Tuesday, April 24, 2007

பட்டை போட்டாச்சு!

வலைப்பூ சுனாமியின் யோசனைப்படி தமிழ்மணத்துக்கு ஆதரவு தெரிவித்து பட்டை போட்டாச்சு!
எப்போதும் ஆதரவு தெரிவிப்பது தான் என்றாலும், கொஞ்ச காலத்துக்கு இப்போது அடையாளத்துக்காக ஆதரவுப் பட்டை!

'பட்டை' போட்டது தமிழ்மணத்துக்கு அல்ல! தமிழ்மணத்தை எதிர்க்கும் ஜாதி, மத வெறியர்களுக்கு!
தொடரட்டும் தமிழ்மணத்தின் பணி!

Sunday, April 22, 2007

முத்துப்பேட்டையில் தந்தை பெரியார் சிலை உடைப்பு - கி.வீரமணி அறிக்கை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தந்தை பெரியார் சிலையினை காலிகள் சிலர் சேதப்படுத்தினர் என்ற செய்தி தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது என்ற செய்தியை அறிந்த ஆத்திரத்தின் மேலீட்டால் இரண்டொரு தோழர்கள் தஞ்சையில் பார்ப்பனர்களின் பூணூலை அறுத்தனர் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது என்பது ஆத்திரத்தை ஊட்டக் கூடியதுதான் என்றபோதிலும் அதற்காக பூணூல் அறுப்பு போன்ற செயல்களில் இறங்க வேண்டாம் என்று தோழர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்திய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கையினை தமிழ்நாடு அரசின் காவல்துறை செய்து வருகிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கைகளை உறுதியாக எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காவல் துறையை வலியுறுத்துகின்றோம்.வேறு சில இடங்களில் தந்தை பெரியார் சிலையை அவமதித்த காரணத்தால் ஏற்கெனவே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழோ குண்டா சட்டத்தின் கீழோ சிறையில் இருப்பவர்களின் பிரச்சினையில் காவல்துறை கவனமாக இருந்து அது தொடர்பான வழக்கினைச் செம்மையாக நடத்தி குற்றவாளிகள் தப்பிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துவது நமது கடமையாகும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம் - சென்னை 22.4.2007

நன்றி: விடுதலை (www.viduthalai.com)

பதிவாளர் சந்திப்பு :-( தேற்றுவார் யாருமில்லை

பதிவர் சந்திப்பைத் தவறவிட்டதற்கு காரணம் சொல்வதன்று இந்தப் பதிவின் நோக்கம்! மாறாக என்னை நானே தேற்றிக்கொள்ளவே!

இதற்கு முன்பு நடந்த சந்திப்பு (மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்கா)ஒன்றுக்கு, ப்ளாக்கராக இல்லாத போதே, விஜய் டிவி-யின் நீயா? நானா? நிகழ்ச்சியில் பங்கேற்க விடுத்த அழைப்பையும் மறுத்து வந்து கலந்து கொண்டேன். அப்போதுதான் வரவணையான், பாலா ஆகியோர் அறிமுகம் எனக்கு!
ஏப்ரல் 22 - பதிவாளர் சந்திப்பு என்று அறிவிப்பு வந்த நாளிலிருந்து, என் தேர்வு நாளுக்கு பங்கம் வராமல் இருப்பதை எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தேன். அதனை பாலாண்ணனிடமும் சொல்லி உறுதிப் படுத்தியிருந்தேன்.

இதற்கென தனித் தயாரிப்புகளோடு வருவதெனத் தீர்மானித்திருந்தேன்.
ஏப்ரல்-20 அன்று தேர்வுகள் முடிந்து விட்டதென மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த நேரத்தில், செயல்முறைத் தேர்வுகளையும், முடிக்க வேண்டிய குறும்படப் பணிகளையும் பட்டியலிட்டு, 23,24 உனக்கு கால்ஷீட் என்று கட்டிப்போட்டுவிட்டார். அதையும் தாண்டி இன்று வந்து தீர வேண்டுமென மதியம் கூட பாலாண்ணனிடம் பேசி தயார்செய்து கொண்டேன்.

காலையில் தொடங்கிய பணி ஈ......ழு.......ஈ......ழு..... என்று இழுத்து, நடந்து கொண்டிருக்க, மனதும் பணியில் இல்லாமல், முடிக்காமல் வரவும் முடியாமல்....


எனது நேரத்தை பிறிதொருவர் முடிவு செய்வதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது.

பதிவாளர் சந்திப்புக்காக சேகுவேரா பனியன் ஒன்று புதிதாய் எடுத்திருந்ததோடு, என் கல்லூரி செய்முறைத் தேர்வுக்கு படைக்க, தமிழ் வலைப்பூக்கள் பற்றிய அறிமுகம் தரும் வகையில் ஆவணப்படம் எடுப்பதற்காக நான் எழுதியிருந்த பிரதியையும் அனைவரிடமும் காட்டி மகிழவேண்டும் என்ற ஆசையெல்லாம் மீண்டும் மீண்டும் நினைவு வந்து என்னை வேறு சிந்தனையை நோக்கித் திரும்பாதவண்ணம் வைத்துக் கொண்டிருக்கின்றன. வழக்கமாக இப்படி ஏதாவது ஒரு மனச் சோர்வு என்றால் என்னைத் தேற்றும் என் தங்கையும் இப்போது பக்கத்தில் இல்லை. பாலாண்ணனுக்கு 6 மணிக்கு போன் போட்டு, 'இப்ப வரலாமா?' என்று கேட்டேன். எப்படியாவது இன்னுமொரு 1 மணிநேரம் நடக்கும் என்ற நப்பாசையில்!


ஆனால், 'நன்றி' என்ற முதல் வார்த்தையில் நான் நொறுங்கிப்போனேன்.

"முடிக்கப் போறோம். 3:30க்கு சரியா ஆரம்ப்பிச்சோம்; எவ்வளவு நேரந்தான் மொக்கை போடுறது. கிளம்பப்போறோம்" என்றார்.

கேமரா எடுத்து வருவதாக உறுதி அளித்திருந்தேன். நேரத்திற்கு இந்த முறை வந்துவிடு தம்பி என்று சொன்னபோதும் உறுதி சொல்லி இருந்தேன். ஆனால் "இந்த உறுதிகளைக் காக்க முடியவில்லையேடா உன்னால், உன்னை நம்பி ஏமாந்தேனே தம்பி?" என்று என்னை பார்த்து பாலாண்ணன் சொல்வது போலிருந்தது.

இதைவிட ஏமாற்றங்களையெல்லாம் எளிதில் தாங்கியிருக்கிறேன். ஆனால், சில சமயங்களில் குழந்தையாகிப் போகும்போது, சின்ன ஏமாற்றங்களையும், சொற்களையும் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. கடற்கரை சாகச நிகழ்ச்சியைக் கூட அலுவலகத் தொலைக்காட்சியில் காணப் பிடிக்காமல் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அடுத்த முறைக்கான வாக்குறுதிகளெல்லாம் இப்போது இல்லை!
நான் எழுதிய ஆவணப்பட பிரதியின் சில பக்கங்கள்தான் நீங்கள் பார்ப்பது!

இப்போது நான் எப்படி இருக்கிறேன்? வேறென்ன இயலாமையின் வெளிப்பாடு கோபத்தோடுதான்!

Saturday, April 21, 2007

பூணூல் அறுக்கப்படும்தான்!

