Tuesday, February 27, 2007

சென்னை சங்கமம் -மூன்றாம் நாள்





ஒய்.எம்.சி.ஏ. திறந்தவெளி அரங்கில் "Mozart Meets India" என்ற பெயரில் சிம்பொனி இசையில் செவ்வியல் இசையை எவ்வாறு தரமுடியும் என்று ஜேசுராஜன் என்பவரின் முயற்சியில் இந்த புதிய வடிவம் அமைக்கப்பட்டிருந்தது.!

தமிழ் மய்யம் இயக்குனர் ஜெகத் கஸ்பார் ராஜ் தொடங்கி வைக்க நிகழ்ச்சி தொடங்க இருந்தது. திறந்தவெளி அரங்காதலால், கொசு தன் கடமையாற்ற வந்தது. வேறு வழியின்றி, சுற்றிலும் இருந்த குப்பைகளை கொளுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சமுதாயக் கடமையயும் ஆற்றிவிட்டோம் நண்பர்களுடன்! இரண்டு மணி நேரம் சுற்றிலும் இருந்த குப்பைகள் பற்றி எரிந்து, புகை கிளம்பி கொசுக்கள் இல்லாமல் நிம்மதியாக இசையை ரசித்தார்கள். ஒளிவெள்ளத்தில் புகை வந்து வந்து போனது ஏதோ mist effect போல இருந்தது.
வயலின், வாய்ப்பாட்டு ஆகியவற்றில் சிம்ப்பொனியை கலந்திருந்தார்கள். நன்றாகத்தானிருந்தது.

Sunday, February 25, 2007

தமிழ்நாடு - தனிநாடு

அண்மையில் ரசித்த கவிதை....

"காவேரி பிரச்சினை
தமிழக எல்லையை
கர்னாடகம் மூடியது;

பெரியாறு பிரச்சினை-
சேலம் கோட்டம் பிரச்சனை
தமிழக எல்லையை
கேரளம் மூடியது;

பாலாறு பிரச்சினை
தமிழக எல்லையை
ஆந்திராமூடியது;

தமிழ்நாடு
தனிநாடானது"

Saturday, February 24, 2007

சென்னை சங்கமம் - 2

சென்னை சங்கமத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கும் மீண்டும் நண்பர்களுடன் அய்.அய்.டி.க்கு தான் சென்றிருந்தேன். எனவே அது அப்படியே ரிப்பீட்டு!


இரண்டாம் மூன்றாம் நாள் புகைப்படங்கள் விரைவில்...

அதுக்கு முன்னாடி, மெரினாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் எடுத்த
ஒரே ஒரு குறு வீடியோ காட்சி: (சும்மா முன்மாதிரி)


Thursday, February 22, 2007

சென்னை சங்கமம் - தொடக்க விழா!




'சென்னை சங்கமம்' பற்றி சக பதிவர் (அய்.அய்.டி.யில் படிப்பவர்) ஒருவர் பதிவிட்டிருக்கிறார். அய்.அய்.டி.யில் தொடக்கவிழா நடைபெறுகிறது என அறிந்தவுடனே போய்ப் பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் திண்ணமாகிவிட்டது. அதனால், கல்லூரி விளையாட்டு விழாவின் களைப்பையும் பொருட்படுத்தாமல் கிளம்பினேன். மாற்றார் யாரையும் எளிதில் அனுமதிக்காத அய்.அய்.டி, கதவு திறந்து வரவேற்றது தமிழக முதல்வரை வரவேற்கும் விளம்பரத் தட்டியோடு!
'சமத்துவப்பொங்கல்' என்ற அறிவிப்பின், வேண்டுகோளின் மூலம் இந்த ஆண்டுப் பொங்கலை கலைஞர் தித்திப்பாக்கியதைப்போல, 'சென்னை சங்கமம்', சென்னை முழுக்க பல்வேறு இடங்களிலும், 'எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள்', அதிலும் 'ஒடுக்கப்பட்ட மக்களின், தமிழர்களின் பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம்' என்னும் செய்தியே மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. சர்வ சாதாரணமாக நுழையமுடியாத, அதிலும் தமிழர்களோ, ஒடுக்கப்பட்டோரோ நுழையமுடியாதபடி சென்னையின் முக்கியப்பகுதியில் இருந்தாலும் தனித்தீவாக இயங்கிவரும் அய்.அய்.டிக்குள் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், பொய்க்கால்குதிரை, சிலம்பாட்டம், காலில் கட்டைகட்டி ஆடுதல் என இத்தனை பேர் நுழைந்து ஊர்வலமாக தங்கள் திறனை வெளிக்காட்டியபடி செல்வதைப் பார்த்த உடனே, எது நடக்கிறதோ இல்லையோ, நிகழ்வின் நோக்கம் வெற்றி என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது.

