில்லை என்கிற அளவுக்கு 338 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தலைப்பு வாரியாக இதுவரை ஒரு தொகுதியைக்கூட வெளியிடவில்லை என்று குற்றப்பத்திரிகை ஒன்றைப் படித்தார் ஒருவர் - பெயர் சூரியதீபனாம் - ஆனால், அவர் அறிவோ தீபத்தில் கருகிப் போய்விட்டதை அறிய முடிகிறது. களஞ்சியம் தொகுதிகள் கடவுள்-2, மதம் தொகுதிகள் - 7, பெண்ணுரிமை தொகுதிகள் - 5, ஜாதி தீண்டாமை ஒழிப்பு - 17, இவற்றோடு குடிஅரசு இதழ்கள் - குறுந்தகடுகள் - 19 வெளியிடப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்டதோடு மட்டுமல்ல - இவற்றை தமிழ்நாடு முழுமையும் கொண்டு சேர்க்க இரு நடமாடும் வாகனங்கள் மாதம் முழுவதும் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன.
புத்தகக் கண்காட்சி எங்கெல்லாம் நடக்கின்றனவோ அங்கெல்லாம் அந்நூல்களை விற்பனை செய்வதற்கென்றே தனிக் குழுவே இருக்கிறது!
முக்கிய நகரப் பேருந்து நிலையங்களில் எல்லாம் புத்தகக் கடை சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் அத்தகைய விற்பனையகங்களைத் திறந்திட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு தலைவரின் கருத்துகளைப் பரப்பிட திராவிடர் கழகமும் அதன் தலைவரும் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு, செயல்பாடுகளுக்கு நிகராக உலகில் வேறு எந்த அமைப்பையோ, தலைமையையோ சுட்டிக்காட்ட முடியுமா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.
பெரியாரின் கருத்துகள் மக்களிடம் போய்ச்சேரவில்லை என்று கூறுவது அறியாமையா? அல்லது மனமறிந்த பொய்யுரையா? பெரியார் கொள்கைகள்மீது இவ்வளவு அக்கறை உள்ளதுபோல பம்மாத்து செய்யும் அந்தத் தொலைக்காட்சி நிறுவனம், பெரியாரின் கருத்துகளை - பகுத்தறிவுச் சிந்தனைகளை - பரப்பிட ஒரு அய்ந்து நிமிடம் நாள் ஒன்றுக்குச் செலவழித்ததுண்டா?
இந்தப் பிரச்சினை கூட ஒரு நல்ல தீனி என்கிற முடிவில் - வியாபாரத்துக்கான ஒரு சரக்கு - தலைப்பு என்பதைத் தவிர, வேறு தந்தை பெரியாரின் கொள்கைகள் பரவ வேண்டும் என்ற நல்லெண்ணமா? நாள் முழுவதும் மூடக் குப்பைகளைக் கொட்டி கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள், பெரியார் கொள்கை மீது திடீர்க் காதல் கொள்வதை நினைத்தால் வாயால் சிரிக்க முடியாது.
அறிவுக்குத் தடையா? என்று தாண்டி குதித்தார் ஒரு பார்ப்பனர். அவர் ஒரு பத்திரிகை நடத்தினார். எப்படி தெரியுமா? 1982 இல் மூன்று இதழ்கள்; 1985 இல் ஆறு இதழ்கள், 2002 இல் மீண்டும் துளிர்த்து வந்த வேகத்திலேயே கருகி விட்டது.
ஒரு இதழைக்கூட ஒழுங்காக நடத்த இயலாத துப்புக்கெட்டதுகள் எல்லாம் 74 ஆண்டு காலம் ஏடு நடத்தி நாள்தோறும் தந்தை பெரியார் கருத்துகளைப் பரப்பும் இயக்கத்தின்மீதும், தலைவர்மீதும் குப்பை வாரி இறைக்கிறார்.
நா தழும்பேற கருணாநிதியும் வீரமணியும் பெரியாருக்குத் துரோகம் செய்துவிட்டதாக பேசிய இந்தப் பார்ப்பனர், இதுதான் சந்தர்ப்பம் என்று கலைஞர்மீது காழ்ப்புணர்வைக் கொட்டுகின்றனர்.
இடையில் நேயர் ஒருவர் குறுக்கிட்டு (கும்பகோணத்துக்காரர்) புத்த ஜாதக கதை போல் கயிறு திரித்தார். சிலவற்றை பெரியார் சொன்னதுபோல கதைத்தார். பெரியார் வாழ்ந்த இந்தத் தலைமுறையிலேயே இப்படிப் புளுகுகிறவர்கள் என்றால் பெரியார் நூல்களை மற்றவர்கள் வெளியிட அனுமதித்தால் எவ்வளவு ஆபத்து என்பதை இது உணர்த்துகிறது.
இன்னொரு நேயர் - சந்தடி சாக்கில் பந்தலிலே பாகற்காய்... ஒன்றைப் பாடினார்.
பெரியார் நூல்களை அரசுடமை ஆக்கினால் பெரியார் சிந்தனைகள் தொகுப்புக்காக அந்தப் பணத்தை ஆனைமுத்து அவர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்று ஒரு மகஜரையும் கொடுத்துவிட்டார்.
அது தொடர்பாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பெரியார் சிந்தனைகள் என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளை தோழர் ஆனைமுத்து வெளியிட்டார். சிந்தனையாளர் கழகத்தின் சார்பில்.