பெரியார் சிலை உடைப்பு மீண்டும் அரங்கேறிருக்கிறது. திருச்சி திருவரங்கத்தில் பெரியார் சிமெண்ட் சிலையை உடைத்து, வெங்கலச் சிலை வைக்க ஊக்கம் கொடுத்த கூட்டம், ஊரெங்கும் பெரியாரின் முழு உருவ வெங்கலச் சிலை வைக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.
"அய்யாவின் 128-ஆவது பிறந்தநாளையொட்டி 128 பெரியார் சிலைகள் நிறுவப்படும்" என்று தமிழர் தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி பணிகள் தொடங்கிவிட்டன.
வெறும் சிலை நிறுவுவதல்ல அதன் நோக்கம்,
சிலையின் அடிப்பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும்
"கடவுள் இல்லை; கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு,
பிதிர்லோகம் ஆகியவைகளைக்
கற்பித்தவன் அயோக்கியன்;
நம்புகிறவன் மடையன்;
அவற்றால் பலன் அனுபவிக்கிறவன்
மகா மகா அயோக்கியன்"
என்ற தந்தை பெரியார் தந்த கடவுள் மறுப்பு வாசகத்தை கல்வெட்டில் பொறித்து, இதை சொல்லிய ஒரு கிழவன் 95 ஆண்டுக்காலம் வாழ்ந்து, இறுதிவரை கடவுள் மறுப்பில் உறுதியாய் நின்றான்; அதை சொல்லிய படி, ஒரு மானமீட்பு இயக்கம் இந்த மண்ணில் இயங்கி வருகிறது, என்று சிலையை காணுந்தோறும் நினைவூட்டவே அந்தச் சிலை!

திருவரங்கம் சிலையைத் திருட்டுத்தனமாக உடைத்த கயவாளிகளைக் குண்டர் சட்டத்திலிருந்து(மட்டும்) நீதிமன்றம் விடுவித்த திமிரில், முத்துப் பேட்டையில் இந்த வெறிச்செயல் நடந்திருக்கிறது.

"தீபங்களே! நீங்கள்
தெரிந்துகொள்ளுங்கள்;
திரிகள் மட்டுமே
கருகிக் கொண்டிருக்கின்றன.
தூண்டுகோல்கள்
சுகமாகத்
தூங்குகின்றன"
என்ற மேத்தாவின் வரிகளைப் போல, எப்போதும் சூத்திரர்களையும்யே கேடயமாக்கி, அதன் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் கூட்டம்தான்ன் இதன் பின்னணியிலும் இயங்கி இருக்கிறது.

நிலை இப்படி இருக்க, சாம்பார்-சட்னி-வடைகளெல்லாம், 'அர்ச்சகர் பூணூல் அறுப்பு' என்று செய்தி வெளியிடுகின்றன. முதுகுசொறியும் விசயங்களெல்லாம், முக்கிய செய்திகளாம்! குறித்துக் கொள்ளுங்கள்... கொழுப்பு அடங்க மறுத்தால், உங்கள் பதிவுகளிலெல்லாம், இப்படி வெறும் பூணூல் அறுப்பு புலம்பல்கள் மட்டுமே இடம்பெறக்கூடும்.

"நான் பத்தினி, நான் பத்தினி" என்று தோளில் தொங்கவிட்டுக்கொண்டு அலைவதன் மூலம், மற்றவர்களை "தேவடியாள்" என்று பரப்பிடும், பச்சை பார்ப்பனத்தனத்தை புரிந்துகொண்டால், பூணூல் அறுக்கப்படும் தான்!

மனையில் திருமணத்திற்கு அமர்ந்திருக்கும் பெண்ணைப் பார்த்து, "உன்னை சோமனுக்கும், கந்தர்வனுக்கும், அக்னிக்கும் கலியாணம் செய்து வைத்து, கடைசியில் புத்திர பாக்கியத்தோடு, இந்த மானிடனுக்கு தானம் செய்கிறேன்" என்று புரியாத மொழியில் சொல்வது தெரியாமல், 'இன்னொரு முறை மந்திரம் சொல்லுங்க சாமீ' என்று ஆனந்தப்படும் அப்பாக்கள், உங்கள் சமஸ்கிருத மந்திரத்தைப் புரிந்துகொண்டால், பூணூல் அறுக்கப்படும் தான்!

வழிபடுவதற்காக வரும் என் தோழனையும், தோழியையும் பார்த்து "ஏக மாதா பகுபிதா சற்சூத்திராய நமஹ" என்று 'ஒரு தாய்க்கும், பல தகப்பன்களுக்கும் பிறந்த சந்தேகமில்லாத தேவடியாள் மகனே' என்று பழித்துப் பேசும், உன் தேவபாஷையை புரிந்துகொண்டால், பூணூல் அறுக்கப்படும் தான்!

காலம் காலமாய் அனுபவித்த சுகங்களை, எங்களை அனுபவிக்க விடாமல் தடுத்ததோடு, இன்று கிடைக்கும் ஓரிரு வாய்ப்புகளையும் தட்டிப்பறிக்க நினைக்கும் உன் கயமைத் தனத்தைப் புரிந்துகொண்டால், பூணூல் அறுக்கப்படும் தான்!

"பத்துபைசா முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு" என்று எங்கள் மக்களையே கொண்டு, எம் சகோதரகளிடம் சண்டை விளைவிக்கும், மாமா ராமகோபாலன் போன்றோரின் கயமையை புரிந்துகொண்டால், பூணூல் அறுக்கப்படும் தான்!

வன்முறையை வழிமுறையாக்கிக் கொண்டு, 3 சதவிகிதத்தை அழிக்க, ஒருஆளுக்கு ஒருஆள் என்றாலும் மீதம் 94 சதவிகிதமும் நாம்தான் என்று தமிழன் கிளம்பிவிட்டால், பூணூல் மட்டுமல்ல உங்கள் குலமே பூண்டோடு அறுக்கப்படும்தான்!

அத்தகைய வழிமுறைகளை கைக்கொள்ளாத வரை, நாங்கள் திருந்தமாட்டோம் என்று அடம் பிடித்தால், நியூட்டனின் மூன்றாம் விதியைப் போல, "ஒவ்வொரு வினைக்கும் அதே அளவிலான சமமான எதிர்வினை இருக்கும்" என்றாலும், எதிர்வினையை ஏற்படுத்தவேண்டிய தளத்திலிருந்து கட்டளை பிறக்காத வரை பொறுமை காக்கப்படும்! பொறுமை காக்கப்படும்! - பார்ப்பனர்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும்!

பூணூல் பற்றிய மற்றுமோர் பதிவு!

Thursday, April 19, 2007

அட்சய திருதியை! - ஆரியக் கொள்ளை!!

தலைப்பைப் பார்த்ததும் சிலர் குதிக்கக்கூடும்...

"இது துவேஷம், அர்த்தமற்ற ஆவேசம், இதற்கும் பிராம்மானோத்தமர்களுக்கும் என்ன தொடர்பு? நகைத் தொழில் செய்வது எங்கள் குலத் தொழில் அல்லவே, லாபம் எங்களுக்கா வருகிறது???"

இப்படியெல்லாம் கேள்விகள் வரக்கூடும், அதனால் செய்தியைப் படித்துவிட்டு பிறகு குதிக்கவும்...

இந்த வருடம் அட்சய திருதியை ரெண்டு நாளாம்! ஒரே நாளில் ஒட்டுமொத்தக் கூட்டமும் வந்தால் சமாளிக்க முடியாது என்பதால், இரண்டு நாள் என்று ஆக்கிவிட்டார்கள்!

அடுத்த ஆண்டு ஆடித் தள்ளுபடி மாதிரி ஒரு மாதம் முழுக்க என்று அறிவித்தாலும் இந்த பேராசைக் கூட்டம் வரிந்து கட்டி வரிசையில் நிற்கத்தான் போகிறது. (என்ன ஆடியில் எது செய்தாலும் விளங்காது என்ற மூடத்தனத்தை ஆடித் தள்ளுபடி அடித்து உடைத்தது என்பது தான் ஒரு மகிழ்ச்சி!)

சரி,இதில் ஏன் பார்ப்பனர்களைக் குறை சொல்கிறாய் என்பவர்களுக்கு ஒரு செய்தி:

இன்று மதியம் சன் தொலைக்காட்சியில் (19.04.07) அட்சய திருதியை பற்றிக் கருத்துச் சொன்ன ஜோதிடத்திலகம் ஒருவர், "இந்த ஆண்டு அட்சய திருதியை கரிநாளில் வருகிறது; அதனால் அது தோஷம். அந்தப் பிரச்சினை தீர வேண்டுமானால் பிராமணர்களுக்கும் தானம் செய்துதான் தீர்க்க வேண்டும்" என்று யோச'னாய்' சொல்லி இருக்கிறார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

இப்பச் சொல்லும்வோய் தலைப்பு தப்பா?