செய்திகள் படித்திருப்பீர்கள்...

எண்ணம்: கனிமொழி
இயக்கம்: வசந்த்
ஒருங்கிணைப்பு: ஜெகத் கஸ்பார்

இதன் வெற்றிக்குப் பின்னால்:

இசையமைப்பாளர்: பால் ஜேக்கப்
முக்கிய ஒருங்கிணைப்பாளர்: குமரவேல்
இன்னும் எண்ணற்றோரின் உழைப்பு இருக்கிறது.

சரி, விழாவிற்கு வருவோம்.


நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடிய 'திருநங்கை' நர்த்தகி நட்ராஜ், "இந்தக் கலைவிழா மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள், அடித்தட்டு மக்கள் ஆகியோருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்பதற்கு நானே ஒரு அடையாளம். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட எம் போன்ற திருநங்கையருக்கும் வழங்கப்பட்டிருக்கும் நல்ல வாய்ப்பு இது" என்றார் நம்மிடம்.



நரேந்திராவின் அவின்யா கலைக்குழுவினரின் நடனம்



கே.ஏ. குணசேகரனின் குரலில் அதிர்ந்தது அரங்கம்.


மேடையில் வீடியோ பதிவாளர் உட்பட உடை வடிவமைப்பில் அப்படி ஒரு கவனம். பாருங்கள் படத்தை!



இன்னும் படங்களும் செய்தியும் அடுத்த பதிவில்....

Sunday, February 18, 2007

அசத்தப்போவது யாரு? - சன் டிவியின் தோல்வி



சனியன்று (17.2.2007) சன் தொலைக்காட்சியில் 'அசத்தப்போவது யாரு?' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. விஜய் தொலைக்காட்சியின் 'கலக்கப்போவது யாரு?' -இன் காப்பி, மறுபதிப்பு என்பது அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்தது. அத்தோடு மட்டுமல்லாமல், அதில் பங்கேற்ற அனைவரும் இந்நிகழ்ச்சியில்...!

'பிரபல தொலைக்காட்சிகளில் புதிய முகங்களால் புதிதாக சொல்லப்படும் கருத்தக்கங்கள் அவர்களிடம் நிராகரிக்கப்பட்டு, அடுத்த வாரமே புதிய தலைப்பில், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவிடும்' என்ற குற்றச்சாட்டு வெகுநாளாக நிலவிவருகிறது. இந்நிலையில்தான் இந்த நிகழ்வு!
வியாபார உலகில் இது சாதாரணமானதுதான் என்று சொல்லிவிடலாம். வெளிநாட்டு நிகழ்ச்சிகளை தமிழில் எடுத்து வெற்றியடைச் செய்வது போல்தான் இதுவும். ஆனால், சன் தொலைக்காட்சி தனக்கென வள்ர்த்து வைத்திருக்கும் பிம்பத்திற்கு இது முற்றிலும் மாறானது.

இதுநாள் வரை தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் அதிகமாக திரைப்படம் மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளையும் தயாரித்து அதன் மூலம் தனது தயாரிப்புச் செலவுகளைக்க் குறைத்துக் கொண்டு, கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தது. எப்படி என்கிறீர்களா? பின்னணியில் blue matt போட்டு எதாவது வண்ணக் கலவைகளை ஓடவிட்டு, ஒரு தொகுப்பாளரைப் பேசவிட்டு ஒரே படத்தின் காட்சிகளை சண்டைக்காட்சிகள், பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், செண்டிமென்ட் காட்சிகள் என கூறு கட்டி வைத்துவிற்றுக் கொண்டிருந்தது. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது தொடர் நாடகங்கள்.

சரி, மற்ற தொலைக்காட்சிகள் எல்லாம் ஒழுங்கானவைகளா? என்றால் இல்லைதான். அவையும் திரைப்படக்காட்சிகளை வைத்தே பிழைப்பை ஓட்டத் தயாரகத் தானிருக்கின்றன. ஆனால்ம் புதிதாக தயாரிக்கப்படும் மிக்கைத் திரைப்படங்கள் உள்பட எல்லாத் திரைப்படங்களையும் முன்கூட்டியே அதிக விலைக்கு சன் தொலைக்காட்சி வாங்கி விடுவதால் மற்றத் தொலைக்காட்சிகள் வேறு வழியின்றி புதிய நிகழ்ச்சிகள் தயாரிக்கவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும் விஜய் போன்ற தொலைக்காட்சிகளுக்கு சன் குழுமம் கொடுத்த தொல்லைகள் காரணமாக அவர்கள் தங்கள் வழக்கமான பாணியிலிருந்து மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படித் தான் ஜெயா, விஜய் உள்ளிட்ட தொலைக்காட்சிகள் விளையாட்டு உள்பட மற்ற நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தத் தொடங்கின.