34 ஆண்டுக் காலமாக மறு பதிப்புச் செய்யவில்லை; என்பதால் அதனைப் பதிப்பிக்க மற்றவர்கள் யாரும் முன் வரவில்லையே - ஏன்? அதுபற்றி கோரிக்கையை (நமது நோக்கம் அது அல்ல) எழுப்பாதது ஏன்? திராவிடர் கழகத்தோடு - அதன் தலைவரோடு மோதல்போக்கை உண்டாக்க எப்படியோ குறுக்கு வழியில் விளம்பரம் தேடும் அற்ப ஆசை அல்லாமல் இது வேறு என்ன?
தோழர் ஆனைமுத்து அவர்கள் அந்தத் தொகுதிகளை வெளியிட்ட போது - திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் ஏன் தடுக்க முன்வரவில்லை என்று ஒருங்கிணைப்பாளர் ஒரு கேள்வியை எழுப்பினாரே பார்க்கலாம்!
இவ்வளவு அறியாமை இருட்டில் அவர் இருப்பார் என்று நினைக்கவில்லை. இதில் கறுப்புச் சட்டை வேறு - கறுப்புச் சட்டை போட்டவர்களை எல்லாம் பெரியாரிஸ்டாக நினைக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!)
அந்தத் தொகுதிகள் கூட தந்தை பெரியார் அவர்களின் அனுமதிபெற்றுத்தான் கொண்டு வரப்பட்டது - பதிப்புரிமை பெற்றது என்பதை இப்பொழுதுதாவது அவரைப்போல இருட்டில் சஞ்சரிப்பவர்கள் தெரிந்துகொள்ளட்டும்!
என்.சி.பி.எச். என்ற ஒரு நிறுவனம் இருக்கிறது. அது வெளியிடும் நூல்களை அப்படியே மற்றவர்கள் வெளியிட முடியுமா?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் - பெரியார் கருத்தை மற்றவர்கள் பிரச்சாரம் செய்வதைத் தடுப்பது போலவும், முடக்குவது போலவும் கீழ்த்தரமான குற்றச்சாட்டை திருப்பித்த திருப்பி, ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டு தெரிவித்தது விஷமத்தனமானது - கண்டிக்கத் தக்கதாகும்.
தெருமுனைக் கூட்டங்கள் போடட்டும், பொதுக்கூட்டங்கள் நடத்தட்டும், பேரணிகளையும் அணிவகுக்கச் செய்யட்டும். தந்தை பெரியார் அவர்களைப் பற்றி ஏராளமான நூல்களை வெளியிடட்டும். நமது வெளியீடுகளிலிருந்து மேற்கோள்களைக் காட்டட்டும்! பெரியார் திடல் நூலகம், ஆய்வகத்துக்கு வந்து ஆய்வுப் பணிகளை அறிவு ஜீவிகள் மேற்கொள்ளட்டும் - வரவேற்கதக்கதாகும்.
ஆனால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள பதிப்புரிமை பெற்ற நூல்களை தங்கள் வெளியீடாகக் கொண்டு வர யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி சில நூல்களை கொஞ்சமும் அறிவு நாணயமின்றி வெளியிட்டு தங்களின் தராதரத்தை புலப்படுத்திக் கொண்டுவிட்டார்கள்.
தந்தை பெரியார் அவர்களால் நடத்தப்பட்ட குடிஅரசு பகுத்தறிவு, திராவிடன், விடுதலை, உண்மை முதலிய இதழ்களை அப்படியே வெளியிடுவதைத்தான் கூடாது என்கிறோமே தவிர, வேறு எந்தத் தடையும் இல்லையே!
ஒரு சர்ச்சையைக் கிளப்பி விளம்பரக் குளிர்காய வேண்டும் என்கிற குறுக்குப் புத்திதான் இதில் புதைந்து கிடக்கிறது.
மோதல் போக்கு என்னும் வெறிபிடித்து அலைகிறார்கள் - இது பண்பாடல்ல!
குடிஅரசு இதழ்களை குறுந்தகடுகளாக வெளியிட்டுள்ளோம் - அவற்றைப் பயன்படுத்தி அப்படியே நூலாக வெளியிடுவது தார்மிக அடிப்படையில் சரியானதுதானா? என்ற கேள்விக்கு நியாயப்புத்தியோடு பதில் சொல்லவேண்டும்.
தந்தை பெரியார் மாபெரும் சமூகப் புரட்சியாளர். அவர் தம் படைப்புகளை வெளியிடும்போது எங்கள் அளவுக்குப் பொறுப்புணர்ச்சி மற்றவர்களுக்கு இருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது.
ஜாதி என்பது தமிழ்ச் சொல் அல்ல. தமிழர்களிடையே ஜாதி என்பது கிடையாது என்று சொன்னவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் கருத்துகளைத் தொகுத்த ஒரு பேராசிரியர் ஒருவர் ஜாதி என்று வருகிற இடங்களிலெல்லாம் சாதி என்றே தொகுத்துள்ளார். இது எவ்வளவு பெரிய ஆபத்து! தந்தை பெரியார் கருத்துகளைக் கூறுவதாக நினைத்துக் கொண்டு, தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளையே தலைகீழாகப் புரட்டும் தன்மைதானே இது.
தொகுத்த பேராசிரியருக்குக் கெட்ட நோக்கம் இருக்க நியாயமில்லை என்றாலும், தனித்தமிழ் என்று ஜவுக்குப் பதில் ச போட்டதால், புரட்சியாளர் பெரியாரின் கருத்தே மாறிவிடுகிறதே!
பெரியாரால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு - அதன் தலைவர் தலைமையின்கீழ்தான் கருத்துச் சேதாரமின்றி வெளியிட முடியும் என்பது கல்லுப் போன்ற உறுதியாகும்.
எந்தப் பிரச்சினைகளையும் ஒரு கோணத்தில் மட்டும் பார்க்கக் கூடாது; பல கோணங்களிலும் பார்ப்பதுதான் பகுத்தறிவு!
என்ன புரிகிறதா?