இங்கிலிபீசு மேட்டரு.....!

if yuo cna raed tihs, yuo hvae a sgtrane mnid too. Cna yuo raed tihs?
i cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno't mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the olny iproamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it whotuit a pboerlm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Azanmig huh? yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt!

if you can raed tihs forwrad it.

படிக்க முடியாட்டியும் அடுத்தமுறை முயற்சி பண்ணுங்க.. முடிஞ்சா அடுத்தவங்களுக்கும் சொல்லுங்க!

முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் சரியா இருந்ததுன்னா போதும், நம்ம மூளையே எளிமையா படிச்சுடும். அப்படின்னு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பண்ண ஆய்வாம்-யா இது!

சரி, சரியான வடிவம் கீழ பாருங்க!

If you can read this, you have a strange mind too.
Can you read this!

I couldnot believe that i could actually understand what i was reading. The phenomenal power of the human mind, according to a research at cambridge university, it doesn't matter in a word are, the only important thing is that the first and last letter be in the right place. The rest can be a total mess and you can still read it without a problem. This is because the human mind does not read every letter itself, but the word as a whole. Amazing huh? Yeah and i always thought spelling was important. if you can read this forward it.

இப்படியெல்லாம் அப்பப்ப நம்மளை சோதிச்சு பார்த்துக்கிட்டிருந்தா இந்த நாள் - வருகிற நாள், முடிஞ்ச நாள்... எல்லா நாளும் இனிய நாள்!

Tuesday, April 17, 2007

மே நாளில் (மே-1) வருகிறார் `பெரியார்!- தினமலருக்கு நன்றி!

மேதினியெங்கும் மே நாளில் (அறிவித்த தேதிக்கு முன்பே)வருகிறார் `பெரியார்!
எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகி வெளிவரவிருக்கும் ``பெரியார் திரைப்படம் மே 25 ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது; ஆனால் எங்கெங்கிருந்தும் பொதுமக்களில் பலரும் ``பெரியார் பற்றாளர்கள் பலரும் எப்போது வரும் எப்போது வரும் என்று இடைவிடாது தணியா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டே இருப்பதனால் அவர்களது ஏகோபித்த ஆசையைப் பூர்த்தி செய்யும் வகையில் உலகத் தொழிலாளர்களின் கொண்டாட்ட நாளான மே முதல் நாள் (1.5.2007) செவ்வாய் அன்று சென்னை தலைநகர் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் பேரூர்களில் ``பெரியார் திரைப்படம் வெளிவரவிருக்கிறது என்பதை ``லிபர்ட்டி கிரியேசன்ஸ் சார்பில் மகிழ்ச்சியுடன் அறிவிக்க விரும்புகிறோம்.மே நாளில் ``பெரியார் படம் வெளியாவதற்கு முழு ஒத்துழைப்பு தந்துள்ள இப்பட விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நமது இதயங்கனிந்த நன்றி!
குடும்பம் குடும்பமாக மே நாளை குதூகலமாக கொண்டாடுவோம்.திரளுவீர்! திரளுவீர்!! திரளுவீர்!!!


கோ. சாமிதுரை,


இயக்குநர்,


லிபர்ட்டி கிரியேசன்ஸ்




நன்றி: விடுதலை (16.04.07)



பின்குறிப்பு:

"படம் விற்கவில்லை! விநியோகஸ்தர்கள் வாங்கவில்லை" என்றெல்லாம் அற்ப சந்தோசம் பெற்றுத் தன் அரிப்பைத் தீர்த்துக் கொண்டிருந்த கருமாதிப் பத்திரிக்கை ' தினமலம்' போன்ற பலரின் விளம்பர ஆதரவோடு வெற்றிகரமாக மே-யில் வெளிவருகிறார். இவ்வளவு நாள் எங்கள் விளம்பரச் செலவைக் குறைத்த தினமலம், துக்ளக் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, மாமா ராமகோபாலன் போன்றோர் இனியும் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்து, படத்தின் வெள்ளிவிழா விளம்பரப் பணியையும் செய்து தரவேண்டும் என்று பேரன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Saturday, April 14, 2007

இந்தத் புத்தாண்டினால் பயனுண்டா? - ஜோதிடப் பதிவு அல்ல

ஆண்டுக் கணக்கு என்பது காலத்தைக் கணக்கிடுவதற்கும், காலத்தைப் பதிவு செய்து கொள்வதற்கும்தான்.
இதில் தெளிவாக இருக்க வேண்டும். எந்த ஆண்டுக் கணக்காக இருந்தாலும், கி.பி, தி.பி, சாகா... இப்படி எதுவாக இருந்தாலும்! உலகெங்கும் பொதுவான கணக்காக கிரிகோரியின் நாள்காட்டியும்,. பின்னர் அதில் வந்த திருத்தங்களும் எற்றுக்கொள்ளப்பட்டு, ஆங்கில ஆண்டு என்று வழங்கப்படுகிறது.
அவரவர் பண்பாட்டின் அடையாளமாக மட்டுமே மற்ற ஆண்டுக் கணக்குகள் பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் தமிழ்ப் புத்தாண்டும்! ஆனால் அப்படி கொடாடப்படும் புத்தாண்டில் பயன் இருக்க வேண்டாமா?
60 ஆண்டுகள் சுழற்சி முறையில் வருகிறது என்பது எப்படி பயன்பாடுடையதாக இருக்க முடியும்.
300 வருங்களுக்கு முன் வந்த ஏதோ ஒரு 'சர்வசித்து'வில் நடந்த நிகழ்வை சர்வசித்து ஆண்டு, சித்திரை 1-ல் நடந்தது என்று வரலாற்றில் பதிவு செய்தால், எந்த சர்வசித்து என்று யாராலாவது சொல்ல முடியுமா?(பிறிதொரு ஆண்டுக் கணக்கின் உதவியில்லாமல்) 2007-இல் வந்த சர்வசித்து என்றோ, 1947-ல் வந்த சர்வசித்து என்றொ சொல்லாமல், தற்சார்பாக இயங்கும் வல்லமை சுழற்சி முறை ஆண்டுகளுக்கு உண்டா?
எப்போதுமே தனித்து இயங்கும் ஆற்றல் தமிழனுக்குண்டு. தமிழ் மொழிக்குண்டு. அதனைக் கருத்தில் கொண்டே இந்த வரலாற்றுத் திணிப்பை, திரிப்பை மாற்றி தமிழறிஞர்கள் 1921-ல் ஒழுங்குபடுத்தியவாறு, திருவள்ளூவர் ஆண்டை தமிழர் புத்தாண்டாக ஏற்றுச் செயல்படுத்திவருகிறோம். அதன் படி, திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு கணக்குப்படி கி.மு.31- என்று முடிவு செய்யப்பட்டது.
அப்படிக் கணக்கிடும்போது, இப்போது "2038 சித்திரை (மேழம்) -1" என்பது தமிழாண்டுக் கணக்கு. ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டும், தமிழர் திருநாளான, உழைப்பாளர், உழவர் திருநாளான தை முதல் நாள் தொடங்குகிறது.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உன் புத்தாண்டு!
அறிவியலுக்கு பொருந்தாத,
வரலாற்றுக்கு ஒவ்வாத
வடமொழி ஆண்டுகளைப்
புறக்கணிப்போம்!
தமிழர் புத்தாண்டை
தை 1-இல் ஏற்று
மகிழ்வோம்.