இதனாலேயே, வெறும் மெகாத் தொடர் மற்றும் பெரியதிரைகளால் நிரம்பிக்கிடந்த தொலைக்காட்சிகளில் சலித்துப்போயிருந்த மக்களுக்கு மற்ற தொலைக்காட்சிகளின் மீது கவனம் திரும்பியது. இதில் விஜய்-க்கு நல்ல பெயர் கிடைக்கக் காரணம்.. அதிலிருந்த புதிய இளைஞர்களின் சிந்தனைப் பாய்ச்சல்தான். இக்காரணங்களால் மெல்ல மெல்ல தன்னுடைய பார்வையாளர்களை இழந்துவந்தது சன் தொலைக்காட்சி. இப்போது அதைப்புரிந்து கொண்டு தன்னுடைய கணிப்பில் ஏற்பட்ட தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இரண்டாவது நிகழ்வுதான் 'அசத்தப்போவது யாரு?'

இதற்குமுன்பே, இங்கிலீஷ் திரைப்படங்களின் தமிழ் மொழியாக்கத் திரைப்படங்களால் விஜய் பெற்ற கவனம் சன் குழுமத்தையும் அதை நோக்கி திரும்பவைத்தது.

இந்தப் பாடங்களிலும் அது கற்கவில்லையானால், பெருங்காய டப்பாவாகவே இருக்க வேண்டியிருக்கும். முதன்முதலில் வந்த தனியார் தொலைக்காட்சி என்பது தான் சன் டிவிக்கு பெரும் வாய்ப்பு. ஆனால் அது எத்தனை நாளைக்கு நிற்கும் என்பது முக்கியம். யாராலும் வீழ்த்த முடியாத ஆலமரம் என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஆனால் அந்த ஆலமரத்தின் கீழ் எடுக்கும் ஓய்வில் நச்சு மட்டுமே தொடர்ந்து இல்லாமல் இருக்கவேண்டும் என்பது தான் நமது கவலை.


இதில் குறிப்பிடப்ப்டவேண்டிய இன்னொரு அம்சம்:


நல்ல நிகழ்ச்சிகள் பார்க்கப்படாது; நல்ல திரைப்படங்கள் வரவேற்கப்படாது; மக்களுக்கு பிடிப்பதையே நாங்கள் தருகிறோம் என்று சொல்லும் வணிகர்களுக்கு மீண்டும் ஒரு பாடம் இது. நல்லவை எங்கிருந்தாலும் ஏற்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். என்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு.


இது சொந்தக்கதை சோகக்கதை:
தினமும் என்னைப் பாதிக்கும், யோசிக்க வைக்கும் செய்திகளை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையில், இரவு வெகுநேரமானாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். உறக்கம் கண்களைச் சுழற்றி கொஞ்சம் எழுத்துகள் பிசகும் நேரத்தில் 'சரி, சேமித்து வைத்துக்கொண்டு காலையில் வந்து எழுதுவோம்' என்ற ஆசையில் நான் எழுதி சேமித்து வைத்த (Save Drafts) சில பதிவுகளை காலையில் காணவில்லை என்றதும், அதனால் ஏற்பட்ட கோபமும் சலிப்பும் நான்கு நாட்களாக என்னை எழுதவிடாமல் செய்து வந்தது. காதலர் தினத்துக்கு எழுதிவைத்த பதிவு உட்பட சுமார் நான்கு பதிவுகள் இப்படி தொலைந்தன. போகட்டும். இனியாவது விழித்து எழுத முயற்சிக்கிறேன்.

Wednesday, February 14, 2007

காதல் பற்றிப் பேசுகிறார் தந்தை பெரியார்...

இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள், அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு; காதல் வேறு என்றும், அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்துக்காக ஏற்படுவதாகும் என்றும், அதுவும் இருவருக்கும் இயற்கையாக உண்டாகக் கூடியதாகும் என்றும், அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை என்றும், அதுவும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும் என்றும், அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டுவிட்டால், பிறகு எந்தக் காரணங்கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும், பிறகு வேறொருவரிடம் காதல் ஏற்பட்டுவிட்டால், அது காதலாயிருக்க முடியாது; அதை விபசாரமென்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக்காதல் ஏற்பட்டுவிட்டால், பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றன.