http://files.periyar.org.in/viduthalai/20080825/news21.html

Monday, August 25, 2008

ஊன்றிப் படித்து உண்மையை அறிக!

ஊன்றிப் படித்து உண்மையை அறிக!
சென்னை மாநாடுகளும் - நமது சிந்தனையும்!
- கலி. பூங்குன்றன்,
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.

மதவாதம் இந்தியத் துணைக் கண்டத்தை மட்டுமல்ல - உலகப் பந்தையே உருட்டி மிரட்டிக் கொண்டு இருக்கிறது!வெடிகுண்டுகள் ஒரு பக்கம்; மனிதனே வெடிகுண்டாகி ரத்தத்தைக் குடித்துக் கொண்டு இருக்கிறான் மறுபக்கம்! ஓருயிர் போகட்டும் - அதற்கு விலையாக ஒரு நூறு உயிர்களைக் குடிப்போம் என்கிற குரூரப் புத்தியை மதங்கள் மலிவாக வழங்கிக் கொண்டு இருக்கின்றன.கடவுளிடம் அனுமதி பெற்று ஈராக்கின் மீது போர் தொடுத்தோம் என்று படித்த மனிதன் - அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் விஷம் கக்குகிறார்.ஒரு மதத்துக்கும், இன்னொரு மதத்துக்கும் மட்டுமல்ல - ஒரு மதத்தின் குட்டிகளுக்குள்ளேயே கூட அடிதடி - ரணம் - ரத்த ஆறு!மதம் வழி காட்டியது போதும், போதும்! புது வழியைத் தேடும் - புதுப் பார்வையை நாடும் ஒரு காலகட்டம் இது.இதற்குத் தேவைப்படும் மாமனிதர்தான் தந்தை பெரியார் - மாமருந்துதான் தந்தை பெரியார் என்ற சமூக விஞ்ஞானி கண்டுபிடித்துக் கொடுத்த சுயமரியாதை - சமத்துவ - பகுத்தறிவுச் சித்தாந்தம்!உலகில் இதற்கான ஒரே ஒரு தனித்தன்மை வாய்ந்த இயக்கம் திராவிடர் கழகம் மட்டுமே! பகுத்தறிவுக் கருத்தினை மக்கள் இயக்கமாக நடத்தும் ஒப்புவமை இல்லாத ஒரே இயக்கம் இதுதான்!
74 ஆண்டுகள் இந்தக் கொள்கைக்காக ஒரு நாளேடு வீறு நடைபோடுகிறது என்றால், அது சாதாரணமானதல்ல.விடுதலை விடுவித்த கட்டுகள் ஒன்றல்ல இரண்டல்ல! அது எத்தனையோ தளைகளை தகர்த்திருக்கிறது - எத்தனையோ விலங்குகளை உடைத்திருக்கிறது.எல்லாத் திசைகளிலும் விடுதலை தன் முழக்கத்தை ஓங்கி ஒலித்திருக்கிறது - நெடுநாள் தூக்கங்களையெல்லாம் ஓட ஓட விரட்டியிருக்கிறது.கல்வி நீரோடையில் ஆரிய முதலைகளையெல்லாம் வெளியேற்றியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் நீச்சல் குளமாகவும் அது மாற்றப்பட்டதற்கு விடுதலை நிச்சயமாக மார் தட்டலாம்.பெண்ணுரிமையின் பீரங்கியாக முழங்கியிருக்கிறது. ஜாதி ஆணி வேரைச் சுட்டெரிக்கும் எரிமலையாக வெடித்திருக்கிறது.மூட நம்பிக்கைகளின் மூச்சை நிறுத்தும் போர் வாளாகச் சுழன்றிருக்கிறது.
தரை தட்டிப்போன கப்பலாக இருந்த தமிழர் வாழ்வில் தன்மான விசை கொடுத்த தளகர்த்தராக சமர் புரிந்திருக்கிறது.சுருக்கமாகச் சொல்லப்போனால், தமிழன் தலை நிமிரவும், தோள்கள் புடைக்கவும், கூன் விழுந்த முதுகு நிமிரவும், புதுநடை போட - புதுத் தெம்பூட்டும் பூகம்பமாய், புயல் கலனாய் தன் பணியை ஆற்றியிருக்கிறது.விடுதலை இல்லையென்றால் - கெடுதலைதான் என்ற நிலையிருந்தும், அதற்கொரு சோதனை ஏற்பட்டதுண்டு.அதன் கர்த்தாவாகிய தந்தை பெரியார் விடுதலையை நிறுத்தி விடலாம் என்கிற முடிவுக்கு வரும் ஒரு நிலை ஏற்பட்டது.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் வாராது வந்த மாமணியாய் தந்தை பெரியாருக்குக் கிடைத்தவர்தான் எம்.ஏ., பி.எல். படித்த அன்றைய இளைஞர் மானமிகு வீரமணி அவர்கள்.விடுதலை தொடர்கிறது என்றால், அதற்குக் காரணம் இவர் தான் - ஆம் இவரேதான்! தந்தை பெரியார் அவர்களே வெளிப்படை யாக இதனை எழுதவும் செய்தார் (விடுதலை, 6.6.1964).அந்த நேரத்திலும்கூட, தந்தை பெரியார் அவர்கள் துரோகிகளை அடையாளம் காட்டவும் செய்தார்.
இயக்கத் தோழர்களை எனது இயக்கத்தில் இருந்து மனிதர்கள் ஆகி எனக்கும், இயக்கத்திற்கும் கத்தி தீட்டும், தீட்டி வெளியேறிய தோழர்களைத் தவிர்த்து மற்ற இன்று இயக்கத்தில் இருக்கும் அதுவும் இயக்கத்தால் தங்கள் நலனுக்கு எந்தவித பலனும் அடையாமல், அவர்களது பணத்திலேயே வாழ்ந்து கொண்டு, அவரவர்கள் நேரத்தைச் செலவு செய்துகொண்டு பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்து இயக்க வளர்ச்சிக்கு இரவும் பகலும் பாடுபடும் உண்மைத் தொண்டர்களான இயக்கத் தோழர்களை வேண்டிக் கொள்கிறேன்.