தொடுப்புகள்:
http://princenrsama.blogspot.com/2007/04/blog-post_13.html
http://princenrsama.blogspot.com/2007/04/blog-post_9338.html
ஆங்கில மாதங்கள் பெயர் வந்த கதை:
http://princenrsama.blogspot.com/2007/04/blog-post_14.html

மாதங்கள்: பெயர் வந்த விதங்கள்










செங்கோ
முன்னும் பின்னுமாக இரண்டு தலைகள் முகம் முழுக்க மண்டிக்கிடக்கும் அடர்ந்த தாடிகள். இவை விசித்திர உருவமாகத் தென்படுகிறது அல்லவா? இது ஒரு கடவுளின் உருவமாம். கிரேக்கக் கடவுள். இந்தக் கடவுள் இன்றைக்கு உயிருடன் இல்லை. இது மாஜி கடவுளாகிவிட்டது. இதன் பெயர் ஜனுஸ்.
ஆனால் இந்தக் கடவுளின் பெயரால் அமைந்த ஜனவரி மாதம் நம்மிடையே இருந்து வருகிறது. ஆனால் நாம் யாரும் மாதத்தைச் சொல்லும்போது கடவுளைப் பற்றி நினைப்பது கிடையாது. மற்ற நேரங்களில்கூடக் கடவுளை எதற்கு நினைக்க வேண்டும்?
மனிதர்கள் தவறு செய்கிறார்கள்; குற்றம் புரிகிறார்கள். இதை மதம் பாபம் என்கிறது. பாபம் செய்தவன் பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறது. பரிகாரம் செய்வதால் - செய்த குற்றம் இல்லை என்றாகிவிடுமா? ஆகிவிடாது. இருந்தாலும் பரிகாரம் செய்வது என்ற பெயரில் பலி கொடுத்தார்கள்.
கோழி ஆடு ஒட்டகம் என்று பலி கொடுத்து வந்தனர் பழங்காலத்தில்! காட்டுமிராண்டிகள் இன்றும்கூட பலி இடுகிறார்கள். இந்தியாவில் இந்து மதத்தினர் இன்றளவும் பலி இடுகிறார்கள். அதனால் தான் அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றார் தந்தை பெரியார்.
இந்தப் பலி பீடங்கள் பெப்ருவாலியா என அழைக்கப்பட்டன. அந்தப் பெயர்தான் இரண்டாம் மாதமான பெப்ருவரி.
ரோம் நகரை உருவாக்கியது ரோமுலுஸ் என்று ஒரு கதை. இவனின் தந்தை மார்ஸ் எனும் கிரேக்க சண்டைக் கடவுள். இந்தக் கடவுளின் பெயர்தான் மூன்றாம் மாதம் மார்ச்.
வசந்தகாலத்தில் செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும் லத்தீன் மொழியில் தொடங்குதல் எனும் பொருள் தரக்கூடிய பெரிர் எனும் சொல்லின் அடிப்படையில் தான் வசந்தகாலப் பூ பூக்கத் தொடங்கும் மாதமான ஏப்ரல் என்ற பெயரை வைத்தனர்.
வளமைக்குக் கடவுள் மேயா அல்லது மேயஸ்டா என்றார்கள். அய்ந்தாம் மாதம் வளம் பொங்கி இருக்க வேண்டும் என மேயா பெயரில் மே என அழைத்தார்கள்.
கிரேக்கத்தின் ஜூபிடர் கடவுளின் தங்கையும் மனைவியுமான ஜூனோ எனும் பெண் கடவுள். சகோதரியையே மணந்து கொள்ளும் பழக்கம் அப்போது இருந்தது. கிளியோபாட்ரா அப்படித்தான் மணந்தாள் என்கிறது வரலாறு. ராமனின் தங்கை சீதா என்றும் அவளையே ராமன் மணந்து கொண்டான் என்றும் சமண ராமாயணம் கூறுகிறது. ஜூனோவின் பெயரால்தான் ஆறாம் மாதம் ஜூன் என்று அழைக்கப்படுகிறது.
ஜூலியஸ் சீசரின் பெயரால் ஜூலை என்றும் சீசரின் தங்கையின் பேரன் அகஸ்டஸ் என்பாரின் பெயரால் எட்டாம் மாதமான ஆகஸ்ட் மாதமும் அழைக்கப்படுவது தெரிந்ததே. இந்த இரண்டு பேரும் கிரேக்கப் பேரரசின் புகழ் வாய்ந்த மன்னர்கள் ஆவார்கள்.
லத்தீன் மொழியில் செப்டம் என்றால் ஏழு அக்டோ என்றால் எட்டு. நவம் என்றால் ஒன்பது. டிசம் என்றால் பத்து. இவற்றின் அடிப்படையில் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் என்று பெயர்கள் வைக்கப்பட்டன.
ஒன்பது பத்து பதினொன்று பன்னிரண்டு ஆகிய மாதங்களுக்கு ஏழு எட்டு ஒன்பது பத்து எனப் பொருள் தரும் சொற்கள் எப்படிப் பொருத்தம்? சரியான கேள்விதான்.
ஆதியில் நிலாக் கணக்குப்படி ஆண்டுக்கு முந்நூறு நாள்கள் பத்து மாதங்கள். சூரியக் கணக்குப்படி 365 நாள்களாக ஆக்கப்பட்டு 12 மாதங்களாகப் பிரித்தபோது ஏழு எட்டு மாதங்களுக்குத் தம் அரசர்களின் பெயர்களை வைத்துப் பெருமை கொண்டாடிவிட்டனர் கிரேக்க மக்கள். மீதி மாதங்களின் பெயர்களை அப்படியே வைத்துக் கொண்டுவிட்டனர்.
இன்றைய காலண்டரை வடிவமைத்தவர் கத்தோலிக்கக் கிறித்தவ மதத்தலைவர்-போப் கிரிகோரி என்பவர்.

நன்றி: பெரியார் பிஞ்சு (ஏப்ரல் 2007)

Friday, April 13, 2007

எது தமிழ்ப் புத்தாண்டு? -- அறிவியல் மற்றும் வரலாற்று முடிவு

--மஞ்சை வசந்தன்

திராவிட இயக்கத்துக்கு பார்ப்பனரைத் தலைமைத் தாங்கச் சொல்லி இன்றைக்குத் தமிழன் எப்படி தரம் கெட்டு இழிந்து கிடக்கின்றானோ அதேபோல அன்றைக்கும் ஏமாந்து வாழ்ந்ததன் விளைவு சமஸ்கிருத ஆண்டை தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடும் மடமை.
தமிழாண்டு என்று 60 ஆண்டுகளைக் கூறுகிறார்களே அதில் ஏதாவது ஒன்று தமிழாண்டு என்றோ தமிழ்ச்சொல் என்றோ காட்ட முடியுமா? அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள் அல்லவா?
தன் இனப் பெருமையை எல்லாம் இழந்து அடுத்தவன் அடையாளங்களை ஏற்று அலைகின்ற அவலம் நீங்கும்போதுதான் தமிழன் வாழ்வான்; தமிழும் வாழும்!.
நாடார் சங்கத்திற்கு வன்னியர் தலைவர் என்றால் நாடே சிரிக்காதா? அது பைத்தியக்காரத்தனம் என்று சொல்லமாட்டார்களா? அப்படியிருக்க சமஸ்கிருத ஆண்டைத் தமிழாண்டு என்று மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டாடுகின்றனர்? அப்போது மட்டும் ஏன் சிந்திப்பதில்லை? அறிவைப் பயன்படுத்துவது இல்லை?
மரபை மீறலாமா என்கின்றனர். எது மரபு? சமஸ்கிருத ஆண்டை தமிழாண்டு என்று சொல்லி தொல்காப்பியக் காலத் தமிழன் கொண்டாடினானா?
தண்ணீர் என்பதற்கு ஜலம் என்று சொல்வதிலும் சோறு என்பதற்கு சாதம் என்று சொல்வதிலும் பெருமை கொண்ட ஏமாளித் தமிழன் ஏற்றுக்கொண்டதல்லவா இந்தத் தமிழ்ப்புத்தாண்டு?
உண்மையில் தமிழ்ப்புத்தாண்டு என்பது தை முதல் நாளே யாகும். உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்.
உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்!
உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்!
உயரிய கலைகளைக் கொடுத்தவர்கள்!
உயரிய பண்பாட்டைக் கொடுத்தவர்கள்!
அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்-கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்!. அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள்.
ஒரு நாள் என்பது என்ன?
சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.
ஒருமாதம் என்பது என்ன?
ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்-படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.
அதேபோல் ஆண்டு என்பது என்ன?
சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் (உத்ராயணம் தொடங்கும்) நாள் முதல் மீண்டும் அதே நிலை (உத்ராயணம் மீண்டும்) தொடங்கும் வரையுள்ள