அழகைக்கொண்டோ, பருவத்தைக்கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக்கொண்டோ, கல்வியைக்கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக்கொண்டோ, பெற்றோர் பெருமையைக்கொண்டோ, தனது போக யோக்கியத்துக்குப் பயன்படுவதைக்கொண்டோ அல்லது மற்ற ஏதோவொரு திருப்தியையோ அல்லது தனக்குத் தேவையான காரியத்தையோ, குணத்தையோகொண்டோ தான் யாரும் எந்தப் பெண்ணிடமும், ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது அவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம்; அல்லது, அங்கிருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டிருந்தாலும் இருக்கலாம்; அல்லது, வேஷமாத்திரத்தால் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்.

ஆகவே ஆசையைவிட, அன்பை விட, நட்பைவிட, காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும், அந்த அன்பு, ஆசை, நட்பு ஆகியவைகூட மக்களுக்கு அறிணைப் பொருள்கள் இடத்திலும், மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவது போல்தானே ஒழிய, வேறில்லையென்றும், அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்துகொள்வதிலிருந்து, நடவடிக் கையிலிருந்து, யோக்கியதையிலிருந்து, மனப்பான்மையிலிருந்து, தேவையிலிருந்து, ஆசையிலிருந்து உண்டாவதென்றும், அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக்கூடிய தென்றும், அப்படி மாறும்போது அன்பும் நட்பும் மாற வேண்டியதுதான் என்றும், மாறக்கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம்.

ஆகவே, இதிலிருந்து நாம் யாரிடமும் அன்பும் ஆசையும் நட்பும் பொருளாகக்கொண்ட காதல் கூடாதென்றோ, அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் அன்பும், ஆசையும் நட்பும் மற்றும் எதுவானாலும், மன இன்பத்துக்கும் திருப்திக்குமேயொழிய மனத்துக்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல், அன்பும் ஆசையும் நட்பும் இருப்பதாகக் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக்காட்டு வதற்காகவே இதை எழுதுகிறோம்.

தொகுப்பு: -டி.அருள்எழிலன் நன்றி: ஆனந்தவிகடன்

Friday, February 09, 2007

"பொருத்தம் பார்த்தல்" என்னும் ஆபாச மோசடி!

இன்று எம்மவர் மத்தியிலே காதல் திருமணம், பேச்சுத் திருமணம் என்று இரு வகையான திருமணங்கள் காணப்படுகின்றன. முன்னைய காலத்தில் தமிழர்கள் காதல் திருமணம் மட்டுமே செய்து வந்தார்கள். அதுவே தமிழர் பண்பாடாகவும் இருந்தது. பின்பு தமிழினத்திற்குள் ஆரியர்களால் வர்ணாச்சிரம தர்மத்தின் பெயரில் ஜாதிகள் திணிக்கப்பட்ட பொழுது, ஜாதியைக் காப்பதற்காக பேச்சுத் திருமணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குள் பார்ப்பனர்கள் எண்ணில் அடங்காத ஆபாசங்களையும் நுளைத்துவிட்டனர். இன்று வரை ஜாதியோடு, பேச்சுத் திருமணத்தையும் எமது தமிழர்கள் கைவிடாமல் கட்டிக் காத்து வருகிறார்கள். இதில் இடையிடையே காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா? என்று பட்டிமன்றமும் நடத்துவார்கள். இந்த பேச்சுத் திருமணத்தில் பொருத்தம் பார்ப்பது முக்கியமான ஒன்றாக இருக்கும். இதைப் போல ஒரு முட்டாள்தனமான விடயம் உலகத்தில் இருக்க முடியாது. இந்தப் பொருத்தம் பார்ப்பதில் "திரிம்சாம்சம்" போடுதல் என்கின்ற ஒரு விடயம் உண்டு. இதன் மூலம் வரப் போகும் பெண்ணின் குணத்தை அறிய முடியுமாம்.

இதன்படி ஏறக்குறைய 40 வீதமான தமிழ் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் லக்கினத்தை கணித்து எந்த திரிம்சாம்சத்தில் எவ்வகையான குணங்களை அப் பெண் கொண்டிருப்பாள் என்பதை சோதிடரத்னங்கள் பின்வரும் முறையில் கணிப்பார்கள். அதனை படியுங்கள்.

ஒரு பெண்ணின் லக்கினம் மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்தால்:-
1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் பூப்படைவதற்கு முன்பே தகாத உறவு வத்திருப்பாள்.
2. சுக்கிரனின் திரிம்சாம்சமாக இருந்தால் கணவனைத் தவிர பிற ஆடவருடன் தகாத உறவு வைத்து இருப்பாள்.

3. புதனின் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் சூழ்ச்சிக் காரப் பெண்ணாக இருப்பாள்.
4. குருவின் திரிம்சாம்சத்திலே பிறந்து இருப்பாளேயானால் மிகவும் நல்லொழுக்கமுடைய பெண்ணாவாள்.
5. சனியின் திரிம்சாம்சத்தில் பிறந்து இருந்தால் ஏழ்மைமிக்க பெண்ணாக இருப்பாள்.