விடுதலை பத்திரிகை - நண்பர் வீரமணி அவர்கள் ஏகபோக நிர்வாகத்தின் கீழ் நல்ல நிலையில் நஷ்டமில்லாத நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால், இப்போது இருப்பதைவிட இன்னும் குறைந்தது 2500 சந்தாதாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டாகவேண்டும் (விடுதலை, 6.6.1964) என்று தந்தை பெரியார் அவர்கள் கையெழுத்திட்டு விடுதலை தலையங்கமாகவே எழுதினார்களே - அதனை இந்த நேரத்தில் நினைவு கூர வேண்டியது மிகவும் அவசியமாகும்.
எந்த நம்பிக்கையில் தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களிடம் விடுதலையை ஏக போக நிர்வாகத்தில் ஒப்படைத்தார்களோ, அந்த நம்பிக்கை பொய்த்துப் போய் விடாமல், கம்பீரமாக வெற்றிகரமாக வீறுநடை போடச் செய்துவிட்டாரே - மனதில் மாசில்லாத மக்கள் அனைவரும் மனமொப்பி அதற்காக நன்றி பாராட்டுவார்கள்.தந்தை பெரியார் அவர்கள் தம் அறிக்கையில் சுட்டிக் காட்டியதுபோல, இந்த இயக்கத்தால் மனிதர்கள்ஆனவர்கள் இயக்கத்துக்கும், இயக்கத் தலைமைக்கும் எதிராகக் கத்தி தீட்டத்தான் செய்வார்கள்.ஆனால், நமக்கு தந்தை பெரியார் அவர்களின் அளவுகோல்தான் முக்கியம்.
தம்மிடம் ஏகபோகமாக தந்தை பெரியாரால் ஒப்படைக்கப்பட்ட அந்த விடுதலையை எந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்? நவீன அச்சுக்கூடம் உருவாக்கப்பட்டு, பல வண்ணத்தில் ஆறு பக்கங்களுடன் (முன்பு நான்கு பக்கங்களே!) திருச்சியில் இரண்டாம் பதிப்பு என்ற சாதனை மகுடத்துடன் உலகத் தமிழர்கள் மத்தியிலே ஜொலிக்கச் செய்துவிட்டாரே!உலகம் முழுவதும் உள்ள தமிழ் தெரிந்த அனைவரும் அடுத்த சில மணிநேரங்களிலேயே (நாம் படிப்பதற்கு முன்பே) இணைய தளத்தின் மூலம் படிக்கச் செய்யும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட்டாரே! இந்த வகையில், தமிழ்நாட்டில் முதன் முதலாக வெளிவந்த ஏடு விடுதலைதான் என்பது வைர வரிகளால் பொறிக்கத் தகுந்ததாகும்.
விடுதலையைப் படிப்பதற்கே ஒரு தனிப் பயிற்சி வேண்டும் என்ற நிலை மாறி, பல நாளேடுகளை நாம் அச்சிட்டுக் கொடுக்கிறோம் என்கிற அளவுக்குக் கொண்டு சென்றுள்ளது வளர்ச்சியா? - தேய்மானமா?உண்மை மாதமிருமுறை, பெரியார் பிஞ்சு (குழந்தைகள் இதழ்), தி மாடர்ன் ரேசனலிஸ்ட் என்பவை எல்லாம் எந்தத் தரத்தில் - காலத் துக்கேற்ற பொலிவோடு, வலிவோடு பூத்து மணம் கமழ்விக்கிறது என்பதை புலன்கள் கெட்டுப் போகாத அனைவரும் அறிவர் - பாராட்டுவர்!தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் அடங்கிய நூல்கள் பகுத்தறிவு நூல்கள் அச்சிடும் பணி என்பது போர்க்கால வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே!
அதனை ஒரு தனி நிறுவனமாக்கி, ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அதிகாரியை நிர்வாகப் பொறுப்பாளராக்கி, நூல்கள் அச்சிடும் பணி எந்த நிலையிலும் தடங்கலில்லாமல் நடைபெறுவதற்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்டு, ஓய்வு ஒழிச்சலில்லாமல் அப்பணி நடந்துகொண்டு இருக்கிறதே!
338 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன.
தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் பொருள் வாரியாகத் தொகுக்கப்பட்டு பெரியார் களஞ்சியம் என்ற தலைப்பின்கீழ் சராசரி 300 பக்கங்கள் என்ற அளவில் மக்கள் பதிப்பாக மலிவாக நன்கொடை அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகின்றன.கடவுள்-2 தொகுதிகள், மதம்-7 தொகுதிகள், பெண்ணுரிமை - 5 தொகுதிகள், ஜாதி - தீண்டாமை 17 தொகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன.
தலைப்பு வாரியாக வெளிவந்து கொண்டேயிருக்கும்.


ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக தொகுதிகளை வெளியிடுவதால் யாருக்குப் பயன்? பணம் கொடுத்து வாங்கும் சக்தி உள்ளவர்களின் அலமாரிகளில் அழகு செய்யும் - சாதாரண மக்களுக்குச் சென்றடையாது!மகாபாரத ஆராய்ச்சி - கீதையின் மறுபக்கம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சந்திரசேகர பாவலரின் இராமாயண ஆராய்ச்சி (தொகுப்பு) இவையெல்லாம் வெளியிடப்பட்டுள்ளதே - பெரியார் கொள்கையைப் பரப்பும் பணியில் இவை மிக முக்கியத்துவம் பெறவில்லையா? உலகம் பூராவும் பார்ப்பனர்கள் கீதையைத்தானே அறக்கட்டளை வைத்துப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்? தமிழர் தலைவர் எழுதிய கீதையின் மறுபக்கம் நூலைத் தடை செய்யவேண்டும் என்று ராமகோபாலன்கள் முதலமைச்சரிடம் முறையிட்டனரே - அதற்குப் பிறகாவது நமது ஆசிரியரின் அரும்பணியைப் புரிந்துகொண்டிருக்க வேண்டாமா?ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையென்றால் அதற்காகவே பெரியார் நூலகம், ஆய்வகம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட் டுள்ளதே! பழம்பெரும் இதழ்களும், ஏடுகளும் நவீன முறையில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனவே! ஆய்வாளர்கள் பயன்படுத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். 46267 நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன. மாணவப் பருவந்தொட்டு அரிதிற் சேர்த்த தமது சொந்த 10,227 நூல்களை பெரியார் நூலகம் - ஆய்வகத்திற்குத் தந்துள்ளார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.அய்யாவின் உரைகள் மட்டுமல்ல - குடிஅரசு இதழ்களும்கூட குறுந்தகடுகளாக வெளியிடப்பட்டுள்ளன (Digitalisation). அப்படி வெளியிடப்பட்டவைகளை நூல்களாகத் தொகுத்து சிலர் வியாபாரம் செய்யப் பார்ப்பது அறிவு நாணயமான செயலா?தமிழகம் முழுவதும் பகுத்தறிவு இயக்க நூல்களைப் பரப்புவதற்கு இரு நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அப்பணி முழு வீச்சில் நடந்துகொண்டு இருக்கிறது. (இவற்றை முதல்வர் அல்லவா 2.12.2007-இல் தொடங்கி வைத்தார்) முக்கிய நகரங்களின் பேருந்து நிலையங்களில் திராவிடன் புத்தக நிறுவனத்தின் சார்பில் விற்பனையகங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தின் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்யும் ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. செங்கற்பட்டில் இவ்வாண்டு பிப்ரவரி 18 இல் நடைபெற்ற சுயமரியாதை இயக்க 80 ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் அருமையாகக் குறிப்பிட்டாரே!திராவிடர் கழகம் - நூல்களை வெளியிட்டு வருவதுபற்றி அவ் விழாவில் முதலமைச்சர் கலைஞர் அழுத்தந்திருத்தமாகவே கூறினாரே!
"உலகத்திலே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப்பற்றியும் சொல்லவேண்டுமேயானாலும், எந்த ஒரு அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களை சேகரித்து வைத்து, அதை எதிர் காலத்திற்குத் தரக்கூடிய இந்த ஆற்றல், நம்முடைய வீரமணியாருக்கு இருப்பதைப்போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்லாம் இதற்காகப் பாடம் படிக்கவேண்டும்"
இது வெறும் புகழ்ச்சிச் சொற்கள் அல்ல. உண்மையான கணிப்பாகும். இந்த வகையில் முதல் இடத்தில் இருப்பது நமது நிறுவனமே!நமது நிறுவனம் வெளியிடும் நூல்கள் அனைத்தும் பதிப்புரிமை பெற்றவை என்று அச்சிடப்பட்டுள்ள நிலையில், அந்த நூல்களை நமது நிறுவனத்தின் அனுமதியில்லாமல் வெளியிடுவது சட்ட விரோதமாகும் - பொது ஒழுக்கச் சிதைவுமாகும்.பதிப்புரிமை என்ற சட்டம் எதற்காகத்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா?
இதனைச் சொன்னால், பெரியார் கொள்கைகள் தனி உடைமை யானவையல்ல என்று புரட்சியாளர்கள்போல சிலர் வேடங்கட்டி குதிக்கிறார்கள். பெரியார் இயக்கத்தின்மீது சேறுவாரி இறைக்க இதோ ஆள்கள் கிடைத்திருக்கிறார்கள் என்ற சாக்கில் பார்ப்பனச் சக்திகள் சபாஷ் என்று சூ காட்டுகின்றன. கொம்பு சீவி விளம்பரம் தருகின்றன.