கால அளவு ஓர் ஆண்டு.
அதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.
சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.
சுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும் வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.
உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்று பொருள்.
சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் பங்குனி சித்திரையில் உச்சியில் இருக்கும் பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும் பின் தென் கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.
சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு கணித்தனர்.
இவ்வாறு சூரியனின் இருப்பைக் கொண்டுதான் நாளும் கணக்கிடப்பட்டது. ஆண்டும் கணக்கிடப்பட்டது. நிலவைக் கொண்டு மாதம் கணக்கிடப்பட்டது. ஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில் கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.
தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்-டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.
தை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கில ஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியே ஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள் வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின்

இருப்பிடத்திலிருந்து வட மேற்கு நோக்கி 6000 மைல்களுக்கு அப்பால் இருப்பதால் ஏற்பட்டது.
ஏசு பிறப்பை வைத்து கணக்கீடு என்பது சரியன்று. காரணம் ஏசு பிறந்தது டிசம்பர் 25. மாறாக சனவரி 1ஆம் தேதியல்ல. 2006 ஆண்டுகள் என்பதுதான் ஏசு பிறப்பைக் குறிக்குமே தவிர சனவரி என்ற ஆண்டின் தொடக்கம் ஏசு பிறப்பை ஒட்டி எழுந்தது அல்ல.
ஆக இயற்கை நிகழ்வுகளின் சுழற்சியை அடிப்படையாக வைத்துத்தான் காலக்-கணக்கீடு என்பது உறுதியாவதோடு தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதும் உறுதியாகிறது.
மாறாக பிரபவ தொடங்கி அட்சய வரையிலுள்ள 60 ஆண்டுகள் எந்த அடிப்படையில் உருவானவை? ஏதாவது அடிப்படை உண்டா? கிருஷ்ணனுக்கும் நாரதருக்கும் 60 ஆண்டுகள் பிறந்தன என்ற நாற்றப் புராணத்தைத் தவிர வேறு ஆதாரம் இல்லையே!
அதுமட்டுமல்ல அந்த அறுபது ஆண்டு-களில் எந்தப் பெயரும் தமிழ்ப் பெயர் அல்ல. எல்லாம் சமஸ்கிருதப் பெயர். தமிழாண்டு என்றால் தமிழ்ப் பெயரல்லவா இருக்க-வேண்டும்?
தமிழர்களும் தமிழர் தலைவர்களும் அறிஞர்களும் தமிழ் வரலாற்றாளர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டிலிருந்தாவது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட ஆவன செய்ய வேண்டும்! தமிழக அரசும் அதை அதிகாரப்பூர்மாக அறிவிக்க வேண்டும்! தமிழாய்ந்த தலைவர் கலைஞர் காலத்திலே இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கலைஞர் இதை நடைமுறைப்படுத்துவார் என்று தமிழர்கள் குறிப்பாக அயல்-நாடுகளில் வாழும் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தமிழறிஞர்கள் ஒன்று சேர்ந்து 1921-இல் எடுத்த இந்த முடிவை இந்த ஆண்டாவது அரசு ஏற்று அறிவிக்க வேண்டும். அதை யாரும் எதிர்க்கப்-போவதில்லை. எதிர்ப்பவன் தமிழனாக இருக்கமாட்டான்!
சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி நமக்கு வழி காட்டுகிறார்கள்; உணர்வூட்டுகிறார்கள். கலைஞர் வார்த்தை-களில் சொல்ல வேண்டுமானால் கடல் கடந்த அந்தத் தமிழுணர்வு காலங்-கடந்தாவது நமக்கு வரவேண்டுமல்லவா?
சொந்த அப்பனுக்குப் பிறந்தேன் என்பது தானே ஒருவனுக்குப் பெருமையாக இருக்க முடியும்? அடுத்தவனுக்குப் பிறந்தால் அவமானம் அல்லவா?
தமிழன் ஆண்டு சமஸ்கிருத ஆண்டாய் இருப்பது அதுபோன்ற அவமானத்தின் இழிவின் அடையாளம் அல்லவா?
உலகிற்கு வழிகாட்டிய வாழ்ந்து காட்டிய தமிழன் அடுத்தவனுடையதை இரவல் பெறவேண்டிய இழிவு ஏன்? இழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமா? எனவே தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி தலை நிமிர்ந்து தமிழனாக வாழ்வோம்!
1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனால்தான் தமிழனுக்கு ஒரு தொடர் ஆண்டு கிடைத்துள்ளது.
அதேபோல் தமிழனுக்கு உரிய ஓர் ஆண்டுப் பிறப்பு உறுதி செய்யப்பட வேண்டும் அல்லவா? அதை உறுதி செய்த பெருமையும் வழக்கம் போல் கலைஞரையே சேரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.



தமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)

தமிழ் உலகில் தமிழ் ஆண்டு என்னும் பெயரில் வழக்கில் இருக்-கின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. அவை பற்-சக்கர முறையில் இருப்-பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு அறிவியல் தமிழ் மண் மரபு மாண்பு பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.
எனவே தமிழ் அறிஞர்கள் சான்-றோர்கள் புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்-தார்கள்.
இந்த முடிவை 18.1.1935 ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்றுகூறி திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். 193531=1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறி-ஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்-படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117 திருவள்ளுவர் நினைவு மலர் 1935)
- வ. வேம்பையன்


நன்றி: உண்மை(ஜனவரி 16-30, 2007)

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?