கன்னி, மிதுனம் லக்கினங்களுக்கு,
1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் ஒரு சூழ்ச்சிக்காரப் பெண்ணாக இருப்பாள்.
2. சுக்கிரன் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் பிற ஆடவருடன் தொடர்பு வைத்து இருப்பாள்.
3. புதன் திரிம்சாம்சமாக இருந்தால் மிக நல்லொழுக்கத்துடன் நல்ல குணங்களுடன் இருப்பாள்.
4. குரு திரிம்சாம்சமாக இருந்தால் நற்குணவதியாக இருப்பாள்.
5. சனி திரிம்சாம்சத்தில் பிறந்தால் அந்தப் பெண்ணிற்கு சிற்றின்பங்களில் நாட்டமிருக்காது.

ரிஷபம், துலாம் லக்கினமாக ஆனால்,
1. செவ்வாய் திரிம்சாம்சமானால் பெண்ணின் நடத்தை திருப்திகரமாக இருக்காது.
2. சுக்கிரன் திரிம்சாம்சமானால் நல்ல பெண்ணாகவும், படித்த பெண்ணாகவும் இருப்பாள்.
3. புதன் திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் கெட்டிக்காரப் பெண்ணாக இருப்பாள்; கலைகளில் நாட்டம் இருக்கும்.
4. குரு திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் நல்ல குணவதியாக இருப்பாள்.
5. சனி திரிம்சாம்சமாக இருந்தால் அந்தப் பெண்ணுக்கு 2-ம் திருமணம் ஆகும்.

கடக லக்கினத்திற்கு,
1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல நடத்தை உள்ள பெண்ணாக இருக்க மாட்டாள்.
2. சுக்கிரன் திரிசாம்சமும் நல்ல நடத்தை உள்ள பெண்ணாக இருக்க மாட்டாள்.
3. புதன் திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல படித்த கெட்டிக்காரப் பெண்ணாக இருப்பாள்.
4. குரு திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல பண்புள்ள பெண்ணாக இருப்பாள்.
5. சனி திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் கொடிய குணமுள்ளவளாக இருப்பாள். கணவனையே கொல்லும் அளவிற்கு அவளுக்குக் கொடூரம் இருக்கும்.

சிம்ம லக்கினமாக இருந்தால்,
1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் பேச்சு மிகுந்து இருக்கும், குணங்களில் ஆண்மைத்தனம் நிறைந்து இருக்கும்.
2. சுக்கிரனின் திரிம்சாம்சத்தில் இருந்தால் நடத்தை நன்றாக இருக்காது.
3. புதனின் ஆதிக்கத்திலிருந்தால் குணத்தில் ஆண்மைத்தனம் இருக்கும்.
4. குருவின் ஆதிக்கத்திலிருந்தால் நல்ல உயர் பதவியில் இருப்பவரைக் கைப்பிடிப்பர்.
5. சனியின் திரிம்சாம்சத்திலிருந்தால் தன் சொந்த மதத்தின்மீது பற்றுதல் குறைவாக இருக்கும்.

மகரம், கும்பம் லக்கினமாக இருந்தால்,
1. செவ்வாய் ஆதிக்கத்திலிருந்தால் மிகவும் சிறிய வேலைகளைச் செய்பவளாக இருப்பாள்.
2. சுக்கிரன் ஆதிக்கத்திலிருந்தால் நல்ல பெண்ணாக இருக்க மாட்டாள்.
3. குரு ஆதிக்கத்திலிருந்தால் நல்ல குணமுடைய பெண்ணாக இருப்பாள்.
4. சனி திரிம்சாமசத்திலிருந்தால் கீழ்த்தரமான ஆண்களுடன் சேருவாள்.
5. புதன் ஆதிக்கத்திலிருந்தால் கெட்டிக்காரப் பெண்ணாக இருப்பாள்.

தனுசு,மீனம் லக்கினமாக இருந்தால்,
1. செவ்வாயின் ஆதிக்கத்திலிருந்தால் நற்குணங்களை உடையவளாக இருப்பாள்.
2. சுக்கிரனின் ஆதிக்கத்திலிருந்தால் நடத்தை நன்றாக இருக்காது.
3. புதனின் ஆதிக்கத்திலிருந்தால் கலைத்துறையில் சிறந்து விளங்குவாள்.
4. குருவின் ஆதிக்கத்திலிருந்தால் நற்குணவதியாக இருப்பாள்.
5. சனியின் ஆதிக்கத்திலிருந்தால் சிற்றின்பத்தில் அதிக நாட்டம் காட்ட மாட்டாள்.