பெரியார் நூல்களை அரசுடைமை ஆக்கவேண்டும் என்று ஒரு பக்கத்தில் கோரிக்கை; அப்பொழுதுதான் அந்த நூல்களை மற்றவர்கள் வெளியிடலாம் என்று கூறுவது ஒரு பக்கம் - இதன்மூலம் அவர்களை அறியாமலேயே ஒரு உண்மையை சட்ட நிலையை - ஏற்றுக்கொள்கிறார்கள். பெரியார் நூல்கள் அரசுடைமை ஆக்கப்படாத நிலையில், அவற்றை வெளியிடுவது குற்றம் என்பதை ஏற்றுக்கொண்டு விட்டார்களே! இருந்தும் ஏன் அடாவடித்தனம்?ஒரு மோதல் போக்கை உருவாக்கினால் சுலபமாக விளம்பரம் கிடைக்கக் கூடும் என்ற எண்ணத்தில் சிறு பிள்ளைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது பரிதாபத்துக்குரியதே! அக்கப்போர்களை அவதானிப்பதற்கு இங்கு ஏடுகளுக்கும், ஊடகங்களுக்கும் பஞ்சமா? அதில் ஒரு அற்ப சந்தோஷம் - அவ்வளவுதான்!வாழ்வியல் சிந்தனைகள் என்று வீரமணி அவர்கள் எழுது கிறாராம். அவை நூலாகவும் வெளிவந்து விட்டனவாம்! பார்த்தீர்களா, பார்த்தீர்களா? பெரியார் நூல்களை வெளியிடாமல், வீரமணி தன் நூல்களை வெளியிடுகிறார் என்று ஒருவகைப் பிரச்சாரம்!தந்தை பெரியார் நூல்களையும் வீரமணி அவர்களையும் மோத விடுகிறார்களாம் - இது கடைந்தெடுத்த ஒரு பார்ப்பன அணுகு முறையல்லாமல் வேறு என்ன?கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கூறுவதுடன் நாம் நிறுத்திக் கொள்ளப் போகிறோமா? அந்தக் கடவுள் மறுப்புத் தத்துவம் என்பது விரிந்த வாழ்வியல் சிந்தனைக்கான கூறு அல்லவா?உணவு முறையிலிருந்து, உடை, இருக்க வீடு, பொதுத்தொண்டு, குடும்ப வாழ்க்கை முறை, ஆண் பெண் உறவு, மக்கள் பேறு, குழந்தைகள் வளர்ப்பு, மனிதநேயம் என்பதுபற்றியெல்லாம் தந்தை பெரியார் சிந்திக் கவில்லையா? பேசவில்லையா? எழுதவில்லையா? தந்தை பெரியார் கொள்கைகள் ஒரு வாழ்க்கை நெறியல்லவா?.
அந்த அடிப்படையில், இக்கால வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, புதிய பொருளாதாரச் சூழல் இவற்றையொட்டி பல்துறைகளைச் சார்ந்த கருத்துகளையும், தகவல்களையும் திரட்டித் தருவதற்கு ஆற்றலும், ஓயாமல் படிக்கும் முனைப்பும் உழைப்பும், சிந்தனையும் தேவைப்படும்.தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் - இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களையும்கூட பெரியார் இயக்கத்தின்பால் புதிய பார்வையைச் செலுத்தும் ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதானே உண்மை.வெறும் சாமியில்லை - பூதமில்லை என்று சொல்லக்கூடியவர்கள் தானே இவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தோம் - ஒவ்வொருவர் வீட்டிலும் நிகழும் நடப்புகள், பிரச்சினைகள்பற்றி எல்லாம் இந்தக் கட்டுரைகள் பேசகின்றனவே - தீர்வு தருகின்றனவே! என்று படித்துவிட்டுப் பாராட்டுக் கடிதங்களை எழுதிக் கொண்டு இருக் கின்றனர். கடவுள் மறுப்பாளர்கள் - தலைசிறந்த மனிதாபிமானிகள், வாழ்வியலின் திறவுகோல் கருத்துகளைக் கூறக் கூடியவர்கள் என்ற நிலையை உருவாக்குவது தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்கான பரிமாணமே தவிர, தேய்மானமல்ல!வாழ்வியல்பற்றி எழுதுவதும், பேசுவதும் குற்றம் என்று சொல்லும் பாமரர்களையும், பிற்போக்குவாதிகளையும் நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. ஏதாவது குறைசொல்ல வேண்டும் என்ற ஆத்திரத்தை அறிய முடிகிறது.தங்கள் மூக்கை வெட்டிக் கொள்ளுகின்றனரே இந்த அறிவு ஜீவிகள்!
இடதுசாரி சிறுபிள்ளைத்தனம் என்ற ஒரு சொலவடை உண்டு. அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.நம்மை திசை திருப்ப சிலர் முயலக்கூடும். அதனை இலட்சியப் படுத்தத் தேவையில்லை.சமுதாய நோக்கத்துக்காக - தடையாக இருந்த அரசியல் சட்டத்தையே கொளுத்தினார்களாம். அதுபோல, வீரமணி விதித்திருக்கும் தடையையும் சந்திப்பார்களாம்.
சமுதாய நோக்கத்துக்காக தந்தை பெரியார் செய்து வைத்துள்ள ஏற்பாடு அவர்கள் கண்ணோட்டத்தில் தடையாம். எது தடை? எது பாதை? என்பதிலேயே எவ்வளவு பெரிய தடுமாற்றம்!கட்டுப்பாடுகளை உடைப்பதுதான் பெரியார் கொள்கையாம். அதனால், வீரமணியார் சொல்லும் கட்டுப்பாட்டை உடைப்பார்களாம்!
சபாஷ், வார்த்தையை வைத்து விளையாட்டா!கட்டுப்பாடு என்ற சொல் இடத்தைப் பொறுத்து வேறுபடக் கூடியது.மதத்தின் கட்டுப்பாட்டை உடைப்பது என்று பெரியார் சொன்னதும் இயக்கத்தின் கட்டுப்பாட்டைக் காப்பது என்று அவர் சொன்னதும் ஒரே பொருள் தானா?பெரியாருக்குப்பின் அவர் கண்ட இயக்கம் இருக்காது என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த கூட்டத்தின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்ட ஒரு தலைவர்மீது பார்ப்பனர்கள் ஆத்திரப்படுவது இயல்புதான். அதனால்தான், மாநாடு கூட்டி அவரைப் பாடை கட்டி தூக்கினார்கள்.பெரியார் திரைப்படம் முதல் பெரியார் வலைக்காட்சி (Periyar Webvision) வரை பல்முறையிலும் அறிவியலைப் பயன்படுத்தி தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளைப் பரப்புவதையே மூச்சாகக் கொண்டு உழைத்து வருகிறார்.