-தஞ்சை நாராயணசாமி

பிரபவ முதல் அக்ஷய வரை 60 வருடங்கள் சித்திரை முதல் நாளை ஆண்டு துவக்க நாளாகக் (தமிழ்ப் புத்தாண்டு) கொண்டிருக்கிறார்கள். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் இந்த நாளை விஷு புண்ணிய காலம் என்பர்.
வடதேசத்தில் பைசாகி என்றும் கேரளத்தில் விஷு என்றும் தெலுங்கு தேசத்தில் ஆண்டு தொடக்க நாளை யுகாதி என்றும் கொண்டாடுகிறார்கள். வருஷப் பிறப்பு என்பது சில தெய்வீகக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டும் அனுஷ்டிக்கப்படுகிறது.
மற்ற பண்டிகைகளைப் போன்றே புத்தாண்டு தினத்திற்கும் தெய்வ வழிபாட்டு நியதிகள் உண்டு. தெலுங்கு தேசத்தவர் வருடப் பிறப்பன்று எண்ணெய்க் குளியல் செய்து புத்தாடை உடுத்தி வடை போளி பாயசத்துடன் சமையல் செய்து பண்டிகை கொண்டாடுவர். கேரளத்தில் முதல் நாள் நடுக் கூடத்தில் அரிசி காற்கறிகள் எல்லாம் சேமித்து வைத்து குத்து விளக்குகளும் ஏற்றி விடிந்து எழுந்ததும் கண்ணை மூடிக் கொண்டே நடுக்கூடத்துக்கு வந்து முதல் முதலாகக் கண்ணாடியில் பார்ப்பார்கள். இதனால் ஆண்டு முழுவதும் யோகம் கூடும் என்பது அய்தீகம். இதை விஷுக்களி காணுதல் என்பர். கேரளாவில் நடைபெறும் இன்னொரு வழிபாடு குருவாயூரப்பனின் தரிசனம். வருடத் தொடக்கத்தில் குருவாயூரப்பன் முகத்திலேயே விழிக்க வேண்டும் எனும் ஆவலோடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குருவாயூர்க் கோயிலில் முதல் நாள் இரவில் காத்திருப்பார்கள். காலை 2 மணிக்கு அல்லது 3 மணிக்கு கதவுகள் திறந்ததும் குருவாயூரப்பனை தரிசிக்கும் வழக்கம் இன்றும் உண்டு. தமிழ் நாட்டிலும் புத்தாண்டு தினத்தில் கண்ணாடியில் முகம் பார்க்கும் வழக்கம் பல இடங்களில் உண்டு.
தமிழகத்தில் பரவலாக புத்தாண்டு தினத்தில் வீட்டை மெழுகி கோலம் செம்மண் இட்டு வாயிற்படிக்கு மஞ்சள் குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி பூஜையறையை அலங்கரித்து விளக்கேற்றி வைத்து வழிபடுவதோடு அன்று பூஜையில் புது வருடப் பஞ்சாங்கம் வாங்கி வந்து அதற்கும் குங்குமப் பொட்டு வைத்து மலர்சூடி பூஜையை முடித்துவிட்டு பெரியவர்கள் பஞ்சாங்கப் பலனை வாசிக்க மற்றவர்கள் கவனமுடன் கேட்பது வழக்கம்.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சமையலில் வேப்பம்பூ பச்சடி மாங்காய் பச்சடி வடை பருப்பு சேர்த்துப் படைத்து உண்பர். இன்பமும் துன்மும் கலந்து வருவதே வாழ்க்கை என்பதை உணர்த்தவே சமையலில் மேற்கண்ட பதார்த்தங்கள் சேர்த்துப் படைத்து உண்பது அய்தீகம்.
பஞ்சாங்கம் திதிவாரம் நட்சத்திரம் யோகம் கரணம் என்ற பஞ்ச அங்கங்கள் சேர்ந்தது பஞ்சாங்கம். இந்த அய்ந்து அங்கங்களையும் பார்த்து அறிவதால் அஷ்ட அய்சுவரியங்களும் பெருகும் என்பது சாஸ்திரங்களின் கூற்று.
திதி சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப் படுவது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடைப் பட்ட தூரமே திதி தினமும் திதி பார்ப்பதால் சம்பத்துகள் பெருகும்.
வாரம் பார்த்து அறிவதால் ஆயுள் விருத்தி ஏற்படும்.
நட்சத்திரம் நான்கு பாதங்களுடன் திகழும் நட்சத்திர நடப்பு விவரங்களை தினமும் அறிவதால் தீவினைகள் அகலும்
யோகம் சூரியனும் சந்திரனும் சுற்றிக் கொள்ளும்போது ஏற்படுவது யோகங்கள். ஒவ்வொரு யோகத்துக்கும் தனித்தனி குணங்கள் உண்டு. தினம் யோக விசேஷன் காண்பதால் பிணிகள் நீங்கும்.
கரணம் திதியில் பாதி கரணம். திதி பற்றி பஞ்சாங்கம் பார்த்தறிவதால் காரிய சித்தி உண்டாகும்.
மகத்துவம் மிக்க பஞ்ச அங்கங்களையும் அனுதினமும் வாசித்தலை முதன் முதலாகக் தொடங்கும் நோக்கில் புது வருடத்தன்று வழிபாட்டோடு பஞ்சாங்கம் வாசிப்பார்கள். இது போன்றே புத்தாண்டு தினத்தில் ஏழைகளுக்கு நீர்மோர் விசிறி தானம் செய்வதால் சுபமங்கள வாழ்வு பெறலாம். (தினகரன் அருள்)

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள். சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்பர்.
சித்திரரை மாதத்தின் முதல் நாள்தான் பிரம்மன் உலகத்தைப் படைத்தான் என்று புராணம் கூறுகிறது.
சித்திரை மாத திருதியை திதி அன்று மகாவிஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார்.
சித்திரை மாதத்தில் சுக்கில பஞ்சமியில் லட்சுமி சத்திய லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக கூறப்படுவதால் அன்று லட்சுமி பூஜை செய்வது நன்மை தரும்.
சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை பிறந்தால் என்று தேவி பாகவதம் கூறுகிறது.
சித்திரை பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பூஜையின் போது இந்திரன் சித்திரகுப்தனை வழிபடுவதாக அய்தீகம்.
சித்திரை முதல் தேதி கோயில்களில் பஞ்சாங்கம் படிப்பார்கள். திதி வாரம் நட்சத்திரம் யோகம் கரணம் என்ற அய்ந்து அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம். திதியை அறிவதால் லட்சுமியின் அருளும் வாரத்தை அறிவதால் நீண்ட ஆயுளும் நட்சத்திரத்தை அறிவதால் வினைகள் தீருவதும் யோகத்தை அறிவதால் நோயற்ற வாழ்வும் கரணத்தை அறிவதால் காரிய சித்தியும் ஏற்படும்.
(குமுதம் பக்தி ஸ்பெஷல்)

(சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினமாம். பிரபவ முதல் அக்ஷய வரை 60 வருடங்கள் தமிழ் வருடங்களாம். ஒன்று கூட தமிழில் இல்லை. எல்லாம் வட மொழியிலேயே உள்ளன. இதற்கு ஒரு கதை. நாரதன் பெண் ஆசை கொண்டு கிருஷ்ணனிடம் வந்து நீ நிறையப் பெண்களை வைத்திருக்கிறாயே எனக்கு ஒரு பெண்ணைக் கொடு என்று கேட்டானாம். நான் எந்த வீட்டில் இல்லையோ அங்கு உன் எண்ணத்தை நடத்திக் கொள் என்றானாம். நாரதன் எல்லா கோபிகைகளின் வீடுகளுக்கும் சென்று பார்த்து எல்லா வீட்டிலும் கிருஷ்ணன் இருக்க திரும்பி அவனிடமே வந்து தன் இச்சையைத் தெரிவித்தானாம். கிருஷ்ணனும் நாரதனும் சேர்ந்து வாழ்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றனராம். அவைதான் பிரபவ முதல் அக்ஷய வரையான வருடங்களாம். ஆணும் ஆணும் சேர்ந்து வாழ்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றனராம். ஓரினச் சேர்க்கையில் எய்ட்ஸ் தானே வரும். எப்படி பிள்ளைகள் பிறந்தன? நல்ல வேடிக்கை.
வேறு இடங்களில் புத்தாண்டுகள் வேறு வேறு நாட்களில்தான் உள்ளன. சித்திரை முதல் நாள் புத்தாண்டு அல்ல. தமிழர்களுக்கு புத்தாண்டு ஆரம்பம் தை முதல் நாள்தான். பார்ப்பான் அதில் தன் வேலையைக் காட்டி சித்திரை முதல் நாள் என்றும் 60 ஆண்டுகளும்
12 மாதங்களும் வடமொழியாகவே மக்கள் மனதில் திணித்து நடந்து வருகிறது.
கேரளத்தில் கண்ணாடி பார்ப்பதும் குருவாயூர் கோயிலில் முதல் நாளே சென்று காத்திருந்து குருவாயூரப்பனை வணங்குவதும் பழக்கத்தின் அடிப்படையிலேதான். தமிழ்நாட்டில் வீடுகளில் தோரணம் முதலியன கட்டி அலங்கரித்து வழிபடுவதும் பஞ்சாங்கம் தானும் படித்து மற்றவர்களுக்கும் வாசிக்க வேண்டுமாம். பஞ்சாங்கம் அய்ந்து அங்கங்களாம். திதி பார்த்தால் செல்வம் பெருகுமாம். வாரம் ஆயுள் அதிகரிக்கவும் நட்சத்திரம் தீவினைகள் தீர்க்கவும் யோகம் பிணிகள் நீங்கவும் கரணம் காரிய சித்திக்கும் படிக்க வேண்டுமாம். அதற்காகவே தினமும் பஞ்சாங்கம் படிக்கும் நோக்கில் ஆண்டின் முதல் நாளில் படித்து நலம் அடைய வேண்டுமாம். மக்களின் ஆசையைத் தணிக்க இவை உதவும் என்று பொய் சொல்லி மக்களை முட்டாள்களாகவே வைத்துவிட்டனர். மக்களும் சிந்திக்காமலே பார்ப்பான் விரித்த வலையில் வீழ்ந்து மானமும் அறிவும் அற்றவர்களாகவே இருக்கின்றனர். இந்த மூடப்பழக்கங்கள் மாறவேண்டும்.

நன்றி: விடுதலை (13.4.2007)

உலகப் புரட்சி ஒருநாள் வெடிக்கும்!