இதனை படிக்கின்ற பொழுது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? எனக்கு ஒன்று தோன்றுகிறது. பொருத்தம் பார்க்கும் சோதிடர்களையும் அதற்கு துணை போகின்றவர்களையும் செருப்பால் அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

-வி.சபேசன் (04.11.06)
http://www.webeelam.com/

Sunday, February 04, 2007

"நீதிமன்றப் பூனைக்கு மணி"

"....இருந்தாலும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதை இந்த நீதிமன்றம் அனுமதிக்காது". இப்படி ஒரு வசனத்தை பல்வேறு திரைப்படங்களிலும் நீதிபதிகள் பேசக் கேட்டிருக்கிறோம்.
அதையே நீதிபதிகளுக்கு திருப்பி அடித்திருக்கிறார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை விட, தங்களை எந்தவிதத்தில் உயர்ந்தவர்களாக நீதிபதிகள் கருதிக்கொள்கிறர்கள்."
"ஆகாயத்தில் இருந்து குதித்தவர்களல்ல இவர்களெல்லாம்..."
"தமிழ்நாட்டில் சில நீதிபதிகள் தங்களை அப்படி கருதிக் கொண்டிருக்கிறார்கள்"
"மக்கள் பிரதிநிதிகளின் அதிகார வரம்புக்குள் தலையிடுவதும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதும் நல்லதல்ல...." என்கிற தொணியில் சும்மா பிரித்தெடுத்துவிட்டார் போங்கள்.

முதல்வர் கலைஞரும் அதை வழிமொழியும் விதமாக, "இதுவரை பூனைக்கு மணியை யார் கட்டுவது என்றிருந்த நிலையில், அந்தப் பணியை ஆற்காட்டார் செய்துவிட்டார்" என்று பாராட்டியிருக்கிறார்.


முழுமையான பேச்சை நாளை செய்தித்தாள்களிலிருந்து எடுத்துப் போடுகிறேன். அல்லது இணைப்பைக் கொடுத்துவிடுகிறேன். சன் செய்திகளில் கேட்டவுடனேயே அந்த மகிழ்ச்சியில்
துள்ளிக்குதித்து இந்தப் பதிவைப் போடுகிறேன். அப்படி ஏன்டா துள்ளிக் குதிக்கிறாய் என்கிறீர்களா? அதற்கு முந்தைய செய்தி அப்படிப்பட்டது.

புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தனது தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் தலைக்கேறிப்போய் பின்வருமாறு பேசியிருந்தார்.
" * நீதிபதிகள் சொத்துக்கணக்கைக் காட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை எந்த சுயமரியாதையுள்ள நீதிபதியும் ஏற்க மாட்டார். தாங்களாகவே முன்வந்து கணக்குக் காட்டுவது வேறு.
*அதேபோல நீதிபதிகளின் மீதான குற்றச்சாட்டுகளை வேறொருவர் விசாரித்துத் தீர்ப்பு சொல்வது என்பதும் சுயமரியாதைக்கு இழுக்கானது. அதை ஏற்க முடியாது.
* 9-ஆவது அட்டவணை குறித்த வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஆனால் அதன் காரணமாக தமிழக அரசின் 69 % இடஒதுக்கீட்டுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை# "

தன்னைப் பிறிதொருவன் விசாரிப்பதை சுயமரியாதைக்கு இழுக்கு என்று கருதினால், அது நீதிபதிகளுக்கு மட்டும் எப்படி பொருந்தும். நமக்கு மட்டும் சுயமரியாதை இருக்காதா?
அல்லது நீதிபதிகள் எல்லாம் உத்தம புத்திரர்கள் என்று சான்றுதரப் போகிறாரா?

நீதிபதிகள் சொத்துக்கணக்கைக் காட்ட வலியுறுத்தக்கூடாது என்றால், அரசியல் வாதிகள் காட்டவேண்டும் என்று கேட்க தார்மீக உரிமை எப்படி கிடைக்கும்?

அண்மைக் காலமாகவே நம் நாட்டில் நீதிபதிகளின் போக்கு அருவருக்கத்தக்கதாகவும், தலைக்கேறிப்போனதாகவுமே இருக்கிறது. தான் தோன்றித்தனமாக தீர்ப்பு வழங்குவதும், சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகவும், தங்களை அதிகாரத்தின் உச்சமாக கருதிக்கொள்ளும் மனப்பாங்கும் தெளிவாகத் தெரிகிறது.

* சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி முகோபாத்தியாயா, ஒரு பிற்படுத்தப்பட்ட அய்.ஏ.எஸ் அதிகாரியை 'பியூன்' என்று குறிப்பிடுவது. (பியூன்கள் இல்லாமல் ஒரு நாள் நீதிமன்றத்தை நடத்திப் பார்க்கட்டுமே, அதென்ன கேவலமான பதவியா?)
* அப்படிப் பேசிய பின்னும், மாலையிலேயே நீதிமன்றத்தின் மீதுள்ள மரியாதைக்காக வந்திருந்த மற்றொரு அய்.ஏ.எஸ் அதிகாரி (சந்திரசேகரன் இ.ஆ.ப) வணக்கம் செலுத்தியமைக்கு பதிலுக்கு மரியாதைகூட செலுத்தாமல் தனது பூணூல் கொழுப்பைக் காட்டுவது.
* தான் பதவி ஓய்வு பெறுவதற்கு முதல்நாள் கூட, 9-ஆவது அட்டவணையில் இடம் பெற்ற சமூக சீர்திருத்த சட்டங்களைக் கேள்விக்குள்ளாக்கி தனது வேலையை காட்டுவது.
* இன்னும் தனது அதிகார எல்லையைத் தானே நீட்டிக்கொண்டு அதை எதிர்த்துக் கேட்கவும் துணிபவர்களை நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் பயமுறுத்துவது என்று கட்டப் பஞ்சாயத்துக்காரர்களைப் போல நடந்து கொள்வது.
* நீதிபதிகளின் பாதுகாப்புப் பணியில் இடம் பெற்றிருப்பவர்களை வேறு பணிக்கு இடம் மாற்றக்கூடாது என்று தனக்கு வேண்டுமென்பதை, யாரும் வழக்குத் தொடுக்காமல் தானாகவே வழக்காக எடுத்துக் கொள்வது. (என்றாவது ஒரு சமூக பிரச்சனையை நீதிமன்றம் இப்படி தானாக எடுத்துக்கொண்டதுண்டா?)

தங்களுக்கு வசதியாக நீதிமன்ற நடவடிக்கைகளை வைத்துக்கொள்வது, இஸ்கூல் பிள்ளைகளாட்டம் கோடை விடுமுறை விட்டுக்கொள்வது, ஆவணி அவிட்டத்திற்கு பூணூலை ரினியுவல் (புதுப்பித்துக் கொள்ள) செய்வதற்கெல்லாம் நீதிமன்றத்தை ஒத்திவைப்பது என்று செயல்படுபவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நாம் யோசித்துக்கொள்ளலாம்.

"பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு, கடும்புலி வாழும் காடு" என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு பதில் கொடுக்கச் சென்று நீதிமன்றத்திற்குள் இருந்தபடியே கர்ஜித்த தந்தை பெரியாரைப் போல## அவ்வப்போது தான் குரல்கள் வரும். அப்படி வந்த ஒரு குரலை, ஆற்காடு வீராசாமி அவர்களின் இந்த உரையை தலைமேல் வைத்தல்லவா கொண்டாட வேண்டும். என்ன சொல்லத் தோன்றுகிறது தெரியுமா?
"அட்றா சக்கை.... அட்றா சக்கை..அட்றா சக்கை...."



# 69 % இடஒதுக்கீட்டுக்கு பிரச்சனை இல்லை. ஏனென்றால் அது, திராவிடர் கழகத் தலைவர்
கி. வீரமணியின் யோசனைப்படி 31 சி பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டிருக்கிறது. 31 பி-யில் இணைக்கப்பட்ட சட்டங்களுக்கு தான் பிரச்சனை.

## கேஜி.பாலகிருஷ்ணன் ஒரு தலித் தானே என்கிறீர்களா? தனக்கு முந்தைய தலைமை நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்து உடனடியாக தன்னன அடடயாளம் காட்டிக்கொள்ள வேண்டாம் என்று இருந்திருக்கலாம். ஆனால் தங்களின் அதிகாரப் போக்கை தக்க வைக்க, அந்தஇடத்திற்குப் போனவுடன் ஆசை வருவது இயல்புதானே.
போகப்போகப் பார்ப்போம்.
அவ்வாளுக்கு பூணூல் தோளில் தொங்குகிறது. நம்மாட்கள் சிலருக்கு நரம்பே அல்லவா பூணூலாகிவிடுகிறது. அப்படியும் இருக்கலாம்.


முக்கியக்குறிப்பு ஒன்று: கோர்ட்டுகளை நீதிமன்றங்கள் என்றெல்லாம் அழைக்க முடியாது. அவை வழக்கு நடக்கும் இடமாக மட்டுமே இருக்கிறது. நீதி வழங்கும் இடமாக இல்லை. அதனால் "வழக்குமன்றம்" என்று அழைப்பது தான் சரி என்றார் தந்தை பெரியார். மிகவும் சரியே! எனவே நான் தவறாக நீதிமன்றம் என்று குறிப்பிட்டிருப்பதை வழக்குமன்றம் என்றே வாசிக்கக் கோருகிறேன்.