பெரியார் இயக்கம் என்றால், திராவிடர் கழகம்தான்! பெரியார் இயக்கத்தின் தலைவர் என்றால், அது மானமிகு வீரமணி அவர்கள்தான். இது அடிமுதல் நுனிவரை அண்டம் அறிந்த அறுதியிட்ட உண்மையாகும்.
அவர்மீது வீசி எறிவது தூசு அளவு என்றாலும் சரி, தூண் அளவு என்றாலும் சரி அது பார்ப்பனர்களுக்குப் பரிமாறக் கூடிய பால் பாயாசமே!அதேநேரத்தில், பெரியார் கொள்கையை ஏதோ ஒரு வகையில் பலகீனப்படுத்திட (முடியுமா என்பது வேறு பிரச்சினை) மேற்கொள்ளும் துரோகச் செயல்தான் அது என்பதும்தான் உண்மை! என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே செய்யும் சிறுபிள்ளைத்தனத்துக்காகப் பரிதாபப்படுவோம்!
அனைத்து ஜாதியினருக்கு அர்ச்சகர் உரிமை என்றாலும், சமூகநீதியில் அடுத்துப் பெறவேண்டிய உரிமைகள் என்றாலும் அவற்றைச் சாதிக்கக் கூடிய அமைப்பும் சரி, தலைமையும் சரி - நம்மைச் சார்ந்ததே!
75 ஆண்டு அகவையில் 65 ஆண்டு பொது வாழ்க்கை - தந்தை பெரியார் அவர்களின் அங்கீகாரம் - அர்ப்பணிக்கும் பொதுத் தொண்டு - இவற்றால் வைரம் பாய்ந்து உருப்பெற்ற ஒரு வலிமையான தலைமையால்தான் எதையும் சாதிக்க முடியும். அந்தத் தலைமையின் சொற்களுக்கும், எழுத்துகளுக்கும்தான் வலிமை உண்டு - சமூகத்தின் அங்கீகாரமும் உண்டு.
சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் வரை தமது கருத்தால் அணுகுமுறையால் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர் மானமிகு வீரமணி.
அரசியல் போக்குகளை மாற்றக் கூடியவர் - தம் கொள்கை வழியில் ஆட்சிகளை உருவாக்கக் கூடியவர். அந்தத் தலைவரைப் பற்றிக் கொண்டு பணியாற்ற முடியவில்லை என்றால், அது வாய்ப்புக்கேடே! ஸ்தாபன ரீதியாகப் பணியாற்றும் - கற்றுக் கொள்ளும் பண்பாடு என்பது நமது தமிழர்களிடம் குறைவே! தமிழர் வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
எல்லோருமே தலைவராக ஆசைப்படலாம். ஆசைப்படுவது என்பது வேறு - அதற்குச் சமூக அங்கீகாரம் கிடைப்பது என்பது வேறு - இரண்டும் ஒன்றல்ல! அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள உழைப்பும், அறிவும், ஆற்றலும், தியாகமும், வார்ப்பும் தேவை. ஒரு தலைவர்மீது அவதூறுச் சேற்றை வீசி விடுவதாலேயே, தான் தலைவர் ஆகி விட்டோம் என்று கனவு கண்டு விடக் கூடாது.
தந்தை பெரியார் அவர்களால் சண்டித்தனம் என்று கண்டிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், ஒரு கட்சியின் பொதுச்செயலாளராகி விட்டார்.அன்றைய தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் அனுப்பிய தந்தியையும், கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் நேரில் சென்று உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்ட வேண்டு கோளையும், புறக்கணித்து (கொள்கைக்கு விரோதமாக) தம்மை திலீபன் என்று நினைத்துக் கொண்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வீராவேசமாகப் (வழக்கம்போல உள்ளூர் ஏடுகளில் செய்தி இடம் பெறும் வண்ணம்) புறப்பட்டவர் 24 மணி நேரம்கூட தாக்குப் பிடிக்க முடியாமல், உடும்பு வேண்டாம் கைவந்தால் போதும் என்ற நிலையில், வெட்கத்தைவிட்டு சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என்று தந்தை பெரியார் கூறுவாரே, அதுபோல அதே கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவரிடம் தொடர்பு கொண்டு - உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வாருங்கள், வாருங்கள் என்று கெஞ்சி மன்றாடிய வீராதி வீரர்தான் இவர்.
"நான் கோவையில் உள்ள ஒருவரின் கட்சிக்குப் போகப் போகிறேன் என்று திராவிடர் கழகத் தோழர்கள் பரப்புகிறார்களே - நான் என்றும் திராவிடர் கழகத்துக்காரனாகவே இருக்க, தொடர எண்ணுபவன்; தயவு செய்து அப்படிப் பிரச்சாரம் செய்யவேண்டாம் என்று தோழர்களுக்கு அறிவுரை கூறுங்கள்" என்று திராவிடர் கழகத் தலைமைக்கு உருக்க மாகக் கடிதம் எழுதியவர் - இன்றைக்கு அந்தக் கோவைக்காரர் பொதுச் செயலாளராக இருக்கும் கழகத்திற்கே தலைவராகி விட்டார் - தலைமை வியாதி எவ்வளவு பொல்லாதது பார்த்தீர்களா? இதைப்போல் எவ்வளவோ உண்டு. கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்படக் கூடாது!
உலகம் முழுவதையும் தந்தை பெரியார் சிந்தனைகள் பரவுவதற்கு ஒல்லும் வகையால் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவர் அழைக்கிறார்! சென்னையில் செப்டம்பர் 6, 7 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கும் முப்பெரும் மாநாடுகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவையானவை!உலக பகுத்தறிவு ஆய்வு அமைப்பின் தலைவர் நியூயார்க்கைச் சேர்ந்த பேராசிரியர் பேரறிஞர் டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்கள் பங்கேற்பது மிகவும் சிறப்பானதாகும்.பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பகுத்தறிவாளர்கள் வருகிறார்கள். முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்களுக்கு அமெரிக்காவில் இயங்கும் பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில், சமூகநீதிக்கான வீரமணி விருது வழங்கப்பட உள்ளது.