படிப்பு(தேர்வு) விடுமுறைக்காக ஊருக்குப் போயிருந்ததால் ஒரு வாரமாக பதிவு போட முடியவில்லை. நான் ஊரிலிருந்த ஏப்ரல்9-ஆம் தேதி, ஈராக் அமெரிக்கா வசம் வந்ததன் 4-ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் பற்றியும், அதற்கு எதிரான போரட்டங்கள் குறித்தும் செய்தி வந்து கொண்டிருந்தது.
பார்த்ததும், அதே நாள் நான்கு வருடங்களுக்கு முன் நினைவு வந்தது. அமெரிக்க கூலிப்படைகள் ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. சதாம் நாட்டை விட்டு வெளியேற கெடு விதிக்கிறது அமெரிக்கா! மார்ச்-20,2003-இல் தொடங்கியது அமெரிக்காவின் படையெடுப்பு. குடியிருப்புப் பகுதிகளின் மேல் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி எண்ணற்றோரைக் கொன்று குவிக்கிறது அமெரிக்கக் கூட்டுப்படைகள். போரைத் துணிவுடன் எதிர்கொள்வோம் என ஈராக் அறிவித்தது.
'மாவீரன் சதாம் வாழ்க' என்று எனது மிதிவண்டியின் முன்பகுதியில் சதாம் படத்தை ஒரு அட்டையில் ஒட்டி, கட்டிக்கொண்டு காரைக்குடியில் வலம் வந்தேன். எப்போதும் எங்கள் வீட்டின் தலைவாசலில் தந்தை பெரியாரின் படமும், மாவீரன் பிரபாகரன் படமும் இடம் பெற்றிருக்கும். அந்த நாட்களில் சதாம் படத்தையும் கணினி அச்சு எடுத்து அட்டையில் ஒட்டி வாசலில் வைத்திருந்தேன்.
உலக நாடுகளெல்லாம் வாய்மூடி மவுனம் காத்தன. வருங்கால வல்லரசு என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் இந்தியா, நிகழ்கால வல்லரசு முன் மூடிக்கொண்டிருந்தது. எவன் வந்தாலும் எதிர்த்து நிற்பேன் என்று உறுதியாய் நின்ற ஒரே காரணத்துக்காக எனக்கு சதாமை அவ்வளவு பிடித்துப் போயிற்று!
பி.எஸ்.என்.எல் செல்பேசியிலிருந்து செ.கு.செ.(SMS) அனுப்பிப் பழகாத நானே, "சதாம் பின்னாளில் பிடிக்கப்பட்டபோது, உலக பயங்கரவாதி அமெரிக்காவிற்கு ஒரு கொடூரவெற்றி - மாவீரன் சதாம் பிடிபட்டார்" என்று நிறையபேருக்கு அனுப்புமளவுக்கு கோபம் நிறைந்திருந்தது. நிலைகொள்ளாத கோபம் இருந்த நிலையில், அதற்கு ஒரு வடிகாலாய், நம்பிக்கையாய் வடித்த வரிகள் இவை! இப்போது ஆடுவோர் ஆடட்டும்.. "எங்கள் தேசத்தில் சூரியன் எங்களைக் கேட்டுத்தான் எழும்; எங்களைக் கேட்டுத்தான் விழும்" என்று இறுமாப்போடு சுற்றிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே கைகட்டி வாய்பொத்தி இன்னொரு நாட்டாமையின் கீழ் ஏவல் நாயாக நிற்கிறது. அமெரிக்க ஆட்டமெல்லாம் எம்மாத்திரம்?
"ஆனானப்பட்டவனே தானான போடுறான்; அமெரிக்காவுக்கு என்ன கதியோ?" என்ற எண்ணம்தான் கொஞ்சம் நிம்மதி அடையவைத்தது. கொஞ்சம் நீண்ட வசன கவிதைதான் படியுங்கள்!


ஏ! ஏகாதிபத்திய சிந்தனையே!
அந்த வெறி பிடித்த மந்தைகளே!

உங்கள்
நாடு பிடிக்கும் ஆசையால்
நாடோடிகளான
இனங்கள் எத்தனை?

நீங்கள்
விதைத்துவிட்டுப்
போன குண்டுகளால்
புதைந்தவர்கள்
எத்தனை கோடி?

உங்கள்
ஈனப்பசிக்கு
இரையான பெண்கள்
எத்தனை லட்சம்?

மரப்பட்டை உரிக்கும்
ரப்பர் தோட்டங்களில்
உங்கள் இடுப்புப் பட்டை
உரித்த தோல்கள்
எத்தனை நீளம்?

வழிந்த குருதிநீர்
எவ்வளவு தேறும்?
தேயிலைத் தோட்டங்களில்
உரமாகிப்போன
உடல்கள் எத்தனை?

உங்கள் இறையாண்மைக்குத்
தங்கள் இறையாண்மையை
பலி கொடுத்த
நாடுகள் எத்தனை?

உங்கள் சிகரெட் நெருப்புக்கு
பற்றி எரிந்த
பூர்வீகக் குடிகளின்
குடில்கள் எத்தனை?

உங்கள் போர்ப் பயிற்சிக்கு
சுட்டுப் பழகியதில்
சுருண்டவர்கள் எத்தனை?

நீங்கள் சோதனை நடத்திய
நாகசாகி போல்
நாசமான நகரங்கள் எத்தனை?

நீ சுதந்திரம் தந்ததாய்
முரசறைவித்த பின்
மூட்டி விட்ட போர்கள் எத்தனை?

வளச்சிக்கு என்று
வாரி வழங்கி
வழித்துச் சுருட்டிய
வளங்கள் எத்தனை?

விடுதலை என்பதை (சு)வாசித்ததாலே
நீ மூச்சை நிறுத்திய
வீரர்கள் எத்தனை?

உலகைக் காக்கிறேன்
என்று உந்தன்
உலகப் படுகொலை
எத்தனை? எத்தனை?

உலகம் முழுதும்
நீ பஞ்சாயம் பண்ண
பட்டயம் பெற்ற
நாட்டாமைக்காரனா?

என் முடிவை
மாற்றச் சொல்ல
நீ யாரடா சதிகாரன்?

என் பிள்ளைக்குப்
பெயர் வைக்க
உனக்கு ஏதடா அதிகாரம்?

எனது நாடுவிட்டு
நான் வெளியேற
கெடுவை நீ விதிப்பதா?

எல்லை தாண்டி நீ
உள்ளே நுழைந்தபின்
இனியும் நாங்கள் பொறுப்பதா?

ஆட்டிப் படைக்கும்
உனது ஆட்டம்
அடங்கும் நாள்
இனி தொலைவில்லை!
அன்று...
ஆட்டம் முடிந்து
ஓட்டம் எடுத்தால்
உதவும் கரங்கள் உனக்கில்லை!

உன் காலடித் தடங்கள்
சுட்ட நிலங்கள்
எரிமலைக் குழம்பாகும்!
நீ எங்களுக்கிட்ட
விலங்குகள் சேர்ந்து
உனக்கே விலங்காகும்!

உலகப் புரட்சி
ஒருநாள் வெடிக்கும்!
உன் உலக ஆசைக்
கழுத்தை நெரிக்கும்!!

Tuesday, April 03, 2007

'பெரியார்' ஒளிக்காட்சி

'பெரியார்' திரைப்படம் வரலாற்றுக் காவியமாக, செல்லுலாயிட் ஓவியமாக மே மாதம் 25-ஆம் தேதி வெளியாகப் போகிறது. தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருப்பினும், இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டும், அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் துணைத்தலைப்புகள்(Subtitles) இடப்பட்டும் ஒரே நாளில் உலகெங்கும் வெளியாக இருக்கிறது.

தந்தை பெரியரின் ஒளிக்காட்சிகளை வண்ணத்தில் நீங்கள் இங்கே பார்க்கலாம்.