Friday, February 02, 2007

விடுதலையை நோக்கி எழும்பும் இசை

தமிழீழ விடுதலையை எதிர்நோக்கும் புதிய தலைமுறை இளைஞர்களின் படைப்பு. பாப் இசை வடிவத்தில்.....
சுஜித்.ஜி, பாடல் வரியில், அவரும், சந்தோஷும் இணைந்து பாடி திரயிலும் தோன்றி
வந்திருக்கிறது இப்பாடல்..

"நோவும் வரும் சாவும் வரும்
ஏதோ ஒரு நாள் விடிவும் வரும்;
கொஞ்சம் பொறு; ஓய்ந்தே இரு
நாளைய நாளில் வரமாய் வரும்."

வலிகளைச் சுமந்து வரும் வரிகளில் விடிவுக்கான ஏக்கமும் தெரிகிறது.
உலகெங்கும் இசை வடிவில் தங்கள் அடிமை சமூகத்தை விடிவுக்கான பாதையில் அழைத்துச் சென்ற இசை மேதைகள் இருந்திருக்கிறார்கள். கருப்பின பாடகர் மைக்கேல் ஜாக்சன் கூட தனது பாடல் வரிகளில் விடுதலைக் குரல்களையும், கருப்பின அடிமைத் தனத்திற்கு எதிரான குரலையும் பதிவு செய்திருக்கிறார் என்று படித்திருக்கிறேன்.
நமது தமிழகத்தில் தான் சமூக விடுதலைக்கும், தங்களுக்கும் சற்றும் தொடர்பில்லாதது போல் நடந்து கொள்ளும் இசை மேதைகளும், மக்களுக்காக பாடுவது வீணானது என்று பேசும் இசைஞானிகளும் இருக்கிறார்கள்.

புரட்சிப்பாடகர் கத்தாரைவிட, இவர்களால் சமூகத்திற்கு ஒன்றும் பயனில்லை. அப்படி எண்ணாமல், தங்கள் இசைத் திறனை விடுதலையை முன்னிறுத்தி வெளிப்படுத்தியிருக்கும் இவ்விளைஞர்கள் பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்கள்.

http://www.youtube.com/watch?v=DVe_zAEQYQc


(வலைப்பதிவில் நேரடியாக 'youtube' தந்த குறிகளை இடமுடியவில்லை.
எனவே இந்த சுட்டியைப் பயன்படுத்திக்கங்கப்பா!)

பி.எஸ்.என்.எல் காரங்களுக்கு ஒரு நற்செய்தி....

"ஏண்டா, இங்கதான இருக்க.. ஒரு மெசேஜ் அனுப்ப கூடாது"
"சரியான கஞ்சண்டா நீ, ஒரு மெசேஜ் அனுப்பினா குறைஞ்சா போயிடுவ "
இப்படி ஒரு பக்கம் கூடப் படிக்கிறவன்லாம் திட்ட.....

"மெசேஜ் பண்ற காசுக்கு உனக்கு போனே பண்ணிடலாம்" னு உண்மை நிலைமையை சொன்னாலும், "அப்ப போன் பண்ணு நான வேண்டாம்னேன்"னு சிலரு வாரிவிட

ஊரே இலவச செல்குறுஞ்செய்தி அனுப்பி மகிழ்ச்சியா இருக்க... நாம மட்டும் வர்ற செ.கு.செ.வை படிச்சிட்டு, நல்லா ரசிச்சதைக்கூட பிறருக்கு அனுப்ப முடியாமல் தவிக்கிற அவஸ்த்தைக்கு ஒரு விடிவு காலம்.

ஏற்கனவே indiatimes குடுத்த மாதிரி இந்தியா முழுமைக்குமான இலவச செ.கு.செ. சேவையை பெற உடனே போங்க! way2sms.com

"இன்பர்மேசன் இஸ் வெல்த்" பாய்ஸ் படத்தில வர்ற பண்டாரம் 'செந்தில்' சொல்றாமதிரி!

இணையத்தில இருந்த படியே செ.கு.செ.வையும் குடுத்து அசத்தலாம்.
நான் உடனே அனுப்பிச்சு பாத்துட்டென்பா!

இப்படிப்பட்ட 'ஓசி' விசயங்களை சரியாக பயன்படுத்த ஆரம்பிச்சுட்டா...
இந்த நாள். வருகிற நாள் எல்ல்லா நாளும் இனிய நாள்

Related Posts with Thumbnails