மாநில இளைஞரணி மாநாடு, மகளிரணி மாநாடுகளும் நடைபெற உள்ளன.
குடும்பம் குடும்பமாக வாரீர்! வாரீர்! என்று அழைக்கின்றோம்.

குறிப்பு: ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்களை நாம் எப்பொழுதும் பொருட்படுத்துவதில்லை. இப்பொழுது அளிக்கப்பட்டுள்ள விளக்கம்கூட தந்தை பெரியார் அவர்களுக்குப் பின் திராவிடர் கழகம் மேற்கொண்ட பிரச்சாரப் பணிகள், வெளியீடுகள் குறித்து இன்னும் அறியாத பகுதியினர்க்கு வெளிப்படுத்தும் நோக்கத்தில்தான் இது எழுதப்படுகிறது.வேறு எதையோ நினைத்து யாரும் துள்ளவேண்டாம்!
நன்றி: http://files.periyar.org.in/viduthalai/20080824/news03.html

Monday, August 04, 2008

வரட்டும் கலைஞருக்கு கைது ஆணை!

கொம்பு முளைத்த உச்சநீதிமன்றம், மக்கள் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழினத் தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
நூற்றண்டு கால தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை, பாதி பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மத நம்பிக்கை என்னும் புரட்டைச் சொல்லி தடுக்க நினைப்பவர்களுக்கு உச்சநீதிமன்றம் அடைக்கலம் கொடுக்குமாம்; இதைப் பார்த்துக் கொண்டு இன உணர்வாளர்கள் சும்மா இருக்க வேண்டுமாம். உச்சிக்குடுமி நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தலையாட்டிக் கொண்டிருக்க வேண்டுமாம்.

அப்படி இல்லாமல், சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து முடிக்கக்கோரி அமைதியான வழியில், சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வழியில் பந்த் அறிவித்தால் அதை இரவுக்கிரவே கூடித் தடுக்குமாம் உச்ச நீதிமன்றம்.
சரி, உச்சநீதிமன்றத்திற்கு மதிப்புக் கொடுத்து உண்ணாநிலைப் போராட்டம் என்று அதை மாற்றிக் கொண்டு, உரிய நேரத்தில் அலுவலகத்துக்கு சென்று கையொப்பமிட்டு பணியை மேற்கொண்டார் கலைஞர்.
பார்த்துக்கொண்டிருந்த தமிழக மக்கள் தன்னெழுச்சியாக 'பந்த்' நடத்தி, உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் கரியைப் பூசினர். அதைத் துடைத்துக் கொண்டு, தனது அவமானத்திற்கு பழிவாங்கத் துடிக்கிறது உச்சிக் குடுமி நீதிமன்றம்.

இதோ இன்று கலைஞருக்கு அது விடுத்துள்ள எச்சரிக்கையில் "தலைமைச் செயலரின் அறிக்கையைத் தனது அறிக்கையாக ஏற்றுக்கொள்ள முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், விரைவில் முதல்வர் பதிலளிக்காவிட்டால் அவருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

பிறப்பிக்கட்டும்! பிறப்பிக்கட்டும்!! அப்போது தான் கனன்று கொண்டிருக்கும் தமிழின உணர்வு கொழுந்துவிட்டெரியும்!
இந்தியா என்னும் மாயையில் சிக்கித் தவிக்கும் எம் தமிழினம் மீண்டு வரும்! உச்சிக் குடுமி நீதிமன்றமே உன் ஆணவ ஆணையை அனுப்பு!
தமிழினத்திடமிருந்து மீண்டும் கிடைக்கும் உனக்கு ஆப்பு!

முந்தைய பதிவுகள்:
உச்சநீதி மன்றத்திற்கு மக்கள் தந்த செருப்படி!
எவன் மசுர புடுங்கப் போனீங்க!
பெஞ்சுகளைச் சுத்தப்படுத்துவோம் வாருங்கள்!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....
கலைக்கட்டும் கலைஞர் அரசை!

Related Posts with Thumbnails