நீங்கள் இந்தப் படக்காட்சியை பல இடங்களில் பார்த்திருக்கக்கூடும். இணைய உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வண்ணக் காட்சிதான் இது. இங்கும், ஆர்க்குட்டிலும் தோழர்கள் நிறைய பேர் இதைத் தங்களுக்குப் பிடித்த பக்கங்களாக சேமித்து வைத்துள்ளார்கள். ஆனாலும் இந்த வீடியோ காட்சி எப்படி உருவானது என்பது பலருக்குத் தெரியாது. அதை கொஞ்சம் பின்னோக்கிய பார்வையில்(reverse process) பார்ப்போமா?
இந்த படக்காட்சியை youtube அல்லது கூகிள் தரும் வசதியால் நாம் பார்த்து வருகிறோம். 'உண்மைகள் உறங்காது' என்ற குறிப்பிட்டு தோழர்......... ம், நமது பதிவர் திருவும் தங்கள் தளங்களில் ஏற்றி, உலகெங்கும் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நம் நன்றிகள் உரித்தாகுக. இப்போது நானும் ஏற்றிவிட்டேன்.
அவர்கள் இந்த படக்காட்சியை பெற்ற இடம்: www.periyar.org
periyar.org என்பது தந்தை பெரியார் பற்றிய ஒரு தெளிவான அறிமுகத்தைத் தருவதற்காக திராவிடர் கழகத்தால் உருவாக்கப்பட்ட இணையதளம். இங்கிலீஷ், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் செய்திகள் அடங்கிய இணையதளம் (bilingual website). சென்று பாருங்கள். புகைப்படத் தொகுப்பு, பெரியாரின் குரல், மேற்கண்ட வீடியோ காட்சி உள்பட இன்னும் ஏராளமான தகவல்கள் கிடைக்கும். பார்க்க சுவையாகவும் இருக்கும்.
(இந்தத் தளம் Flash கோப்போடு தொடங்கும். lt-tm-mullai, amudham ஆகிய இரண்டு எழுத்துருக்கள் அதிலேயே கிடைக்கும். தரவிறக்கம் செய்து கொள்க.)
ஆரம்ப நாட்களில் விடுதலை நாளேடு periyar.org தளத்தில்தான் பதிவேற்றப்பட்டது, 1994 முதல் இணையதளத்தில் வருகிறது விடுதலை. பின்னர் அது தனியாகப் பிரிக்கப்பட்டு viduthalai.com தளத்திற்கு மாற்றப்பட்டது. எனவே periyar.org தளத்தை முழுமையாக பெரியாரின் வாழ்க்கை, பணி, அவரது இயக்கம் பற்றிய நிரந்தரத் தளமாக மாற்றலாம் என்ற யோசனையை
முன்வைத்தபோது அதற்கான பணியை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எங்கள் பொறுப்பிலேயே வழங்கினார்கள்.
அந்தப்பணிகள் பற்றி பின்னொரு பதிவில் எழுதுவேன்,
படக்காட்சி போடவேண்டும் என்று யோசித்தபோது...
லிபர்டி கிரியேஷன்சின் முதல் படைப்பான 'புரட்சிக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்தது அய்யாவின் வண்ணப் படக்காட்சி. "தொண்டு செய்து பழுத்த பழம்; தூய தாடி மார்பில் விழும்; மண்டை சுரப்பை உலகு தொழும்; மனக்குகையில் சிறுத்தை எழும்; அவர்தாம் பெரியார். அந்த இணையற்ற புரட்சிக்காரனுக்கு எங்கள் காணிக்கை" என்று பின்னணியில் இயக்குனர் வேலு.பிரபாகரனின் குரலோடு அந்தக் காட்சி இருக்கும்! அதை சென்னைக்கு வரும் முன் காரைக்குடியில் என் வீட்டில் இருந்த போது அய்யாவின் குரலோடு இணைத்து அய்யா பேசுவது போலவே edit செய்து வைத்திருந்தேன். அதை எடுத்து periyar.org-ல் பயன்படுத்திக் கொண்டேன்.
"கடவுள் இல்லை; கடவுள் இல்லை...." என்று இதில் வரும் அய்யாவின் குரல் காரைக்குடியில் பதிவு செய்யப்பட்டது.
திராவிடர் கழக வெளியீடாக வந்து உலகெங்கும் ஒலிக்கும் இந்தக்குரலைப் பதிவு செய்தவர் தற்போதைய காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சாமி.சமதர்மம் அவர்கள். (ஒன்றிணைந்த ராமநாதபுரம்(முகவை) மாவட்டத்தின் தி.க. செயலாளராக நீண்ட காலம் பணியாற்றிய சுயமரியாதை சுடரொளி காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்களின் மூத்த மகனும் என் தந்தையாரும் அவரே!)
அறுபதுகளின் இறுதியில் அய்யா எங்கள் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் போதெல்லாம், அவரது பேச்சை (பழைய படங்களில் போலிஸ் தொலைபேசிப் பேச்சுகளைப் பதிவு செய்வார்களே, அந்த மாதிரி) ஒரு spool type recorder-ல் பதிவு செய்திருக்கிறார் என் தந்தை. [அந்த அனுபவம் பற்றி விரைவில் என் அய்யா(சாமி சமதர்மம்)விடம் கேட்டு எழுதலாம் என்றிருக்கிறேன்.] அப்படிப் பதிவு செய்யப்பட்ட பேச்சில் ஒன்றுதான் 'காரைக்குடியில் பெரியார்' என்ற ஒலிநாடா!
(விரைவில் இன்னும் பல காரைக்குடி உரைகள் வெளிவர இருக்கின்றன)
அந்தப் பேச்சில் இருந்த அய்யாவின் குரலை இந்த வீடியோ காட்சியோடு இணைத்துக் கொண்டேன்.
சரி, இந்த வீடியோ காட்சி எப்படி வந்தது? தந்தை பெரியாரின் ஒளிக்காட்சிகள் தமிழக அரசின் செய்தி, ஒளிபரப்புத் துறையினரின் கோப்புகளில் சில கிடைக்கின்றன. பல்வேறு நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்டவை அவை. 'செம்மீன்' மலையாளப் படத்தின் இயக்குனர் ராமு காரியத் அவர்கள் தந்தை பெரியாரின் ஒரு நாள் வாழ்க்கையை, அவர் உண்பதை, உறங்குவதை, நாயோடு விளையாடுவதை படமெடுத்திருக்கிறார். அது போக, ஜான் ஆபிரகாம் சில காட்சிகளை எடுத்ததாக நிழல் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்கள் ஒருமுறை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது ராமு காரியத் எடுத்தது தானா, அல்லது ஜான் வேறு எடுத்தாரா என்பது சரியாகத் தெரியவில்லை. மேலும், அய்யாவின் மருத்துவர் ஒருவர், படம் எடுத்ததாக ஒரு செய்தி உண்டு. பூண்டி குமாரசாமி என்ற பொறியாளர் ஒருவரும் அய்யாவை படம் எடுத்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது, பிலிம் சுருள்களில் எடுக்கப்பட்டதால் இப்போது போல் 'ஒரு cd copy பண்ணிக் கொடுங்க!' என்று கேட்க முடியவில்லை போலும்.
ராமு காரியத் எடுத்தது கருப்பு வெள்ளை! தமிழக அரசு எடுத்தது நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலம்! எனவே இந்தப் படத்தை எடுத்தது யாரென்பது குறித்து சரியான தகவல்கள் எனக்குத் தெரியவில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போது தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன். அப்படித் தெரிந்தபின் அது பற்றிய தகவல்களையும் ஒரு பதிவாகப் போட்டுவிடுகிறேன். அதுவரை இந்தப் படக்காட்சியைப் பார்த்து, பெரியாரை நேரில் பார்க்காத குறையைத் தீர்த்துக் கொள்ளலாம். மேலும் இந்தப் படக்காட்சி உலகம் முழுமையும் பரவிக்கிடப்பதில் எனக்கு ஒரு முக்கிய பங்குண்டு என்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் அல்லவா! நிச்சயம் இந்தக் காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் "டே பிரின்சு, பரவாயில்லடா! நீயும் உருப்படியா ஏதோ செய்யிற" என்று ஊக்கம் பெற்றுக்கொள்வேன்.

Related Posts with Thumbnails